Blogger இயக்குவது.

தமிழர் நீதிப் பேரணியில் உயிழிரிழந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வினோத் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி

புதன், 29 ஏப்ரல், 2015

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மற்றும் நீதி விசாரணை நடத்திட வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுப்பதற்காக தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் 28.04.2015 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழர் நீதிப் பேரணியில் எங்கள் கட்சிக் கொடியுடன் கலந்து கொண்ட சிதம்பரம் பகுதி சேர்ந்த திரு.ரவி அவர்களது மகன் திரு. வினோத் வயது-21 அவர்கள் சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்த மின் விபத்தில் மரணமடைந்தார் ஏழ்மையில் வாடும் அவரின் குடும்பத்திற்கு உதவிடும் வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்தமிழக வாழ்வுரிமை க் கட்சியின் நிறுவனத் தலைவர்  தி.வேல்முருகன் 29.04.2015 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற வினோத்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு, வினோத்தின்  குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...


Read more...

தமிழர் நீதிப் பேரணியில் ரயில்வே துறையின் உயர் மின்னழுத்த கம்பியின் மின்சாரம் தாக்கியதில் வீரச்சாவடைந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திரு.வினோத் அவர்களின் குடும்பத்தினருக்கு தி.வேல்முருகன் ஆழ்ந்த இரங்கல் - வினோத்தின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி அறிவிப்புதமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான தி.வேல்முருகன் இன்று (29.04.2015) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
ஆந்திரத்தில் இருபது ஏழைத் தமிழர்கள் மோதல் என்ற பெயரில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நேற்று (28.04.2015) சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெற்ற தமிழர் நீதிப் பேரணியில் சற்றும் எதிர்பாராமல் ஒரு தமிழ் இளைஞனின் உயிர் பறிபோன செய்தியை ஆழ்ந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிதம்பரத்தைச் சேர்ந்த வினோத் (வயது 21) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துடிப்புமிக்க செயல்வீரர். தன் தோழர்களோடு பேரணியில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னை வந்தவர் இன்று உயிரற்ற உடலாக ஊர் திரும்புகிறார். அவரையும் அவருடைய தம்பியையும் பேரணிக்கு வாழ்த்தி வழியனுப்பிய தாயும் தந்தையும் அண்ணனின் சடலத்தோடு தம்பி மட்டும் திரும்பி வருவதை எப்படித் தாங்குவர்?
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவனாகிய எனக்கும் எங்கள் இயக்கத் தோழர்களுக்கும் இது தாங்கவொண்ணாத் துயரம். எளியோனாகிய என் அழைப்பை ஏற்றுத் தமிழர் படுகொலைக்கு நீதி கேட்கும் ஒற்றைச் சிந்தனையோடு பேரணியில் பங்கு பெற்ற தோழமை இயக்கத் தலைவர்களுக்கும் செயல்வீரர்களும் எங்கள் சோகத்தைப் பகிர்ந்து நிற்பது அறிந்து ஆறுதல் கொள்கிறோம்.
வினோதின் சாவு விபத்துதான் என்றாலும் இதைத் தவிர்த்திருக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ஏப்ரல் 28பேரணிக்கு அனுமதி கேட்டு ஏப்ரல் 11ஆம் நாளே விண்ணப்பித்து விட்ட போதிலும் சென்னை மாநகரக் காவல் துறை அதிகாரிகள் கடைசிவரை இழுத்தடித்து விட்டு, ஏப்ரல் 27 இரவுதான் கிண்டி குதிரைப் பந்தயச் சங்கப் பகுதியில் பேரணி நடத்த இடம் ஒதுக்கிக் கொடுத்தார்கள்.
பல்லாயிரம் மக்கள் அந்தக் குறுகிய பகுதியில் திரண்ட போதிலும் எவ்வித ஆபத்துக் கால முன்னெச்சரிக்கை ஒழுங்கும் செய்யப்படவில்லை. ஒரு தீயணைப்பு ஊர்தியோ அவசர சிகிச்சை ஊர்தியோ எதுவும் நிறுத்தப்பட்டிருக்கவில்லை. கடுமையான நெரிசலும், காவல்துறை கெடுபிடியும் சேர்ந்து கொள்ள, நகரவோ நிற்கவோ கூட இடம் போதாமல் மின் தொடர்வண்டிப் பாதையோரத் தடுப்பைத் தாண்டி நெருக்கித் தள்ளப்பட்டவர்களில் ஒருவர்தான் வினோத். அப்போது அவர் கையிலிருந்த கொடிக் கம்பத்தை யார் மீதும் இடித்து விடாமல் உயர்த்திப்பிடித்த போது மின் கம்பியில் படப் போய், அந்தோ, உயரழுத்த மின்சாரம் அவர் உடலில் பாய்ந்து விட்டது. அரசினர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவர்கள் பெருமுயற்சி செய்தும், இன்று காலை 7 மணியளவில் வினோதின் உயிர் பிரிந்தது.
வினோதை இழந்து வாடும் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இயக்கத் தோழர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பிலும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். துயரத்தில் உடன்நின்ற தோழமை இயக்கத் தலைவர்களுக்கு நன்றி! மேலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அவரின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்தத் துயர நிகழ்வைப் பாடமாகக் கொண்டு இனிவரும் காலத்தில் காவல்துறையும் மனித உரிமைகளையும் மனித உயிர்களையும் மதித்து நடக்க வேண்டுகிறேன்.
குறிப்பு: இன்று (29.04.2015) 5 மாலை மணியளவில் சிதம்பரத்தில் உள்ள வினோத் அவர்களது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் தொடங்க இருக்கிறது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொண்டர்களும் தமிழின உணர்வாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு அவருக்கு வீர வணக்கம் செலுத்திட வேண்டுமென தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கேட்டுக்கொள்கின்றேன்.

Read more...

20 தமிழர்களைப் படுகொலை செய்த ஆந்திர அரசைக் கண்டித்தும், மத்திய அரசு நீதி விசாரணைக்கும், சி.பி.ஐ புலன் விசாரணைக்கும் உத்தரவிட வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் 28.04.2015 அன்று ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் தமிழர் நீதிப் பேரணி

திங்கள், 27 ஏப்ரல், 2015

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் தமிழர் நீதிப் பேரணி
இருபது தமிழர்களைப் படுகொலை செய்த ஆந்திர அரசைக் கண்டித்தும், மத்திய அரசு நீதி விசாரணைக்கும், சி.பி.ஐ புலன் விசாரணைக்கும் உத்தரவிட வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் தமிழர் நீதிப் பேரணி
அன்புடையீர் ,வணக்கம் 
சென்ற ஏப்ரல் 6ஆம் நாள் நள்ளிரவில், 7ஆம் நாள் அதிகாலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் வட்டம் திருப்பதி வனப்பகுதியில் இருபது ஏழைத் தமிழர்களின் உயிரைப் பறித்தது மோதல்சாவு அல்ல, பொய்மோதல் படுகொலைதான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விட்டது. கொல்லப்பட்டவர்களில் பலரையும் தமிழகத்திலிருந்து ஆந்திரக் காவல் படை கடத்திச் சென்றதற்கும், அவர்களைக் கொடிய முறையில் சித்திரதை செய்த பிறகே படுகொலை செய்ததற்கும், ஓரிடத்தில் கொன்று பிறிதோரிடத்தில் பிணங்களை வீசியதற்கும் மறுக்க முடியாத சான்றுகள் வெளிவந்து விட்டன.
“செம்மரம் வெட்டியதால் சுட்டோம், இனியும் சுடுவோம்” என்று ஆந்திர வனத்துறை அமைச்சரே இறுமாப்புடன் அறிவிக்கிறார். உயிரிழந்த ஏழைத் தமிழர்களுக்காகத் துயரம் தெரிவிக்கும் பண்பு கூட ஆந்திர அரசுக்கு இல்லை. மோதல்-சாவு நேரிடும் போதெல்லாம் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றக் கட்டளையைக் கூட ஆந்திர அரசு மதிக்க வில்லை என்பது ஆந்திர உயர் நீதிமன்றத்திலேயே வெளியாகி விட்டது.
நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு ஆந்திரப் படுகொலை குறித்து வாயே திறக்கவில்லை. ஒழுக்கம் தவறியவள் என்று ஒருத்தியைக் கல்லால் அடித்துக் கொல்ல நினைத்தவர்களிடம் “குற்றமில்லாதவன் முதல் கல்லை வீசட்டும்” என்று இயேசு கிறிஸ்து அழைத்தது போல் நாம் இப்போது அழைத்தால் கல்லெடுத்துப் போட எந்த அரசுக்கும் தகுதியில்லை. மோதல் படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து எந்த அரசும் தப்ப முடியாது. அதிலும் மோதல்-படுகொலைகளுக்குப் பேர்போன மாநிலம் ஆந்திரம். பேர்போன முதல்வர் சந்திரபாபு நாயுடு.
1) நடந்த கொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமானால், குற்றமிழைத்த காவல் படையினர் மீதும் அவர்களுக்கு ஆணையிட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் மீதும் கொலை மற்றும் சதி வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். அவர்களைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். இவ்வழக்கின் புலனாய்வை நடுவண் புலனாய்வு நிறுவனத்திடம் (சி.பி.ஐ.) ஒப்படைக்க வேண்டும்.
2) உண்மையான செம்மரக் கடத்தல் குற்றவாளிகளையும், மோதல் படுகொலை பற்றிய உண்மையையும் கண்டறிந்து வெளிப்படுத்தபொறுப்பில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
3) செம்மரக் கடத்தல் வழக்குகளில் ஆந்திரச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். மரம் வெட்ட அழைத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருக்கும் (சரியாகச் சொன்னால் காணாமலடிக்கப்பட்டிருக்கும்) நூற்றுக்கணக்கான தமிழர்களைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4) கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் இருபத்து ஐந்து இலட்சம் ரூபாய் வீதம் ஆந்திர அரசிடம் இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்காவது தமிழக அரசு வேலை கொடுக்க வேண்டும்.
5) பிழைப்புத் தேடி உயிரைப் பணயம் வைத்து மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் நிலைக்கு நிர்ப்பந்திக்கும் சமூகப் பொருளியல் காரணிகளைக் களைவதற்குத் தமிழக அரசு அவசரத் திட்டம் வகுத்துச் செயல்பட வேண்டும்.
கொலைகார ஆந்திர அரசையும், கொலைக்கு உடந்தையான இந்திய அரசையும் கண்டித்தும், மேற்கண்டக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகின்ற 28.04.2015 செவ்வாய்க் கிழமை மாலை 3மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகிலிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகை நோக்கி தமிழர் நீதிப் பேரணி நடைபெறும். தமிழக கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் இப் பேரணிக்கு சாதி மத கட்சி எல்லைகளை கடந்து தமிழர்களாய் ஆயிரமாயிரமாய் அணிதிரண்டு வருக!

அன்புடன்
தி.வேல்முருகன்
ஒருங்கிணைப்பாளர் 
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு

Read more...

தஞ்சையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

வியாழன், 23 ஏப்ரல், 2015

தஞ்சையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பாபு தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஹரிதாஸ், தெற்கு மாவட்ட செயலாளர் அப்பாக்கண்ணு முன்னிலை வகித்தனர். நகர தலைவர் அண்ணாதுரை வரவேற்றார். மாநில துணை பொது செயலாளரும், தென் மண்டல பொறுப்பாளருமான தஞ்சை தமிழ்நேசன் சிறப்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர்கள் திருவையாறு கஜேந்திரன், தஞ்சை சேகர், அம்மாப்பேட்டை தமேந்திரன், மாவட்ட நிர்வாகி சுரேஷ் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி நிர்வாகி வெங்கடேசன் நன்றி கூறினார். 
20 அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த ஆந்திர அரசை கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் மாபெரும் தமிழர் நீதி பேரணி வரும் 28ம் தேதி மாலை 3 மணிக்கு சென்னை பனகல் மாளிகையிலிருந்து தொடங்கி கிண்டி ஆளுநர் மாளிகை வரை நடக்கிறது. கொலைக்கார ஆந்திர அரசையும், கொலைக்கு உடந்தையான மத்திய அரசையும் கண்டித்து நடக்கும் பேரணியில் தஞ்சை மாவட்டத்திலிருந்து திரளாக கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read more...

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் கூட்டம்

புதன், 22 ஏப்ரல், 2015

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் எம்.அபுபக்கர் தலைமை வகித்தார். நகர நிர்வாகிகள் ருக்மான்ஹக்கீம், ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் அப்துல்கபூர், ஒன்றிய தலைவர் கௌஸ்பாட்சா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read more...

கல்லூரி, பள்ளி வாகன ஓட்டுநர்களாக குறைந்தபட்சம் 35 வயதுக்கு மேற்பட்ட, 10 ஆண்டு அனுபவமிக்கவர்களை பணியில் அமர்த்த வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் திட்டக்குடியில் ஆர்ப்பாட்டம்

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாகக் கூறி சுட்டுக்கொலை செய்யப்பட்ட 20 அப்பாவி தமிழர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், அவர்களை சுட்டுக்கொலை செய்த ஆந்திர காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும், அண்மையில் திட்டக்குடி பகுதியில் கல்லூரி வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். கல்லூரி, பள்ளி வாகன ஓட்டுநர்களாக குறைந்தபட்சம் 35 வயதுக்கு மேற்பட்ட, 10 ஆண்டு அனுபவமிக்கவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் திட்டக்குடியில் செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மங்களூர் ஒன்றியச் செயலாளர் சுரேந்தர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னதுரை, மாவட்டத் தலைவர் பாலமுருகன், மங்களூர் ஒன்றியத் தலைவர் முருகன், அமைப்புச் செயலாளர் ஆனந்தி, அமைப்பாளர் பூமாலை, நகரத் தலைவர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Read more...

தமிழர்களை மரியாதையற்ற இனமாக மத்திய அரசு பார்ப்பது கண்டனத்துக்குரியது - தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேட்டி

தமிழர்களை மரியாதையற்ற இனமாக மத்திய அரசு பார்ப்பது கண்டனத்துக்குரியது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உண்மை அறியும் குழு அறிக்கை ஒன்றை கோவையில் வெளியிட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
''ஆந்திராவில் 20 அப்பாவி தமிழர்கள் விலங்குகளை போல இழுத்து கொண்டு செல்லப்பட்டு, தலைகீழாக தொங்க வைத்து அடித்து சித்ரவதை செய்து படுமோசமாக மார்பிலும், நெஞ்சிலும் சுட்டுக்கொன்றுள்ளனர். ஆனால், மத்திய அரசு தனது கண்டனத்தை கூட பதிவு செய்யவில்லை. குறைந்த பட்சம் அனுதாபத்தை கூட தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங்களும் சி.பி.ஐ. விசாரணை தேவை என வலியுறுத்தினோம். ஆனால், அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். இறந்தவரின் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரினோம். இது எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
ஆந்திரா மாநில சிறைகளில் உள்ள 3 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஆந்திர காவல் நிலையங்கள் மற்றும் வன அலுவலகங்களில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களை விடுவிக்க வேண்டும். ஆந்திராவில் உள்ள அரசியல் கட்சியினர்களில் பல எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு செம்மரக்கடத்தலில் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அவ்வளவு ஏன் இரு முதல்வர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
அவர்களை எல்லாம் விட்டு, எதுவும் தெரியாத அப்பாவி தமிழர்கள் 20 பேரை சுட்டுக்கொன்றது எந்த வகையில் நியாயம்? ஏற்கனவே ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பின்னர் 9 பேர் செம்மரம் கடத்தியதாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இப்போது 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மொத்தம் 36 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இறுதியாக கொல்லப்பட்ட 20 பேர் மீது எந்த வழக்கும் இதுவரை பதிவாகவில்லை.
தமிர்களை இந்தியர்களாகவோ, மனிதர்களாகவோ மத்திய அரசு பார்க்கவில்லை என்பதை தான் இது காட்டுகிறது. அண்டை மாநிலங்களில் தமிழர்களை தாக்கும் போதெல்லாம் மத்திய அரசு வேடிக்கை தான் பார்க்கிறது. தமிழர்களை மரியாதையற்ற, வாழ்வுரிமை இழந்த இனமாக பார்க்கிறது. இந்தியாவில் வேறு ஏதாவது மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மனித உயிருக்கு உலக நாடுகளில் ஆபத்து ஏற்பட்டால், வெளியுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகள் செல்கின்றனர். பேச்சு நடத்துகின்றனர். மத்திய அரசு எதிர்வினையாற்றுகிறது.
ஆனால், அநியாயமாக 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மத்திய அரசு துளியும் கண்டுகொள்ளாமல், குறைந்த பட்சம் அனுதாபம் கூட தெரிவிக்காமல் இருக்கும் போக்கு கவலைக்குரியது மட்டுமல்ல கண்டனத்துக்குரியது. இதையெல்லாம் கண்டித்து வரும் ஏப்ரல் 28-ம் தேதி, தமிழர் நீதி பேரவை சார்பில், பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் பங்கேற்கும் பேரணி சென்னை பனகல் மார்க் முன்பிருந்து நடக்கவிருக்கிறது. மத்திய அரசு இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்திய நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடும்.
தமிழக அரசு மேலோட்டமாக சொல்லாமல், சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். மூத்த அமைச்சர் தலைமையில் ஒரு குழு அமைத்து ஆந்திர அரசுடன் பேசி இன்னும் ஒரு உயிர் கூட போகாமல் தடுக்க, சிறையில் உள்ள அப்பாவி தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
Read more...

கடலூர்- சிதம்பரத்திற்கு புவனகிரி வழியாக கூடுதலாக பேருந்துகளை இயக்க துரித நடவடிக்கை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மனு

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் முடிவண்ணன் மற்றும் நிர்வாகிகள் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளரிடம் கொடுத்துள்ள மனு:
இரவு நேரங்களில் கடலூர்-சிதம்பரத்திற்கு புவனகிரி வழியாக செல்ல வேண்டிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் "பர்மிட்' இருந்தும் புவனகிரியை புறக்கணித்து புறவழிச்சாலை வழியாக செல்கின்றன. இதனால் சென்னை, புதுச்சேரி சென்றுவிட்டு தங்களது கிராம பகுதிகளுக்கு செல்லும் புவனகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள 15க்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், குடும்பத்துடன் சென்று வரும் பொது மக்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இரவு 9 மணிக்கு மேல் கடலூர்- சிதம்பரத்திற்கு புவனகிரி வழியாக செல்லும் தடம் எண் 239 பஸ்களை கூடுதலாக விட்டு பொது மக்கள் மற்றும் மாணவர்களின் சிரமத்தை போக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

பெருமகனார் சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வணக்கம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிக்கை

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

பெருமகனார் சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வணக்கம்!!
தமிழர் தந்தை அய்யா சி.பா. ஆதித்தனாரின் அருந்தவப் புதல்வர் சிவந்தி ஆதித்தனாரின் 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளில் தமிழினம் அன்னாரது அரும்பணிகளை நன்றியோடு நினைவு கொள்கிறது.
கல்வி, ஆன்மீகம், அரசியல், விளையாட்டு, இலக்கியம், திரைப்பட என அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் பெருந்துணையாக இருந்தவர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை ஒலிம்பிக் அரங்கத்துக்கு சென்று சேர்த்து அங்கீகாரத்தை தமிழினத்துக்குப் பெற்றுக் கொடுத்த பெருமகனார்...
தந்தை அய்யா ஆதித்தனார் வழியில் இதழியில் துறையில் அடுத்த கட்ட பாய்ச்சலை தந்தி தொலைக்காட்சி வழியே நிகழ்த்திக் காட்டிய முன்னுதாரன பேராளர்...
நேர்மையுடனும் நெஞ்சுரத்துடன் கால்பதித்த அனைத்து துறைகளிலும் உயரிய எட்டத்தைத் தொட்டவர்.. தமிழர் தந்தை அய்யா சி.பா. ஆதித்தனார் வழியை அடியொற்றி ஈழத் தமிழர் உரிமைப் போராட்டங்களுக்கும் தமிழ்நாட்டு உரிமைப் போராட்டங்களுக்கும் உற்ற உறுதுணையாக இருந்தவர் சிவந்தி ஆதித்தனார்..
பெருமகனார் சிவந்தி ஆதித்தனாரின் 2வது ஆண்டு நினைவேந்தல் நாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமது செம்மாந்த வணக்கங்களை செலுத்துகிறது.
பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

ஆந்திராவில் 20 அப்பாவி தமிழக கூலித் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கிடவும், கொலை செய்த காவல் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மீது உயர் நீதி மன்ற நீதிபதி தலைமையில் விசாரணை செய்ய வலியுறுத்தி சார்பில் மாநில மனித உரிமை ஆணையரிடம் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மனு அளித்தார்

திங்கள், 13 ஏப்ரல், 2015

20 அப்பாவி தமிழக கூலித் தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கிடவும், மேற்படி கொடூரமாக கொலை செய்த காவல் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மீது உயர் நீதி மன்ற நீதிபதி தலைமையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து இன்னும் சட்டவிரோத காவலில் உள்ள 400-க்கும் மேற்பட்டவர்களை மீட்கவும் வேண்டி சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையரிடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் சட்ட விரோதமாக ஆந்திர சிறைகளில் வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினரோடு இன்று 13.04.2015 மனு அளித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

Read more...

நெல் மூட்டைகளில் மண்ணை கலப்படம் செய்து மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

நெல் மூட்டைகளில் மண்ணை கலப்படம் செய்து மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார்.

 தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிவகங்கை மாவட்டத்தில் தனியார் செங்கல் சூளை ஒன்றில் அரசுக்கு சொந்தமான 650 கலப்பட நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அங்காடிமங்கலத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் மர்மமான முறையில் லாரிகளில் நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டது அப்பகுதி மக்களிடத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

அந்த செங்கல் சூளையில் 40 கிலோ கொண்ட ஒரு நெல் மூட்டையில் 5 கிலோ மண்ணை அள்ளிப்போட்டு எடையை அதிகரிக்கும் மோசடி அரங்கேறிக் கொண்டிருந்தது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்தில் 650 நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு நெல் மூட்டையில் மண்ணை கொட்டி மோசடியில் ஈடுபட்டிருந்த மூவர் கைது செய்யப்பட்டனர். 

அதாவது விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை அந்த செங்கல் சூளைக்கு கொண்டு சென்று செம்மண், சவுடுமண், பச்சை செங்கற்கள் ஆகியவற்றைக் கலந்து எடையை அதிகரித்த பின்னர் அவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான சணல் சாக்குகளில் பிடித்து கப்பலூர் கிட்டங்கியில் கொண்டு சேர்த்துள்ளனர். தற்காலிக நெல் கொள்முதல் மையங்களில் இருந்து வரும் மூட்டைகளுடன் இந்த கலப்பட மூட்டைகளையும் சேர்த்துவிட்டு வியாபாரிகள் கொள்ளை லாபமடித்துள்ளனர். 

இதற்கு சில அதிகாரிகளும் உடந்தை எனக் கூறப்படுகிறது. இப்படி சாதாரண மக்கள் பயன்படுத்துகிற நெல்மூடைகளில் மண்ணைக் கொட்டி அரசை ஏமாற்றுகிற மோசடி பேர்வழிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய மோசடிகளுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்


பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP