Blogger இயக்குவது.

மதிமுக பொதுச்செயலர் வைகோ அவர்களுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச். ராஜாவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம்

ஞாயிறு, 30 நவம்பர், 2014

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச். ராஜாவுக்கு கடும் கண்டனம். தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் இன்று (30.11.2014) வெளியிட்ட அறிக்கை: 

மதிமுக பொதுச்செயலர் வைகோ அவர்களுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுப்பதா?

தமிழர் நலனுக்காக தமிழர் வாழ்வுரிமைக்காக அரை நூற்றாண்டு காலமாக போராடி வரும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ அவர்களுக்கு ஊடகங்கள் முன்னிலையில் "பிரதமர் மோடியைப் பற்றியோ உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கைப் பற்றியோ தவறாகப் பேசிவிட்டு பாதுகாப்பாக வீட்டுக்குத் திரும்பி விட முடியாது" என்று பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச். ராஜாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் இன விடுதலைக்காகப் போராடுகிற தலைவர்கள் அனைவரையும் எப்போதும் ஒருமையில் விமர்சித்துப் பேசுகிற நாலாந்தர பேச்சாளர்தான் எச். ராஜா என்பதை இந்த தமிழகம் நன்கறியும். தமிழினத்தின் தந்தை பெரியாரை, செருப்பால் அடிப்பேன் என்று திமிராகப் பேசியதும் இதே எச். ராஜாதான்... இரண்டு நாட்களுக்கு முன்பு கூட தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த நாளை தமிழகத்தில் கொண்டாட அனுமதிக்கக் கூடாது என்று தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமியுடன் சேர்ந்து கொக்கரித்ததும் இதே எச். ராஜாதான்!

பொதுக்கூட்டமானாலும் ஊடக சந்திப்புகளானாலும் விவாதக் களங்களானாலும் நா கூசாமல் பொய்யையும் புரட்டையும் அநாகரிக வார்த்தைகளையும் கொட்டி தமிழர் சுயமரியாதையை சீண்டுவதையே தன் 'வாழ்நாள்" கொள்கையாகக் கொண்டிருக்கிற எச். ராஜா, மதிமுக பொதுச்செயலர் வைகோ அவர்களைப் பார்த்து "நாவடக்கம்" தேவை என்று பேசியிருப்பது சாத்தான் வேதம் ஓதுவதாகத்தான் இருக்கிறது.

அத்துடன் "வைகோ தமது நாவை அடக்காவிட்டால் அவரது நாக்கை அடக்குவது எப்படி என்பது ஒவ்வொரு பாஜக தொண்டனுக்கும் தெரியும்" என்றும் மிரட்டியிருப்பது வைகோ அவர்கள் மீது வன்முறையை ஏவிவிடும் வகையில் பாஜக தொண்டர்களைத் தூண்டிவிடுவதாகத்தான் இருக்கிறது.

இத்தகைய கொலை மிரட்டல்களுக்கு தமிழர் வாழ்வுரிமைக்குப் போராடுகிற எவரும் அஞ்சிவிடமாட்டோம் என்பதை எச். ராஜா நினைவில் கொள்ள வேண்டும்.  தன்னுடைய இந்த போக்கை எச். ராஜா நிறுத்திக் கொள்ளாவிட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினரின் போராட்டங்களை எச். ராஜா எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Read more...

சென்னை திராவிடர் விடுதலை கழகத் தோழர் 'முழக்கம்' உமாபதி மீதுகொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறைக்குக் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடும் கண்டனம்!

வெள்ளி, 28 நவம்பர், 2014

சென்னை திராவிடர் விடுதலை கழகத் தோழர் 'முழக்கம்' உமாபதி மீதுகொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறைக்குக் கடும் கண்டனம்!
 
தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகளை உடனே கைது செய்து பணி நீக்கம் செய்க! என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (28.11.2014)
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:

சென்னை மயிலாப்பூரில் தமிழீழ விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த தமிழர்களுக்காக நினைவேந்தல் நினைவு நிகழ்ச்சி நடத்துவதற்கான பதாகைகள் வைத்ததை காவல்துறை அகற்றக் கூடாது என்று கூறிய ஒரே காரணத்துக்காக மட்டுமே திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகி தோழர் "முழக்கம்" உமாபதியை மிகக் கொடூரமாக கொலைவெறியுடன் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் இளையராஜா, கலைச்செல்வி மற்றும் காவலர் வடிவேலு ஆகியோர் தாக்குதல் நடத்தியிருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அமைதியான வழியில்- அறவழியில் தமிழக காவல்துறை எந்த ஒரு தடை உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில் இத்தகைய நிகழ்வுகளுக்கு உச்சநீதிமன்றமே அனுமதித்திருக்கும் நிலையில், தமிழர்கள் வாழும் உலகம் எங்கும் நடத்துகிற தமிழினத்துக்கான நினைவேந்தல் நிகழ்வுக்கான பதாகை வைத்ததை அகற்றுவதை எதிர்த்த ஒரே காரணத்துக்காக இவ்வளவு கொடூரமான கொலை வெறித்தாக்குதலை தமிழக காவல்துறையினர் தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையிலே நடத்தியிருப்பது தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்கவே முடியாதவே கடுமையான கண்டத்துக்குரியது.

தமிழர் வாழ்வுரிமைக்காக போராடுகிற தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் மீது இதேபோல் கத்தி திரைப்பட எதிர்ப்பு நிகழ்வுகளிலும் சென்னை மாநகர காவல்துறை மிகக் கொடூரமாக ஈவிரக்கமற்று கொலைவெறியுடன் நடந்து கொண்டது. அப்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தி ஒரு வாக்குமூலத்தை வாங்கி அப்பாவி மாணவர்கள், அவர்தம் குடும்பத்தினரை சித்திரவதை செய்து சிறையில் அடைத்தது. இதை தமிழக அரசின் கவனத்துக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்துக்கும் அன்று இதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பும் கொண்டுவந்தது. ஆனாலும் எந்த ஒரு காவல்துறை அதிகாரி மீதும் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த துணிச்சல் காரணமாக அப்போதே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தற்போது, ஒன்றுமில்லாத காரணத்துக்காக இன உணர்வாளர் என்பதற்காக மட்டுமே திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் "முழக்கம்" உமாபதியை கொலைவெறியுடன் தாக்கியிருப்பது நெஞ்சை பதற வைக்கிறது.. சமூக வலைதளங்களில் அந்த தோழர் தாக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களில் வெளியாகியிருப்பதைக் கண்டு உலகத் தமிழர்கள் பேரதிர்ச்சியும் பெருங்கொந்தளிப்பிலுமாக இருக்கின்றனர்.

முந்தைய திமுக அரசு தமிழின உணர்வாளர்களை கொடூரமாக ஒடுக்கிய அதே பாணியை இன்றைய அதிமுக அரசும் கடைபிடிக்கிறதா? என்ற கேள்வி தமிழ்ச் சமூகத்தில் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தங்களது கவனத்துக்கு நான் அறிக்கை வாயிலாக கொண்டு வந்தும் இன்னமும் அநியாயமாக கொடூரமாக தோழர் "முழக்கம்" உமாபதியை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

இந்த கொடூர தாக்குதல் குறித்து செய்தி வெளியாகிய உடனேயே தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை தமிழக அரசு பணி இடைநீக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். அப்படி தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததும் அவர்களை உடனே பணி இடை நீக்கம் செய்யாததும் கைது செய்யாததும் மிகவும் வருத்தமும் உலகத் தமிழர்களிடத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலமே உலகத் தமிழர்களுக்கு ஆதரவாக, அனுசரணையாக அரசாக தமிழக அரசு இருக்கிறது என்ற ஆறுதலை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்கும் தர முடியும் என்பதையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.

குற்றம் ஏதும் புரியாத திராவிடர் விடுதலை கழகத் தோழர் "முழக்கம்" உமாபதியை மிகக் கொடூரமாக எழுந்தே நடமாட முடியாத அளவுக்கு குரூர கொலைவெறி மனப்பான்மையுடன் தாக்கியிருக்கும் உதவி ஆய்வாளர்கள் இளையராஜா, கலைச்செல்வி மற்றும் காவலர் வடிவேலு ஆகியோர் மீது தமிழக அரசு உடனே கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவர்களை பணி இடைநீக்கம் செய்வதோடு கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல்துறையைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் மிகப் பெரிய அளவிலான கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
 
 


 
 தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் மற்றும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்றியதை எதிர்த்ததால் காவல்துறையினரின் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் சென்னை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் "முழக்கம்" உமாபதியை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னியரசு ஆகியோர் மருத்துவமனையில் இன்று (28.11.2014) சந்தித்தனர். (உடன் திராவிடர் விடுதலைக் கழக மூத்த நிர்வாகி தபசி குமரன்)

Read more...

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு காஞ்சி மக்கள் மன்றமும் இணைந்து மாவீரர் தினம் அனுசரிப்பு

தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் காஞ்சி மக்கள் மன்றமும் இணைந்து தமிழீழ மண் மீட்புப் போரிலேதங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு 27.11.2014 அன்று செங்கொடி திடலில் விளக்கேற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

காஞ்சி மக்கள் மன்றத்தின் இணைப்பாளர் மகேஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன், பிரதான பொதுச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார் தொடர்ந்து காஞ்சி மக்கள் மன்ற உறுப்பினர்களும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுப்பினர்களும் பொதுமக்களும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில் மாவீரர்களை நினைவு கூர்ந்து காஞ்சி மக்கள் மன்ற சிறுவர்களினால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதோடு நிகழ்வின் இறுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது.

Read more...

மாவீரர் நாள் கொண்டாட தமிழக முதல்வர் அவர்கள் உடனே தலையிட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

வியாழன், 27 நவம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் இன்று 26.11.2014  வெளியிட்டுள்ள அறிக்கை:
மாவீரர் நாள் நிகழ்வுகளை திட்டமிட்டே சீர்குலைக்கும் காவல்துறை அதிகாரிகள்!

தமிழக அரசுக்கும் அதிமுகவுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் சதி!

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனே தலையிட கோரிக்கை!
------------------------------------------------------------

உலகம் முழுவதும் 65 நாடுகளில் தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த போராளிகள், அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுப்பூர்வமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் தாய்த் தமிழ்நாட்டிலோ பல இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு காவல்துறையினர் வேண்டுமென்றே தடை விதித்தும் உணர்வாளர்கள் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தியிருப்பதும் பெருங்கொந்தளிப்பை உலகத் தமிழர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் வைத்திருந்த பதாகைகளை அகற்றியதுடன் அந்த இயக்கத்தின் மூத்த நிர்வாகி தோழர் உமாபதியை கொடூரமாக காவல்துறையினர் தாக்கியும் உள்ளனர்.

புதுக்கோட்டையில் ஈழ ஏதிலியர் முகாமில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற இருந்தது. அதைக் கூட இன்றைய நாளில் நடத்தக் கூடாது என்று கூறி காவல்துறை தடை விதித்துள்ளனர். இதைத் தட்டிக் கேட்ட ஏதிலியர் மீது தடியடி நடத்தப்பட்டிருப்பது வேதனை தருகிறது.

இதேபோல் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த முயன்றதற்காக நாமக்கல், திருப்பூர் என பல இடங்களிலும் தமிழின உணர்வாளர்கள் பலரும் இன்று கைது செய்யப்பட்டும் இருக்கின்றனர்.

தமிழீழ விடுதலைக்காக தங்களது உயிரை ஆகுதியாக்கி வீரமரணம் அடைந்தோருக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் எந்த ஒரு தடையும் ஒருபோதும் விதித்தது. தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்தாலும் கூட அதற்கு ஆதரவாக கருத்துகளை பேசுவதற்கு நாட்டின் உச்சநீதிமன்றமே அனுமதி அளித்திருக்கிறது.  இன்று கூட இது தொடர்பான பொதுக்கூட்டம் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறேன்.

இந்த நிலையில் தமிழீழத் தமிழர்களுக்கும் தமிழீழ விடுதலைக்கும் ஆதரவாக இருக்கும் அண்ணா திமுக பொதுச்செயலர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடனும் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு சதி நோக்கத்துடன் இத்தகைய அடக்குமுறைகளை சில இடங்களில் ஏவிவிட்டிருப்பது ஏற்புடையது அல்ல.

முந்தைய திமுக அரசு இதேபோல்தான் தமிழின உணர்வாளர்கள் மீது ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு தமிழர் மனங்களில் வெறுப்புணர்வை தானே விளைவித்துக் கொண்டது. அதேபோன்றதொரு நிலையை உருவாக்கி அதிமுக அரசுக்கு சிக்கலையும் அவப்பெயரையும் ஏற்படுத்துவதற்காக சில காவல்துறை அதிகாரிகள் இத்தகைய அத்துமீறல்களையும் தாக்குதல்களையும் வேண்டுமென்றே தீய நோக்கத்துடன் நடத்தி வருகின்றனர்.

இத்தகைய ஒடுக்குமுறைகள் உலகத் தமிழர் மனங்களில் பெரும் துயரத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உலகத் தமிழர்களுக்கு ஆதரவாக அணுசரனையாக தமிழ்நாட்டு அரசாங்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையை தகர்த்துவிடும் வகையில் இந்த ஒரு சில அதிகாரிகளின் திட்டமிட்ட நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

இதனால் இந்த பிரச்சனையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனே தலையிட்டு தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் எந்தவித அடக்குமுறை- ஒடுக்குமுறை இல்லாமல் அமைதியான முறையில் தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் நாள் நிகழ்வுகளை நடத்த உரிய அனுமதி அளித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

திருச்சி சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் அனைத்து ஈழத் தமிழ் உறவுகளையும் முகாமில் இருந்து விடுதலை செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை

சனி, 22 நவம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் இன்று 22.11.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:

திருச்சி சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் அனைத்து ஈழத் தமிழ் உறவுகளையும் முகாமில் இருந்து விடுதலை செய்க!!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் தொடர்புடைய ஈழத் தமிழர்கள் மற்றும் மலேசிய தமிழர் உட்பட 31 பேர் உள்ளனர். இதில் ஈழத் தமிழர்கள் 26 பேர் தங்களை முகாமில் இருந்து விடுவிக்க கோரியும் வழக்குளை சட்டப்படி வெளியில் இருந்து நடத்தி கொள்வதாக கூறியும் கடந்த 15–ந் தேதி முதல் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இவர்களில் 25 பேர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தங்களது உயிரைப் போக்கிக் கொள்ளவும் துணிந்திருக்கிறார்கள் எனில் அவர்களது துயரத்தையும் வலியும் மிகக் கொடூரமானது என்பதை தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் தங்களது விடுதலைக்காக போராடினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஈழ ஏதிலியர் ஒருங்கிணைப்பாளரான ஈழ நேரு, கருணைராஜா ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டு அகதிகளை போராட தூண்டியது, தற்கொலைக்கு தூண்டியது என 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

இதே இந்தியாவில் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தொடர்பே இல்லாத திபெத்திய அகதிகள் ஒரு தனிநாட்டுக்கான அத்தனை சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டின் 7 கோடி மக்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட ஈழத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதி முகாம்களோ மிக மோசமான திறந்தவெளி சிறைச்சாலைகளாகத்தான் இருக்கிறது.

திருச்சி மட்டும்ன்றி தமிழகத்தின் அனைத்து திறந்தவெளிச் சிறைச்சாலைகளான ஈழத் தமிழ் உறவுகள் இருக்கும் முகாம்களையும் இழுத்து மூடி அவர்களை சுதந்திர மனிதர்களாக நடமாட அனுமதிக்க வேண்டும். சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் அனைத்துவிதமான உரிமைகளும் மறுக்கப்பட்டு கொடுங்கைதிகளாக நடத்தப்பட்டு வரும் ஈழத் தமிழ் உறவுகளை சிறைகளில் இருந்து கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் ஈழ உறவுகளின் கோரிக்கைகளை ஏற்று அவர்களை விடுதலை செய்து அவர்களுக்கான உரிய மருத்துவ சிகிச்சைகளை அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
 

Read more...

தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 22.11.2014 அன்று நடைபெற உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அறிவிப்பு

வெள்ளி, 21 நவம்பர், 2014

தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை 22.11.2014 நடைபெற உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு–கர்நாடகா எல்லை பகுதியான ஆடு தாண்டும்பாறை என்ற மேகதாது என்ற இடத்தில் மீண்டும் அணை கட்டப்போவதாக கர்நாடகா அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை (22–ந்தேதி) நடைபெற உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு தருகிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 2 புதிய அணைகள் கட்டுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் கர்நாடக அரசு தீவிரமாக உள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளின் அருகே 4 தடுப்பணைகள் கட்டவும் கர்நாடகா திட்டமிட்டுள்ளது.

மேகேதாட்டுவில் 2 புதிய அணைகள் கட்டுவதன் மூலம் நீர்மின்நிலையம், பெங்களூரு, மைசூரு ஆகிய நகரங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம், மண்டியா மாவட்ட கரும்பு சாகுபடிக்கு தண்ணீர் ஆகிய 3 தேவைகளை நிறைவேற்ற கர்நாடகா மறைமுகமாக திட்டமிட்டுள்ளது.

தற்போது காவிரியின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தை மத்திய அரசு செயல்படுத்த வலியுறுத்தியும் காவிரி டெல்டா பாசன மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அனைத்து விவசாய சங்கங்களும் நாளை 22.11.2014 முழு அடைப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளன.

தமிழர் தம் வாழ்வுரிமைக்கான இந்த போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு தெரிவிப்பதுடன் இந்த போராட்டங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

Read more...

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ். பணிகளுக்கான மத்திய அரசின் யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான வயது வரம்பு குறைக்கப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்கடும் கண்டனம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் இன்று 21.11.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசே! ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ். தேர்வுகளுக்கான வயது வரம்பை குறைப்பதைக் கைவிடுக!!

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ். பணிகளுக்கான மத்திய அரசின் யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

பொதுவாக யு.பி.எஸ்.சி. தேர்வுகளை எஸ்.சி/ எஸ்.டி/ மாற்றுத் திறனாளிகள் 21 முதல் 35 வயது வரை எழுதலாம் என்பதுதான் இதுவரையிலான நடைமுறை. ஆனால் தற்போது 21 வயது முதல் 29 வயது வரை மட்டுமே எழுத முடியும் என்று அறிவித்திருப்பது கடும் அதிர்ச்சிக்குரியது.

இதேபோல் ஓபிசி எனப்படுகிற இதர பிற்படுத்தப்பட்டோர் இதுவரை 33 வயது வரை தேர்வு எழுதலாம் என்ற நிலை இருந்தது. இதையும் கூட 28 வயது என்று குறைத்திருக்கின்றனர். பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 30 வயது வரை எழுதலாம் என்பதை 25 வயது வரை மட்டுமே தேர்வு எழுதலாம் என்றும் மத்திய அரசு குறைத்துள்ளது.

இந்த வயது வரம்பு குறைப்பு நடைமுறை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது. இது தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். காலங்காலமாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மேம்படுவதற்கான வாய்ப்பை மறுப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.

முந்தைய மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்ட பரிந்துரையை "மாற்றத்துக்கான அரசு" என்ற முழக்கத்துடன் ஆட்சியில் இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான அரசும் கடைபிடிக்க முனைவது வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியது.

இதனால் அடித்தட்டு சமூகங்களின் இளைஞர்களின் எதிர்காலத்தையும் கனவையும் குழிதோண்டி புதைக்கும் இந்த வயது வரம்பு குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்

Read more...

தர்மபுரி, சேலத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தை பாடமாக எடுத்துக் கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச் சத்துகளை உடனே வழங்கி கண்காணிக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை

வியாழன், 20 நவம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தருமபுரி குழந்தைகள் பலியான சம்பவத்தை பாடமாக எடுத்துக் கொள்வோம்!

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச் சத்துகளை உடனே வழங்கி கண்காணிக்க வேண்டும்!

தருமபுரி மற்றும் சேலத்தில் கடந்த 4 நாட்களில் அடுத்தடுத்து மொத்தம் 11 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியையும் பெருந்துயரையும் ஏற்படுத்தியுள்ளது.

பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததற்கு ஊட்டச்சத்து குறைவு, மூச்சுத் திணறல் போன்ற காரணங்களைத்தான் மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் கூறுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

ஊட்டச்சத்து குறைபாட்டால் தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்து போகிறது என்பது பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்கள், அங்கன்வாடிகள் போன்றவை இதற்காகவே செயல்பட்டு வரும் நிலையில் இத்தகைய உயிரிழப்புகள் இவற்றின் செயல்பாடுகளை தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துகிறது.

இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி குழந்தைகள் உயிரிழப்பைத் தடுக்க ஆக்கப்பூர்வமான செயல்பட்ட மேற்கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நடவடிக்கைகளை வரவேற்கிறேன்.

அதே நேரத்தில் போர்க்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அங்கன்வாடிகள் மூலமாக அனைத்து கர்ப்பிணி தாய்மார்களின் உடல்நலன் குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களில் இனியும் இதுபோன்ற அசாதாரண சம்பவங்கள் நிகழ்ந்துவிடாமல் 'வரும் முன் காப்போம்" என்ற உறுதியுடன் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய தருணம் என்பதை நினைவில் கொள்வோம்.

Read more...

இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற உள்ள சார்க் மற்றும் ஆசியான் நாடுகளின் ராணுவ தளபதிகள் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது - தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்கோரிக்கை

புதன், 19 நவம்பர், 2014

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் இன்று 19.11.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:

தூக்கு மேடையில் நிற்கும் 5 மீனவர்கள் விடுதலையாகி தமிழகம் வரும் வரை இலங்கையில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது!

இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் 27ந் தேதி முதல் 29-ந் தேதி வரை சார்க் மற்றும் ஆசியான் நாடுகளின் ராணுவ தளபதிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவின் ராணுவ தளபதியும் பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கால் நூற்றாண்டுகாலமாக இந்தியாவின் குடிமக்களான 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைப் படுகொலை செய்து வருகிறது சிங்களப் பேரினவாத அரசு. தற்போதும் தமிழ்நாட்டு மீனவர்களை சிறைபிடிப்பதும் அவர்களின் வாழ்வாதாரமான படகுகளை பிடித்து வைப்பதுமான அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது.

அத்துடன் பொய்க்குற்றச்சாட்டின் கீழ் 5 அப்பாவி மீனவர்களை 3 ஆண்டுகாலம் சிறையில் அடைத்து தூக்கு தண்டனை விதித்து 'கருணை' காட்டுவதாக இனக் கொலையாளி ராஜபக்சே கூறுகிறான்.

ஆனால் வாக்குறுதி அளித்தபடி 5 அப்பாவி தமிழக மீனவர்களை இன்னமும் இலங்கை அரசு விடுதலை செய்யவில்லை. மாறாக இலங்கையில் உள்ள அமைச்சர்கள், தமிழக மீனவர்களின் குடும்பங்களை தொலைபேசியில் அழைத்து மேல்முறையீட்டு மனுவை வாபஸ் வாங்க வேண்டும் என்று மிரட்டுகிறார்கள் என்ற செய்தியும் வந்துள்ளது.

5 மீனவர்களுக்கு ராஜபக்சேவின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை நீதித்துறை தூக்கு தண்டனை விதித்திருப்பதால் தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இலங்கையில் நடைபெறும் பாதுகாப்பு மாநாடு உட்பட எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இந்தியா கலந்து கொள்ளாமல் புறக்கணித்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அத்துடன் இலங்கையின் நாடாளுமன்றத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் அவர்கள் அதிர்ச்சிக்குரிய ஒரு தகவலை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்.

தெற்காசிய பிராந்தியத்தின் மிக முக்கியமான முதன்மையான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை சீனாவுக்கு தாரை வார்க்க இனப்படுகொலையாளன் ராஜபக்சே அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது என்ற உண்மையை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இலங்கையின் திருகோணமலை மீது 1980களில் அமெரிக்கா கண் வைத்து வாய்ஸ் ஆப் அமெரிக்காவுக்கான தளம் அமைக்க முயற்சித்தது. அப்போது இந்திய நாடாளுமன்றத்திலேயே இலங்கையை மிகக் கடுமையாக எச்சரித்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள்.

இந்தியாவின் அனுமதியின்றி எந்த ஒரு நாட்டையும் இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று எச்சரித்தார் இந்திரா. 1987ஆம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தின் போதும் குறிப்பாக திருகோணமலை துறைமுகத்தை எந்த ஒருநாட்டுக்கும் இந்தியாவின் அனுமதியின்றி கொடுக்கக் கூடாது என்ற சரத்து சேர்க்கப்பட்டிருக்கிறது.

இதன் ஒருபகுதியாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆளுகை காலத்திலேயே திருகோணமலையின் சம்பூரில் அனல்மின் நிலையம் அமைக்க இந்தியா ஒப்பந்தம் போட்டது. திருகோணமலை துறைமுகத்தில் 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட எரிஎண்ணெய் நிரப்பும் கிணறுகளை பயன்படுத்துவதற்கான உரிமையை இந்தியா பெற்றது.

இருப்பினும் 1990களில் இருந்து இதுநாள் வரை இந்தியாவை ஆட்சி செய்த அத்தனை அரசுகளுமே சீனாவுக்கு இலங்கை செங்கம்பளம் விரித்ததை வேடிக்கை பார்த்தது. சிங்களத்துடன் கை கோர்த்து ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்ய உதவியது.

இதன் விளைவாக இன்று ஈழத் தமிழரின் அரசியல் தலைநகரான திருகோணமலையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தை சீனாகாரனுக்கு தாரைவார்க்கிறான் ராஜபக்சே.

திருகோணமலை துறைமுகத்தை யார் கையில் வைத்திருக்கிறார்களோ அவர்களே தெற்காசியாவின் வல்லரசு என்பது சோழப் பேரரசர்கள் காலம் முதலே இருந்து வரும் அரசியல் நடைமுறை. இந்தியாவுக்கு இத்தனை பெரிய துரோகம் செய்த பின்னரும் கூட ராஜபக்சே கும்பலை இதுவரை இந்தியா கண்டிக்கவில்லை.

இலங்கையின் இந்த பச்சை துரோகத்தை காட்டிக் கொடுப்புக்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையிலும் 5 அப்பாவித் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்த கொடுஞ்செயலைக் கண்டித்தும் அவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தும் விதமாகவும் அந்நாட்டிலே நடைபெற உள்ள பாதுகாப்பு மாநாடு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து தெற்காசியாவின் வல்லரசு இந்தியாதான் என்பதை சுண்டைக்காய் இலங்கை அரசுக்கு புரியும் வகையில் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

முல்லை பெரியாறு அணையில் தமிழக பொறியாளர் மாதவன் மீது கேரள குண்டர்கள் நடத்திய கொடுந்தாக்குதலுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம்

செவ்வாய், 18 நவம்பர், 2014

முல்லை பெரியாறு அணையில் தமிழக பொறியாளர் மாதவன் மீது கேரள குண்டர்கள் நடத்திய கொடுந்தாக்குதலுக்கு கடும் கண்டனம்! தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் இன்று (18.11.2014) வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லை பெரியாறு அணையில் தமிழக பொறியாளர் மாதவன் மீது கேரள குண்டர்கள் நடத்திய கொடுந்தாக்குதலுக்கு கடும் கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணையில் 35 ஆண்டுகாலத்துக்குப் பிறகு தமிழ்நாட்டின் நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாக அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் நிலையில் தமிழக பொறியாளர் மாதவன் மீது கேரள குண்டர்கள் கொடுந்தாக்குதல் நடத்தி அணையை சேதப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

முல்லைப் பெரியாறு பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடியை எந்த நேரத்திலும் எட்டிவிட இருக்கிறது. இந்த நிலையில் பீர்மேடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிஜூமோள் என்பவர் தமது ஆதரவாளர்கள் 50 பேருடன் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய சென்றுள்ளார். அவருடன் கேரள மாநில பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் குண்டர்களும் சென்றுள்ளனர்.

பெரியாறு அணையில் அத்துமீறி நுழைவதற்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. அங்கு ஐவர் குழு, மூவர் குழு, பெரியாறு அணை தொடர்பான அதிகாரிகள் மட்டும் நுழைய அனுமதி உள்ளது. இந்நிலையில் கேரளா சட்டப்பேரவை உறுப்பினருடன் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் வந்த கேரளா குண்டர்களை தமிழக பொறியாளர் மாதவன் தடுத்துள்ளார். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் குண்டர்களுடன் உள்ளே சென்ற கேரளா எம்.எல்.ஏ பிஜூமோள், அணையின் சுவர்களை சேதப்படுத்தி நீர் கசிவது போன்று வீடியோ படம் எடுத்திருக்கின்றனர்.

இதனைத் தட்டிக் கேட்ட தமிழக பொறியாளர் மாதவனை கேரளா குண்டர்கள் கீழே தள்ளி கொடூரமாக தாக்கியுள்ளனர். இது குறித்து அணையில் பாதுகாப்பில் உள்ள கேரள காவல்துறையினரிடம்  தமிழக பொறியாளர் மாதவன் புகார் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. கேரளாவின் இந்த அத்துமீறலும் அடாவடி தாக்குதலும் தமிழகத்தில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் இந்த அடாவடி தாக்குதலானது முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. கேரளாவின் இந்த அத்துமீறலையும் அடாவடித்தனத்தையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக பொறியாளர் மாதவனைத் தாக்கிய கேரளா சட்டப்பேரவை உறுப்பினர் பிஜூமோளைக் கைது செய்து இந்திய இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். அத்துடன் கேரளாவால் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த நேரத்திலும் பாதிப்பு வரலாம் என்ற அச்சம் தமிழக மக்களிடத்தில் எழுந்துள்ளது. இந்த அச்சத்தைப் போக்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

மலேசியாவில் நடைபெற்ற பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் சிறப்புரை

திங்கள், 10 நவம்பர், 2014

மலேசியாவில் நடைபெற்ற பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாடு  7, 8, 9 நவம்பர் 2014 மூன்று நாட்கள் மாநாடு நடைபெற்றது. “Mobilising Tamil Youth for Justice and Freedom”என்ற தலைப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் சிறப்புரையாற்றினார். 
Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்


பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP