உதகையில் சிங்கள படை அதிகாரிகளுக்கு மீண்டும் பயிற்சி: தமிழர்களை ஏமாற்றும் இந்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்
சனி, 25 ஆகஸ்ட், 2012
உதகையில் சிங்கள படை அதிகாரிகளுக்கு மீண்டும் பயிற்சி- தமிழர்களை ஏமாற்றும் இந்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை
தமிழகத்தின் உதகையில் சிங்கள படை அதிகாரிகள் இருவருக்கு கடந்த மே மாதம் முதல் இந்திய அரசு பயிற்சி கொடுத்து வரும் செய்தி தமிழர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவதாக இருக்கிறது. பல லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த போர்க்குற்றவாளியான கொலைகார ராஜபக்சேவின் சிங்கள ராணுவத்துக்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தி யாவின் எந்த ஒரு மூலையிலும் பயிற்சி கொடுக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசு மற்றும் தமிழக அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்களின் ஒரே நிலைப்பாடு. ஆனால் தமிழகத்தின் உணர்வுகளை சிறிதுகூட மதிக்காமல் கடந்த 4 மாதங்களாக சிங்கள ராணுவ அதிகாரிகள் திசநாயக மகோத்த லாலங்கே, ஹவாவாசம் ஆகியோருக்கு உதகையின் வெலிங்டன் பயிற்சி மையத்தில் கள்ளத்தனமாக இந்திய மத்திய அரசு பயிற்சி கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது.
பிராந்திய பாதுகாப்பு என்ற போர்வையில் இந்தியாவை சிங்களவன் ஏமாற்றிக் கொண்டு நிதி உதவியையும் ராணுவ உதவியையும் பெற்றுக் கொள்கிறான் என்பதை இந்தியா உணரவில்லையா? அல்லது உணர்ந்தாலும் தமிழனை ஏமாற்றுவதற்காக நடிக்கிறதா? என்ற கேள்விதான் தமிழகத்தின் முன் நிற்கிறது. இலங்கையை முற்று முழுவதாக சீனாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்து ஏமாற்றுகிறான் சிங்களவன். அண்மையில் கூட இலங்கையின் தலைநகர் கொழும்பில் இந்திய நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை இந்தியாவை மதிக்காமல் சீனாவுக்கு தூக்கிக் கொடுத்தது ராஜபக்சே அரசு. இதேபோல் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்த பேருந்துகளை இனி இறக்குமதி செய்யாமல் சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யப் போகிறானாம் சிங்களவன். திருகோணமலை அருகே சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்க இந்தியாவுக்கு அனுமதி கொடுத்து இப்போது பாகிஸ்தானை அணுமின் நிலையம் அமைக்க அழைக்கிறான் சிங்களவன். இவ்வளவு ஏன்? இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் தென்னிந்தியாவுக்கு அருகில் குறிப்பாக தமிழ்நாட்டு கடற்பரப்பான மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழாய்வுக்கு சீனாக்காரனை அழைத்து வருகிறான் சிங்களவன். இதேபோல் கச்சத்தீவில் சிங்களக் கடற்படை முகாம் என்ற பெயரில் சீனா முகாம் அமைத்து இந்தியாவின் கழுத்தை நெரிக்கக் காத்திருக்கிறது.
இப்படி இந்தியாவின் முகத்தில் சிங்களவன் எத்தனை முறை கரியைப் பூசி சேற்றைப் பூசி ஏமாற்றினாலும் இந்திய மத்திய அரசு தமிழனுக்கு துரோகம் செய்வது, தமிழனை ஏமாற்றுவது என்ற ஒற்றை இலட்சியத்தில்தான் உறுதியாக இருக்கிறது என்பதைத்தான் உதகையில் கொல்லைப்புற வழியே சிங்களவனுக்கு பயிற்சி கொடுக்கும் செயல் அம்பலடுத்துகிறது. இன்னமும் பிராந்திய பாதுகாப்பு என்ற பெயரில் சுண்டைக்காய் சிங்கள நாட்டுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்காமல் இனியாவது தமிழகத்து உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக