காவிரி நதி நீரை தர மறுக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலியில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் வழங்கினால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்
ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012
கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் 25/08/2012 அன்று அளித்த பேட்டி :
தமிழகத்துக்கு காவிரி நதிநீரை கர்நாடக அரசு இதுவரை திறந்து விடவில்லை. இது சம்பந்தமாக தமிழக அரசு பலமுறை கோரிக்கை விடுத்தும் அதனை கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதற்கு கர்நாடக அரசு எங்கள் மாநிலத்துக்கே போதிய தண்ணீர் இல்லை. அதனால் தண்ணீர் திறந்து விட முடியாது என உச்சநீதிமன்றத்தில் காரணம் கூறி உள்ளது. தற்போது தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 13 மணி நேரம் மின்வெட்டு இருந்து வருகிறது. ஆனால் நெய்வேலியிலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு நாம் மின்சாரம் கொடுத்து வருகிறோம்.
தமிழகத்துக்கே மின்சாரம் பற்றாக்குறை இருக்கும்போது நாம் ஏன் கர்நாடக மாநிலத்துக்கு மின்சாரம் கொடுக்க வேண்டும்? எனவே நெய்வேலியில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை கர்நாடகாவுக்கு கொடுப்பதை தடுத்து நிறுத்த தமிழக வாழ்வுரிமை கட்சி, ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து ஆலோசனை நடத்தி போராட்டம் நடத்த உள்ளோம். மேலும் தமிழக அரசு காவிரிநீர் பெறுவதற்கும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுகின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிக்கும். இதேபோல் காவிரி நதி நீர் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதே கைவிட்டுவிட்டு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவரது கட்சி தொண்டர்களுக்கு போராட்டம் நடத்தும்படி அறிவிப்பு வெளியிட வேண்டும். மேலும் தமிழகத்துக்கு மத்திய அரசு போதுமான நிதி, அரிசி, மண்ணெண்ணெய் , மின்சாரம் போன்றவற்றை வழங்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக