செங்கல்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் முற்றுகை போராட்டம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பேராசிரியர் தீரன் பங்கேற்பு
சனி, 7 ஜூலை, 2012
செங்கல்பட்டு - பூந்தமல்லி பகுதிகளில் ‘சிறப்பு முகாம்’ என்ற பெயரில், வழக்கு முடிந்த பின்னரும் கூட தமிழீழத் தமிழர்களை சிறைபடுத்தி வைத்திருக்கிறது தமிழக அரசு, இதனைக் கண்டித்து அவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியப் பிறகு அவர்களை விடுதலை செய்வதாக அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் அதை நிறைவேற்றவில்லை. தமிழக அரசு ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி 30.06.2012 அன்று காலை பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்ட செங்கல்பட்டு ‘சிறப்பு முகாம்’ முற்றுகை போராட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் திரண்ட தோழர்கள் சிறப்பு முகாமை நோக்கி முழக்கங்களுடன் சென்றனர். தோழர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
முற்றுகைப் போராட்டத்தை இயக்குநர் புகழேந்தி தங்கராசு ஒருங்கிணைத்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பேராசிரியர் தீரன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. அதியமான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், பெரியார் தி.க. காஞ்சி மாவட்ட செயலாளர் டேவிட்பெரியார், திராவிட இயக்கத் தமிழர் பேரவை சிங்கவராயன், தமிழக பெண்கள் செயற்களம் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கயல்விழி, தோழர் தியாகு உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர் களும், உணர்வாளர்களும் இதில் திரளாகப் பங் கேற்றனர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருண பாரதி, தாம்பரம் கிளை செயலாளர் தோழர் தமிழ்க் கனல், குன்றத்தூர் தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் தோழர் சரவணன், கிளைச் செயலாளர் தோழர் சியாம், தோழர் தமிழ்ச்சமரன் உள்ளிட்ட தோழர்கள் இதில் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
போராட்டம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பின் 4 பேரை தமிழக அரசு விடுவித்தது. எனினும், மற்றவர்களையும் விடுவிக்கக் கோரிப் போராட்டம் தொடர்ந்துவந்த நிலையில், 06.07.2012 அன்று கியூ பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் சம்பத் நேரில் வந்து வாக்குறுதி அளித்ததன் முகாம்வாசிகள் அடிப்படையில் உண்ணாப் போராட்டத்தைக் கைவிட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக