Blogger இயக்குவது.

சுங்க சாவடிகளை முழுமையாக அகற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கசாவடிகளை 30.8.2014 அன்று முற்றுகையிட்டு போராட்டம் - தி.வேல்முருகன் அறிவிப்பு

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தபட உள்ளன. சுங்க சாவடிகளை முழுமையாக அகற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கசாவடி முற்றுகை போராட்டம் 30.8.2014 அன்று நடைபெறும் என்று நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்கள்  கோயம்புத்தூரில்  26.08.2014 அன்று  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது என்பதே பகல் கொள்ளை என அனைவரும் குரல் எழுப்பி வரும் நிலையில் வரும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் சுங்கக் கட்டணம் அதிகரிக்கப்படும் என்று செய்திகள் வந்துள்ளன. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 41 இடங்களில் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இவை அனைத்திலும் கடந்த ஏப்ரல் மாதம்தான் சுங்கக் கட்டணம் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டது. அதற்குள் மீண்டும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 4,974 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளைப் பராமரிக்க வேண்டியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான். அதற்குத்தான் அந்த ஆணையமே இருக்கிறது.

சென்னை–கன்னியாகுமரி செல்ல ரூ.2 ஆயிரம் வரை சுங்கவரி செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் சுங்கவரி 10 முதல் 40 சதவீதம் வரை உயரும் என்ற அறிவிப்பு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நாட்டின் சாலையை பராமரிப்பது என்பது அரசின் அடிப்படை கடமைகளில் ஒன்று. ஆனால் அந்த அடிப்படை கடமையைக் கூட பொதுமக்களுக்கு அரசு செய்து கொடுக்காமல் யாரோ சில தனியாரிடம் ‘சாலை பராமரிப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். அவர்கள் சாலையை பராமரிக்கிறோம் என்ற பெயரில் ‘சுங்க கட்டணம்’ ஒன்றை வசூலிக்கின்றனர். சாலையே இல்லையே.. சாலை பராமரிப்பது என்றால் என்ன? சாலைகளில் எச்சரிக்கை குறியீடுகள், மின்விளக்கு வசதி, கழிப்பறை, ஆம்புலன்ஸ், அவசர தொலைபேசி, அவசர சிகிச்சை என முழுமையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருப்பதுதான் சாலை பராமரிப்பு. ஆனால் சாலையையே பராமரிப்பதும் இல்லை என்கிற போது இன்னபிற அடிப்படை வசதிகள் எங்கே செய்யப் போகிறார்கள்.. அதே நேரத்தில் வழிப்பறி கொள்ளையர்களாக ஆங்காங்கே சுங்க கட்டணத்தை வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆண்டுக்கு ஒருமுறை என்ற நிலையை மாற்றி மாதத்துக்கு ஒரு முறை சுங்கக் கட்டணத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படை வசதிகளே இல்லை.. சுங்கக் கட்டண கொள்ளையே கூடாது என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு. வெளிநாடுகளில் உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துவிட்டுதான் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். அதைப் பார்த்து அதாவது பூனையைப் பார்த்து சூடு போட்ட கதையாக நாங்களும் செய்கிறோம் பாருங்கள் என்று கூறிக் கொண்டு பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு எந்த ஒரு அடிப்படட வசதியையும் செய்து கொடுக்கவில்லை இந்த சுங்கக் கட்டண கொள்ளை கும்பல். தற்போது நடைமுறைக்கு வர இருக்கும் சுங்கக் கட்டண உயர்வால் சரக்கு வாகனங்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மிகக் கடுமையாக உயரும் அபாயம் இருக்கிறது.

ஏற்கெனவே எரிபொருள் விலை உயர்வால் கடுமையான விலை வாசி உயர்வை எதிர்கொண்டு போராடும் பொதுமக்களின் தலைமையில் கூடுதல் சுமையை சுமத்துகிறது மத்திய அரசு. பொதுவாக வாகனங்களை வாங்கும்போதே அனைத்துவிதமான வரிகளையும் செலுத்திவிட்ட பின்னரும் சாலை பராமரிப்பு என்ற பெயரில் இந்த பகல் கொள்ளைதான் எதற்கு? ஆகையால் சுங்கக் கட்டணம் என்ற வசூல் முறையை முற்றாக மத்திய அரசு ஒழித்தாக வேண்டும். இந்த பகல் கொள்ளையை மத்திய அரசு நிறுத்தாவிட்டால் சுங்க கட்டணங்களுக்கு எதிராக அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் போராட்டங்கள் பெரும் போராட்டமாக வெடிக்கும் நிலைமை உருவாகும் என எச்சரிக்கிறேன். மத்திய அரசு உடனடியாக இந்த பகல் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 30-ந் தேதி காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் அனைத்து சுங்க சாவடிகள் முன்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.


 

Read more...

கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆசீம் கான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தார்

புதன், 27 ஆகஸ்ட், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களின் முன்னிலையில் கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆசீம் கான் அவர்கள் 26.08.2014 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தார்.


Read more...

தமிழக வாழ்வுரிமை கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்,  கோயம்புத்தூரில் 26.08.2014 அன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக  தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத்  தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கலந்துகொண்டார்.மாநில பொதுச்செயலாளர் காவேரி, மாநில துணைசெயலாளர் காமராஜ், தென்மண்டல பொதுச்செயலாளர் தமிழ்நேசன், மாநில துணைச்செயலாளர் வீரான் ராவுத்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 



 

Read more...

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தி 01.09.2014 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம்

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு நேற்று 25.08.2014 கடலூரில் நடைபெற்றது. பேட்டியின் போது, ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அன்பழகன், மாவட்ட தலைவர் பஞ்சமூர்த்தி, நிர்வாகிகள் ஆனந்து, செந்தில், கமலநாதன், அருள்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் அளித்த பேட்டி :


என்எல்சி நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டு காலமாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணி செய்து வருபவர்கள் குறைந்த ஊதியத்திலேயே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். 10,600 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், இதுவரை செய்யப்படவில்லை. இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னையில் தமிழக முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 1ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் என்எல்சி தொழிலாளர் வாழ்வுரிமை சங்கத்தின் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. பணிநிரந்தரம் செய்யப்படாமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் தொழிலாளர்கள் இதில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன். 2012ம் ஆண்டுக்குள் குறைந்தது 5 ஆயிரம் பேர் பணிநிரந்தரம் செய்வதாக கூறிய நிலையில் என்எல்சி நிர்வாகம் இதுவரை ஏமாற்றி வருகிறது. தற்போது அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளது. இதற்கு தவாக முழு ஒத்துழைப்பு தரும். உண்ணாவிரத போராட்டமும் அதற்கு முழு வலு சேர்க்கும்.

என்எல்சியின் சார்பில் சுற்றுப்புற கிராம அபி விருத்தி வளர்ச்சிக்கான திட்டநிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும். என்எல்சி அனல்மின்நிலைய விரிவாக்கத்தில் ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

 











Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் கடலூரில் 24.08.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் த.ஆனந்த் வரவேற்றார், மாநில பொதுச்செயலாளர் காவேரி, மாநில தொழிற்சங்கத் தலைவர் சைதை சிவராமன், தொழிற்சங்க செயலாளர் ஜம்புலிங்கம், மாநில துணைப் பொதுச்செயலாளர் ராயநல்லூர் உ.கண்ணன், மாநில மாணவரணிச் செயலாளர் அருள்பாபு, மாநில மகளிரணிச் செயலாளர் அமராவதி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

செயல் வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


1. முல்லைப் பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த போராடி வெற்றி கண்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது,

2. தமிழக மீனவர்களின் வலைகளை அறுப்பதும், பறிமுதல் செய்வதும் போன்ற அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இலங்கை ராணுவத்தை கண்டிக்காத மத்திய அரசை வன்மையாக கண்டிப்பது,

3. கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்காத சர்க்கரை ஆலை நிர்வாதத்தை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் தலைமையில் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவது

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

விருத்தாசலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

விருத்தாசலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் 23.08.2014 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.

கூட்டத்தில் நகரச் செயலாளர் பி.ஜி.சேகர் வரவேற்றார். மாவட்டச் செயலர் வி.சின்னதுரை தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலர் கனல் உ.கண்ணன், மாநில அமைப்பு செயலாளர் மே.ப.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் மரு.வை.காவேரி சிறப்புரையாற்றினார்.

செயற்குழுக் கூட்டதில் நி
றைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. காவிரி ஆணைய தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்ததற்கும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த ஆவண செய்ததற்கும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது,

2. இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை மிரட்டியும், வலைகளை அறுத்தும், அவர்களை அச்சுறுத்தி சிறைப் பிடிக்கின்ற சிங்கள ராணுவத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை கேட்டுக்கொள்வது

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்உள்ள எஸ்.எஸ்.எம்.பொறியியல் கல்லூரியில் பன்னாட்டு மகளிர் தொழில் முனைவோர் கருத்தரங்கில் சிங்கள தொழில்முனைவோர் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம்

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

குமாரபாளையத்தில் நடைபெறும் கருத்தரங்கில் சிங்கள தொழில்முனைவோர் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம்.பொறியியல் கல்லூரியில் இன்றும் நாளையும் (22.08.2014 & 23.08.2014) பன்னாட்டு மகளிர் தொழில் முனைவோர் மாநாடு நடைபெறுகிறது. இதில் இலங்கையிலிருந்து ஏழு சிங்களப் பெண் தொழில்னைவோர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு இலங்கையில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து கருத்து தெரிவிப்பர். இது இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக சட்டசபை தீர்மானத்துக்கு எதிரானது தமிழ் அமைப்புகளின் கருத்து.

இதனால் சிங்கள தொழில்முனைவோரை அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இன்று குமாரபாளையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுச்செயலாளர் வை.காவேரி தலைமையில் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரை கைதுசெய்தனர்.


Read more...

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கேரளாவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

தமிழக அதிகாரிகளை தடுத்து தாக்க முயற்சித்த கேரளாவின் அட்டூழியத்துக்கு கடும் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள கேரளா முதலாளிகள் நடத்தும் வணிக நிறுவனங்களையும் கேரளா உயர் அதிகாரிகளின் வீடுகளையும் முற்றுகையிடுவோம்!!

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மழை அளவை குறிக்கவும் அணையின் நீர்வரத்தை ஆராயவும் செய்ய தமிழக பொதுப்பணித்துறையின் அதிகாரிகளை கேரளா வனத்துறையினர் ஒன்று திரண்டு தடுத்து மிரட்டி அனுப்பியுள்ளனர்.

கேரள வனத் துறை பகுதியான முல்லைக்கொடி, வனக்காவலை, தாண்டிக்குடி ஆகிய இடங்களில் மழை மானி பொருத்தப்பட்டுள்ளது. இங்கு வியாழக்கிழமையன்று (21.07.2014) ஒவ்வொருவாரமும் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேரில் சென்று மழை அளவு, அணையின் நீர்வரத்து ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்வது வழக்கம்தான்.

இதற்காக தமிழக அதிகாரிகள் முல்லைக்கொடிக்கு சென்ற போது கேரளா அதிகாரிகள் அவதூறாக பேசி அனுமதி மறுத்துள்ளனர். கேரளா அரசின் தலைமைச் செயலர் கொடுத்த அனுமதி கடிதத்தைக் காட்டியும் கூட கேரளா அதிகாரிகள், தமிழக அதிகாரிகளை தடுத்துள்ளனர். இதனால் படகில் தேக்கடிக்கு திரும்பிய தமிழக அதிகாரிகளை மற்றொரு படகில் விரட்டி வந்து கேரளா அதிகாரிகள் தாக்கவும் முயற்சித்துள்ளனர். அத்துடன் மீண்டும் வந்தால் கைது செய்வோம் என்று கேரளா அதிகாரிகள் எச்சரித்தும் உள்ளனர். அண்டை மாநில அதிகாரிகளின் கடமையை செய்ய விடாமல் தனது அதிகாரிகளை தூண்டிவிட்டு இப்படி அடாவடித்தனத்தில் கேரளா அரசு ஈடுபடுவது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கேரளாவும் இந்தியாவின் ஒரு மாநிலம்தான் என்பதை அங்குள்ள அரசு உணர வேண்டும். தமிழகத்தின் ஆற்று நீர் மற்றும் நில எல்லை உரிமைகளைப் பறித்து தமிழகத்துக்கு எதிராக இதுநாள் வரை அப்பாவி பொதுமக்களை தூண்டிவிட்டு வந்தது கேரளா அரசு. இப்போது கேரளா அதிகாரிகளே களத்துக்கு வந்து தமிழக அதிகாரிகளை கைது செய்வோம் என்று மிரட்டியிருப்பது தமிழர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

கேரளாவின் இந்த அத்துமீறலுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் தமிழகத்தில் உள்ள கேரளாவைச் சேர்ந்த பெருமுதலாளிகளின் நிறுவனங்களை அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் மற்றும் மனித உரிமை இயக்கங்களை ஒன்றுதிரட்டி முற்றுகையிடுவோம்! தமிழகத்தின் நதிநீர் உரிமையை மதித்து தமிழக அதிகாரிகளை கடமை செய்ய விடாமல் தடுக்கும் கேரளாவே! தமிழகத்தில் உள்ள கேரளா மாநில உயர் அதிகாரிகளின் வீடுகளை முற்றுகையிடுவோம் என்று எச்சரிக்கிறோம்! கேரளா அரசின் இந்த சட்டாம்பிள்ளைத் தனத்தை மத்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும்!  இத்தகைய அட்டூழிய நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கவே கேரளா அரசு முயற்சிக்க முற்படுகிறது என்பதை மத்திய அரசு சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே கேரளாவின் இந்த போக்கை உடனே மத்திய அரசு தடுத்து நிறுத்தி தமிழக அதிகாரிகள் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தங்களது வழக்கமான கடமையை செய்வதற்கான சூழ்நிலையை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

திட்டக்குடியில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை கைது செய்ய வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

வியாழன், 21 ஆகஸ்ட், 2014




திட்டக்குடியில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை கைது செய்ய வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம்  நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை காவல்துறையினர் கைது செய்ய வலியுறுத்தியும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.விசாரணை நடத்த வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட மாணவியின் மறுவாழ்விற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ததமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து மாநில துணை பொது செயலாளர் கனல்.உ. கண்ணன் கூறியது:

முறையான நீதி விசாரணை நடத்தாவிட்டால் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் திட்டக்குடி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.

Read more...

புலிப்பார்வை மற்றும் லைக்கா தயாரிக்கும் கத்தி திரைப்படத்தை எதிர்த்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மாணவர் அமைப்புகளின் கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பு

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

புலிப்பார்வை, கத்தி திரைப்படங்களை வெளியிடக் கூடாது! 65 இயக்கங்கள் கூட்டாக வேண்டுகோள்!!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

புலிப்பார்வை மற்றும் கத்தி திரைப்படங்களை எதிர்ப்பது ஏன்?

புலிப் பார்வை

அன்று வியட்நாம் போரின் கொடூரத்தை உலககுக்கு எடுத்துச் சொன்னது ஒரு சிறுமியின் படம்.. அதேபோல் தமிழீழ விடுதலைப் போரின் உச்ச கொடூரத்தை சர்வதேச சமூகம் முன்வைத்தது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் குறித்த புகைப்படங்கள்.

சிங்கள வல்லூறுகளிடம் உயிருடன் சிக்கி நெஞ்சப் பரப்பெங்கும் வஞ்சகத்தார் துப்பாக்கி குண்டுகளால் துளைத்த அந்தப் பிஞ்சுவின் புகைப்பட காட்சிகள் கண்டு கதறியழுது கண்ணீர் விடாத இதயம் எதுவும் இல்லை.

தற்போது பாலச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வதாக கூறும் வகையில் 
என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இதன் காட்சிகளைப் பார்க்கும் மனசாட்சி உள்ள எந்த மனிதருமே இப்படி ஒரு அப்பட்டமான இனத்துரோக சிந்தனையுடன் கூடிய படம் தமிழகத்தில் இருந்து வெளியாகிறதே? என்று கொந்தளிக்கத்தான் செய்வார்கள்.

ஏனெனில்

* இந்த படத்தின் காட்சிகள் அனைத்திலுமே பாலகன் பாலச்சந்திரன் 'சிறார் போராளியாக' சித்தரிக்கப்படுகிறார். இது உண்மைக்கு மாறானது.

* அத்தனை காட்சிகளிலுமே துப்பாக்கியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சீருடையுடனுமே பாலச்சந்திரன் 'பாத்திரம்' வலம் வருகிறது.

* உச்சகட்ட கொடூரமாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன், பாலச்சந்திரனுக்கும் சிறார்களுக்கும் ஆயுத பயிற்சி கொடுப்பதாக காட்சிகள் வருகின்றன.

இவை அனைத்துமே சிங்களத்தின் பொய்யுரைக்கு வலுச்சேர்க்கவே பயன்படும்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தொடர்பான உண்மை புகைப்படம் எதனிலும் அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கச் சீருடையுடன் ஆயுதப் போராளியாக இருந்ததே கிடையாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆளுமை செலுத்திய காலத்தில் பாலகன் பாலச்சந்திரன், அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்தார். அது தொடர்பான செய்திகளும் படங்களும் உலகத்தின் பார்வைக்கும் வந்திருக்கின்றன.

ஆனால் போர்முனையில் பாலகன் பாலச்சந்திரன் பலியானதாக காட்டி அந்தப் படுகொலையை நியாயப்படுத்தத் துடிக்கிறது 'புலிப் பார்வை' திரைப்படம். இது சிங்களப் பேரினவாதத்தின் பொய்யுரைக்கு வலு சேர்க்கிற திரைப்படம்.

பாலகன் பாலச்சந்திரன் போன்ற பிஞ்சுக் குழந்தைகளையும் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி சிங்களப் பேரினவாதம் படுகொலை செய்ததை நியாயப்படுத்துகிற இனவெறியின் உச்சகுரலே 'புலிப் பார்வை' திரைப்படம்.

இனக்கொலை புரிந்த குற்றச்சாட்டின் பேரில் சிங்களப் பேரினவாத அரசு பன்னாட்டுப் புலனாய்வுக்கு உள்ளாகியிருக்கும் நேரத்தில் சிங்களத்தைக் காப்பாற்றும் முயற்சியாக இத்திரைப்படம் வந்துள்ளது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கத்தி:

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கடந்த ஒரு மாத காலமாக ஓடிக் கொண்டிருக்கிறன.

தமிழீழ பிரச்சனையில் ஒட்டுமொத்தம தமிழகமே ஒன்று திரண்ட நிலையில், இலங்கை பேரினவாத அரசு மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் சிங்களப் பேரினவாதமும் அதன் தலைமைத்துவத்தில் இருக்கிற போர்க்குற்றவாளியான ராஜபக்சேவும் ஒட்டுமொத்த தமிழினத்தின் கொந்தளிப்பை கொச்சைப்படுத்த, திசை திருப்ப, மழுங்கடிக்க கையில் எடுத்த உத்திதான் தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானத்தை தோற்கடிக்கும் வகையில் தமிழ்த் திரை உலகத்துக்குள் பணத்தை பாய்ச்சுவது என்பது.

தமிழ்த் திரை உலகத்தில் ஐங்கரன் கருணாவை அனைவரும் அறிவர். ஆனால் அவருடன் மெல்ல மெல்ல லைக்கா என்ற நிறுவனம் இணைந்து கோடம்பாகத்தில் கால்பதித்தது. அத்துடன் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்கிறது லைக்கா நிறுவனம்.

இந்த தகவல்கள் வெளியானது முதலே லைக்கா நிறுவனத்துக்கும் ராஜபக்சே குடும்பத்துக்குமான உறவுகள் என்ன என்பது குறித்து நீண்ட பட்டியல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. லைக்கா நிறுவனமே இந்தியாவில் இல்லை என்று சொன்னபோது சென்னையிலே அதன் அலுவலகம் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக லைக்காவின் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு ஈழத் தமிழர் என்று சப்பை கட்டு கட்டப்படுகிறது. ஆமாம் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு ஈழத் தமிழர்தான். சந்தேகம் இல்லையே.

ஆனால் முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக உறவுகள் படுகொலை செய்யப்பட்ட போது நம் இனத்தின் மீது நச்சுகுண்டுகளை வீசிய அதே சிங்கள ராணுவத்தின் ஹெலிகாப்டரில் போய் இறங்கும் அளவுக்கு ராஜபக்சே கும்பலிடம் செல்வாக்கு கொண்ட இன்னொரு டக்ளஸும் கருணாவும்தான் இந்த சுபாஸ்கரன் என்பது உலகத் தமிழினம் நன்கறியும்.

முருகதாஸ், விஜய் என்ற தமிழர்கள் செய்யும் இனத்துரோகத்தை இனமானம் உள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்க முடியாது.

உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலையை நிகழ்த்திய போர்க்குற்றவாளிகளின் கரங்களில் படிந்திருப்பது நம் தொப்புள்கொடி உறவுகளின் ரத்தம் என்பதை மறந்துவிட முடியாது.. ஒரு மனிதனாக இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதப் பேரவலத்தை நிகழ்த்திய மிக மோசமாக மனித உரிமைகளை காலில்போட்டு மிதித்த போர்க்குற்றவாளியான ராஜபக்சேவுடன் யார் கரம் குலுக்கினாலும் மன்னிக்கவும் முடியாது.

இப்படி புலிப் பார்வை, கத்தி போன்ற திரைப்படங்கள் தமிழினத்தின் உளவியல் சிந்தனை மீது நடத்தப்படுகிற போரின் வெளிப்பாடே!

சிறீலங்காவை புறக்கணிப்போம், அதன் மீது பொருளாதார தடைவிதிப்போம்! என்ற முழக்கம் தமிழகத்திலும் உலகெங்கிலும் எழுந்து வரும் நிலையில் தமிழகத்துக்குள்ளேயே சிங்களம் தலை நுழைத்து தொழில், வணிகம் செய்கிற முயற்சியை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

சிங்களத்தின் உளவியல் போரை வெல்ல தமிழர்களாய் ஓரணியில் ஒன்று திரள்வோம்! தமிழீழ விடுதலையை மீட்டெடுப்போம்!

Read more...

புதுவை மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா 09.08.2014 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

புதுவை மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா 09.08.2014 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. கொடியேற்று விழாவில் தலைமை நிலைய செயலாளர் உ.கண்ணன், தொழிற்சங்க தலைவர் சைதை கோ.சிவா, புதுவை மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
















Read more...

காஸா மீதான இஸ்ரேல் இனப்படுகொலைகளைக் கண்டித்தும் இஸ்ரேலுடனான உறவுகளை இந்திய மத்திய அரசு துண்டிக்க வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்றது

காஸா மீதான இஸ்ரேல் இனப்படுகொலைகளைக் கண்டித்தும் இஸ்ரேலுடனான உறவுகளை இந்திய மத்திய அரசு துண்டிக்க வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இன்று 09.08.2014 (சனிக்கிழமை) காலை சென்னை எழும்பூர் லாங்ஸ் கார்டன் ஆதித்தனார் சாலையில் கட்சியின் மாநில பொருளாளர் அக்ரம்கான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் ஆற்றிய கண்டன உரை:

”பாலஸ் தீனத்தில் நடந்து வரும் தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள், நோயாளிகள் என அப்பாவி பொதுமக்களை இஸ்ரேல் தாக்குதல் நடத்தி கொன்று குவித்து வருகிறது. இச்சம்பவத்தை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளைத் தவிர பிற நாடுகள் கண்டித்து வருகின்றன. ஆனால் உலகின் மிகப்பெரிய நாடான இந்திய அரசு இந்த விஷயத்தில் மெளனம் சாதிப்பதைக் கண்டித்தும், அதே சமயம் ஐநா சபையில் இவ்விஷயத்தைக் கொண்டுச்சென்று பாலஸ்தீனத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முயற்ச்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் இங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்” என்றார்.


Read more...

காஸா மீதான இஸ்ரேல் இனப்படுகொலைகளைக் கண்டித்தும் இஸ்ரேலுடனான உறவுகளை இந்திய மத்திய அரசு துண்டிக்க வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சென்னையில் 09.08.2014 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

காஸா மீதான இஸ்ரேல் இனப்படுகொலைகளைக் கண்டித்தும் இஸ்ரேலுடனான உறவுகளை இந்திய மத்திய அரசு துண்டிக்க வலியுறுத்தியும் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

இடம்: லாங்ஸ் கார்டன் ரோடு, ஆதித்தனார் சிலை ஜங்ஷன்,எழும்பூர், சென்னை

நாள்:
சனிக்கிழமை (09.08.2014), காலை 10 மணி


பாலஸ்தீனத்தின் காஸா மீது கடந்த 28 நாட்களாக இஸ்ரேல் இனப்படுகொலையை நடத்தி அப்பாவி பிஞ்சுக் குழந்தைகளையும் பொதுமக்களையும் ஆயிரக்கணக்கில் பலி எடுத்திருக்கிற கொடூரம் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காஸா பகுதியை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிக்கும் வகையில் இஸ்ரேல் வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை இரவென்றும் பகலென்றும் பாராமல் தாக்குதல் நடத்தியது. சர்வதேசம் தடை செய்த அத்தனைவகையாக கொத்து குண்டுகளையும் சராமரியாக வீசி வெறியாட்டம் போட்டது இஸ்ரேல்.

புற்றுநோயை விளைவிக்கும் கிருமிகளைக் கொண்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளையும் அப்பாவி குழந்தைகள் மீது ஈவிரக்கமின்றி வீசியிருக்கிறது இஸ்ரேல். இந்த குண்டுவீச்சில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், வழக்கமான போர் பாதிப்பாக இது தெரியவில்லை.. பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்திய பெரும் யுத்தம் இது என கொந்தளித்து கூறியிருப்பதெல்லாம் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.

இதுவரை இஸ்ரேலின் தாக்குதலில் மொத்தம் 1,900 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 9 ஆயிரம் பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சம் பேர் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் உச்சகட்ட கொடுமை என்னவெனில், ஐக்கிய நாடுகள் சபை நடத்துகிற பள்ளிகளில் அகதிகளாக தஞ்சமடைந்த பொதுமக்கள் மீது திட்டமிட்டு இலக்கு வைத்து இஸ்ரேல் வெறியாட்டம் போட்ட கொடூரமும் நடந்தேறி இருக்கிறது! இத்தனைக்கும் இஸ்ரேலிடம் 17 முறை இந்த பள்ளிகளில் அகதிகள்தான் தங்கியிருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்த பின்னரும் அந்த பள்ளிகளையே இலக்கு வைத்து கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தகவலை ஊடகங்களில் கண்ணீர் கதறலுடன் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியே தெரிவிக்கிறார்.

இதன் பின்னரும் இந்தியா உட்பட உலக நாடுகள் பாலஸ்தீனத்தின் பக்கம் நிற்க தயங்குகின்றன. பெயரளவுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு தங்களது கடமைகள் முடிந்து போனதாக கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது சர்வதேசம். ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த இந்திய மத்திய அரசோ, நாடாளுமன்றத்தில் இஸ்ரேலைக் கண்டிக்க முடியாது என்கிறது. மத்திய அமைச்சர்கள் இஸ்ரேலை ஆதரிப்போம் என்று கொக்கரிக்கின்றனர். பாலஸ்தீன விடுதலைக்காக யாசர் அராபத் அவர்களை முதன் முதலாக ஆதரித்த நாடு இந்தியா. இந்தியா எப்போதும் போராடும் பாலஸ்தீனத்து மக்கள் பக்கமே நின்றிருக்கிறது. இப்போதும் ஒடுக்கப்படுகிற பாலஸ்தீன மக்களுக்காகவே இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும்.

பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுப்பதுடன், இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்கும் துணிச்சலான நடவடிக்கைகளையும் இந்திய மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அத்துடன் வெளிப்படையாக பாலஸ்தீன மக்களுக்கான குரலை பிரகடனப்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் சனிக்கிழமையன்று (09.08.14) அன்று காலை 10 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி, சாதி, சமய பேதமின்றி அனைத்து உறவுகளும், ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மனித உரிமை சக்திகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று பணிவுடன் அழைக்கிறேன்.



Read more...

இலங்கை பாதுகாப்பு துறையின் இணையதளத்தில் தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி குறித்து அவதூறாக கட்டுரை வெளியிடப்பட்டதை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

இலங்கை பாதுகாப்பு துறையின் இணையதளத்தில் வெளியான கட்டுரையில், தமிழக முதல்அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடிக்கு மீனவர் பிரச்சினை தொடர்பாக கடிதம் எழுதுவது குறித்து அவதூறான கருத்துக்களுடன் சித்திரம் வெளியிடப்பட்டதை கண்டித்து 02.08.2014 அன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.


முற்றுகை போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்  தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ். சண்முகம், வை.காவேரி, துணை பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ. வேணுகோபால், பொருளாளர் அக்ரம்கான், தலைமை நிலைய செயலாளர் கண்ணன், தொழிற் சங்க தலைவர் சைதை சிவராமன், விருகை வீரராகவன், முத்துராஜ், தேவராஜ். திருவள்ளூர் செந்தில் குமார், மகளிரணி வெள்ளையம்மாள் உள்பட ஏராளமான நிர்வாகிகள் இலங்கை அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி இலங்கை துணை தூதரகத்தையும் முற்றுகையிட முயன்ற போது  காவல்துறையினர் தடுத்தனர்.  பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 














Read more...

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை வெளியிட்ட இலங்கையைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அழைப்பு

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014




தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் தமிழக முதல்வர், ஒரு நாட்டின் முக்கிய தலைவர் என்றும் பாராமல் பெண் என்றும் பாராமல் கொச்சைப்படுத்தி விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தமிழக முதல்வர்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் வென்று 37 தொகுதிகளைக் கைப்பற்றி அகில இந்திய அளவில் 3வது பெரிய கட்சியின் தலைவராக திகழ்கிறவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களப் பேரினவாத அரசு படுகொலை செய்யும் போதும் கைது செய்து சிறைகளில் அடைக்கிற போதும் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்கிற முறையில் இந்திய மத்திய அரசின் பிரதமருக்கு கடிதம் எழுதுவது என்பது ஒரு ஜனநாயக கடமை. அத்தகைய ஜனநாயகக் கடமையாற்றி வரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் தமது அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் கட்டுரை வெளியிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் கொந்தளிக்க வைத்துள்ளது. அத்துடன் இந்திய நாட்டின் பிரதமர் அவர்களையும் இழிவுபடுத்துகிறது இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியாகி உள்ள கட்டுரை. இது ஒட்டுமொத்த இந்தியாவையே இழிவுபடுத்துவதாகும். 
 
இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக தமிழ்நாட்டு சட்டசபையில் எண்ணற்ற தீர்மானங்களை நிறைவேற்றி போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலுக்கு சிம்ம சொப்பணமாக தமிழ்நாட்டு முதலமைச்சர் அம்மா அவர்கள் இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக இழிசொற்களால் அவரை அவமதிப்பதை தமிழகம் சகித்துக் கொண்டிருக்காது. இத்தகைய அவதூறுகளை ஆபாச கட்டுரைகளை வெளியிட்டுள்ள சிங்களப் பேரினவாதி ராஜபக்சே கும்பலுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இழுத்து மூடவும் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரை கைது செய்து சிறையில் அடைக்கவும் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். 
 
இந்தியாவின் ஒரு மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை இழிவுபடுத்தி பேசுகிற இலங்கைக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் இலங்கையுடனான அனைத்து உறவுகளையும் இந்திய பேரரசு துண்டிக்க வேண்டும். டெல்லியில் உள்ள இலங்கை தூதருக்கு ஆணை அனுப்பி அவரை நேரில் வரவழைத்து எச்சரிக்க வேண்டும். இத்தகைய இழிவான கட்டுரையை வெளியிட்ட இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்துக்கு பொறுப்பான, அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை இழுத்து மூடவும் நாளை காலை (02.08.2014) 10 மணிக்கு எனது தலைமையில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் கட்சி, சாதி, மத எல்லைகளைக் கடந்து தமிழின உறவுகளாய் ஒன்று திரண்டு இலங்கை சிங்கள பேரினவாத ராஜபக்சே கும்பலுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் என்று உரிமையோடு அழைக்கிறேன்.

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP