மத்திய அரசு நடப்பாண்டில் தமிழக கரும்பு விவசாயிகளுக்கு ஒதுக்கியுள்ள 6 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை தனியார் சர்க்கரை ஆலைகளை கண்காணித்து விவசாயிகளுக்கு சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை
வியாழன், 11 ஜூன், 2015
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 11.06.2015 வெளியிட்டுள்ள அறிக்கை:
’’நடப்பாண்டில் கரும்புக்கான கொள்முதல் விலையை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு ரூ6 ஆயிரம் கோடியை வட்டியில்லாத கடனாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் கடந்த ஆண்டே விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ500 கோடிக்கும் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டும் மத்திய அரசு இதேபோல் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ6 ஆயிரம் கோடியை சர்க்கரை ஆலைகளுக்கு வட்டியில்லாத கடனாக வழங்கியிருந்தது.
ஆனால் சர்க்கரை ஆலைகளோ மத்திய அரசிடம் இருந்து இந்த தொகையைப் பெற்றுக் கொண்டு தங்களது பிற தொழில் நிறுவனங்களில்தான் முதலீடு செய்து பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளை லாபம் அடித்தததே தவிர ஏழை விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்கவில்லை.
இத்தகைய தனியார் சர்க்கரை ஆலைகளின் ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற செயலால் வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்து கரும்பையும் சர்க்கரை ஆலைகளிடம் கொடுத்துவிட்டு வாங்கிய கடனை அடைக்க முடியாமல், குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல், பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் பெருந்துயரத்துக்கு கரும்பு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
இதற்காக, விவசாயிகளுக்கு நியாயமாக சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு நடப்பாண்டும் ரூ6 ஆயிரம் கோடியை 'விவசாயிகளுக்கு வழங்குவதற்காக' சர்க்கரை ஆலைகளுக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதுவும் இம்முறை வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு இந்த நிலுவைத் தொகை வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
தனியார் சர்க்கரை ஆலைகளால் வஞ்சிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த செய்திகள் ஆறுதலைத் தந்தாலும் முறையாக அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு ரூபாய் கூட நிலுவையின்றி வழங்க வேண்டியது சர்க்கரை ஆலைகளின் முதன்மையான கடமை. இம்முறையும் கடந்தாண்டுகளைப் போல தனியார் சர்க்கரை ஆலைகள் பாக்கி வைத்து விவசாயிகளை ஏமாற்றுவதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழக விவசாயிகளுக்கு இந்த நிலுவைத் தொகை முழுமையாக சென்றடைகிறதா? என்பதை மத்திய அரசு தனியார் சர்க்கரை ஆலைகளை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். இதில் தமிழக அரசும் தலையிட்டு கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை அனைத்தும் முழுமையாக சென்று சேர உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.’’
0 கருத்துகள்:
கருத்துரையிடுக