Blogger இயக்குவது.

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 1.51 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வாழ்த்து

செவ்வாய், 30 ஜூன், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று வெளியிட்டுள அறிக்கை: 

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் அரசியல் சூழ்ச்சிகளால் திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு 1.51 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மனமார்ந்த வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் மக்களுக்கான ஒரு நல்லரசாக முன்னுதாரணம் மிக்க ஆட்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நடத்தி வருகிறார். அவரது வரலாற்று வெற்றிக்கும் சாதனைக்கும் எதிரிகளால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த சவாலையும் எதிர்கொண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக மாண்புமிகு முதல்வர் அவர்கள் களமிறங்கினார்.. அவரை மக்கள் மன்றத்தில் தேர்தலில் எதிர்கொள்ள திராணியற்ற எதிர்க்கட்சிகள் புறமுதுகிட்டு ஓடின. இன்று தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன.. மக்கள் யார் பக்கம் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.. 

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஒன்றரை லட்சத்துக்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக அரசியல் வரலாறு இதுவரை காணாத வகையில் வெற்றி வாகை சூடியுள்ளார் மாண்புமிகு முதல்வர் அவர்கள். இந்த மாபெரும் வெற்றிக்கு உழைத்திட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அனைத்து தோழமை கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு முதல்வர் அவர்கள் தமது 'நன்றி' அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல, 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு முன்னோட்டமே. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெறும்.. தமிழகத்தின் நிரந்தர முதல்வராக மாண்புமிகு முதல்வர் அவர்களே மக்கள் பணியைத் தொடருவார்.. தமிழினமும் தமிழகமும் இழந்த வாழ்வுரிமைகளை மீட்டெடுக்கவும் வென்றெடுக்கவும் மக்களுக்கான நல்லாட்சிக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் தொடர்ந்து தலைமை வகிப்பார் என்பதுதான் தமிழக மக்களின் பெருவிருப்பம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இத்தகைய சரித்திரம் பேசுகிற மகத்தான வெற்றியை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அளித்த அத்தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியலின் தேர்தல் சரித்திரத்தில் மிகப் பெரும் சாதனை வெற்றியை பெற்ற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி.வேல்முருகன்தலைவர்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

கடலூர் பகுதியில் சூறைக்காற்றினால் பாதிப்பு அடைந்துள்ள வாழைகள் மற்றும் இதர பயிர்களுக்கு குழு அமைத்து சேதங்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள்

வெள்ளி, 19 ஜூன், 2015

சூறைக்காற்றினால் பாதிப்பு அடைந்துள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து சேதங்களை கணக்கிட்டு வாழைகள் மற்றும் இதர பயிர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள்! 

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: 

''கடலூர் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (18.06.2015) இரவு வீசிய சூறைக்காற்றினால் கடலூர் அருகே மலைக்கிராமங்களான ராமாபுரம், கிழக்கு ராமாபுரம், கண்ணாரபேட்டை வழிசோதனைப்பாளையம், ஓதியடிக்குப்பம், வெள்ளக்கரை, சாத்தங்குப்பம், எம்.புதூர், எஸ்.புதூர் உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்கள் பெரும் சேதமடைந்தன. குறிப்பாக 2 அல்லது 3 மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் இந்த சூறைக்காற்றினால் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோன்று மாவட்டம் முழுவதும் திட்டக்குடி, பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

மாவட்டம் முழுவதும் முற்றிலுமாக 3 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்துள்ளது என்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இந்த வாழை மரங்களின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சேதமடைந்துள்ளது. இதேபோல், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைகாற்றுடன் பெய்த மழையால், வடக்குப்பம் மற்றும் சின்னவடவாடி கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த முருங்கை, சாமந்திப்பூ பாதிப்பு அடைந்துள்ளது. முருங்கைகள் வேரோடு சாய்ந்தன. சாமந்திப்பூக்களும் மண்ணில் சாய்ந்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர். சூறைக்காற்றினால் பாதிப்பு அடைந்துள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து சேதங்களை கணக்கிட்டு வாழைகள் மற்றும் இதர பயிர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கிட தமிழக முதல்வர் ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more...

மத்திய அரசு நடப்பாண்டில் தமிழக கரும்பு விவசாயிகளுக்கு ஒதுக்கியுள்ள 6 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை தனியார் சர்க்கரை ஆலைகளை கண்காணித்து விவசாயிகளுக்கு சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

வியாழன், 11 ஜூன், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 11.06.2015 வெளியிட்டுள்ள அறிக்கை:
’’நடப்பாண்டில் கரும்புக்கான கொள்முதல் விலையை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு ரூ6 ஆயிரம் கோடியை வட்டியில்லாத கடனாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் கடந்த ஆண்டே விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ500 கோடிக்கும் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டும் மத்திய அரசு இதேபோல் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ6 ஆயிரம் கோடியை சர்க்கரை ஆலைகளுக்கு வட்டியில்லாத கடனாக வழங்கியிருந்தது.

ஆனால் சர்க்கரை ஆலைகளோ மத்திய அரசிடம் இருந்து இந்த தொகையைப் பெற்றுக் கொண்டு தங்களது பிற தொழில் நிறுவனங்களில்தான் முதலீடு செய்து பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளை லாபம் அடித்தததே தவிர ஏழை விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்கவில்லை.
இத்தகைய தனியார் சர்க்கரை ஆலைகளின் ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற செயலால் வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்து கரும்பையும் சர்க்கரை ஆலைகளிடம் கொடுத்துவிட்டு வாங்கிய கடனை அடைக்க முடியாமல், குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல், பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் பெருந்துயரத்துக்கு கரும்பு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
இதற்காக, விவசாயிகளுக்கு நியாயமாக சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு நடப்பாண்டும் ரூ6 ஆயிரம் கோடியை 'விவசாயிகளுக்கு வழங்குவதற்காக' சர்க்கரை ஆலைகளுக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதுவும் இம்முறை வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு இந்த நிலுவைத் தொகை வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
தனியார் சர்க்கரை ஆலைகளால் வஞ்சிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த செய்திகள் ஆறுதலைத் தந்தாலும் முறையாக அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு ரூபாய் கூட நிலுவையின்றி வழங்க வேண்டியது சர்க்கரை ஆலைகளின் முதன்மையான கடமை. இம்முறையும் கடந்தாண்டுகளைப் போல தனியார் சர்க்கரை ஆலைகள் பாக்கி வைத்து விவசாயிகளை ஏமாற்றுவதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழக விவசாயிகளுக்கு இந்த நிலுவைத் தொகை முழுமையாக சென்றடைகிறதா? என்பதை மத்திய அரசு தனியார் சர்க்கரை ஆலைகளை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். இதில் தமிழக அரசும் தலையிட்டு கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை அனைத்தும் முழுமையாக சென்று சேர உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.’’

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP