Blogger இயக்குவது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற உள்ள சார்க் மற்றும் ஆசியான் நாடுகளின் ராணுவ தளபதிகள் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது - தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்கோரிக்கை

புதன், 19 நவம்பர், 2014

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் இன்று 19.11.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:

தூக்கு மேடையில் நிற்கும் 5 மீனவர்கள் விடுதலையாகி தமிழகம் வரும் வரை இலங்கையில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது!

இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் 27ந் தேதி முதல் 29-ந் தேதி வரை சார்க் மற்றும் ஆசியான் நாடுகளின் ராணுவ தளபதிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவின் ராணுவ தளபதியும் பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கால் நூற்றாண்டுகாலமாக இந்தியாவின் குடிமக்களான 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைப் படுகொலை செய்து வருகிறது சிங்களப் பேரினவாத அரசு. தற்போதும் தமிழ்நாட்டு மீனவர்களை சிறைபிடிப்பதும் அவர்களின் வாழ்வாதாரமான படகுகளை பிடித்து வைப்பதுமான அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது.

அத்துடன் பொய்க்குற்றச்சாட்டின் கீழ் 5 அப்பாவி மீனவர்களை 3 ஆண்டுகாலம் சிறையில் அடைத்து தூக்கு தண்டனை விதித்து 'கருணை' காட்டுவதாக இனக் கொலையாளி ராஜபக்சே கூறுகிறான்.

ஆனால் வாக்குறுதி அளித்தபடி 5 அப்பாவி தமிழக மீனவர்களை இன்னமும் இலங்கை அரசு விடுதலை செய்யவில்லை. மாறாக இலங்கையில் உள்ள அமைச்சர்கள், தமிழக மீனவர்களின் குடும்பங்களை தொலைபேசியில் அழைத்து மேல்முறையீட்டு மனுவை வாபஸ் வாங்க வேண்டும் என்று மிரட்டுகிறார்கள் என்ற செய்தியும் வந்துள்ளது.

5 மீனவர்களுக்கு ராஜபக்சேவின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை நீதித்துறை தூக்கு தண்டனை விதித்திருப்பதால் தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இலங்கையில் நடைபெறும் பாதுகாப்பு மாநாடு உட்பட எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இந்தியா கலந்து கொள்ளாமல் புறக்கணித்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அத்துடன் இலங்கையின் நாடாளுமன்றத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் அவர்கள் அதிர்ச்சிக்குரிய ஒரு தகவலை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்.

தெற்காசிய பிராந்தியத்தின் மிக முக்கியமான முதன்மையான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை சீனாவுக்கு தாரை வார்க்க இனப்படுகொலையாளன் ராஜபக்சே அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது என்ற உண்மையை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இலங்கையின் திருகோணமலை மீது 1980களில் அமெரிக்கா கண் வைத்து வாய்ஸ் ஆப் அமெரிக்காவுக்கான தளம் அமைக்க முயற்சித்தது. அப்போது இந்திய நாடாளுமன்றத்திலேயே இலங்கையை மிகக் கடுமையாக எச்சரித்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள்.

இந்தியாவின் அனுமதியின்றி எந்த ஒரு நாட்டையும் இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று எச்சரித்தார் இந்திரா. 1987ஆம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தின் போதும் குறிப்பாக திருகோணமலை துறைமுகத்தை எந்த ஒருநாட்டுக்கும் இந்தியாவின் அனுமதியின்றி கொடுக்கக் கூடாது என்ற சரத்து சேர்க்கப்பட்டிருக்கிறது.

இதன் ஒருபகுதியாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆளுகை காலத்திலேயே திருகோணமலையின் சம்பூரில் அனல்மின் நிலையம் அமைக்க இந்தியா ஒப்பந்தம் போட்டது. திருகோணமலை துறைமுகத்தில் 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட எரிஎண்ணெய் நிரப்பும் கிணறுகளை பயன்படுத்துவதற்கான உரிமையை இந்தியா பெற்றது.

இருப்பினும் 1990களில் இருந்து இதுநாள் வரை இந்தியாவை ஆட்சி செய்த அத்தனை அரசுகளுமே சீனாவுக்கு இலங்கை செங்கம்பளம் விரித்ததை வேடிக்கை பார்த்தது. சிங்களத்துடன் கை கோர்த்து ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்ய உதவியது.

இதன் விளைவாக இன்று ஈழத் தமிழரின் அரசியல் தலைநகரான திருகோணமலையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தை சீனாகாரனுக்கு தாரைவார்க்கிறான் ராஜபக்சே.

திருகோணமலை துறைமுகத்தை யார் கையில் வைத்திருக்கிறார்களோ அவர்களே தெற்காசியாவின் வல்லரசு என்பது சோழப் பேரரசர்கள் காலம் முதலே இருந்து வரும் அரசியல் நடைமுறை. இந்தியாவுக்கு இத்தனை பெரிய துரோகம் செய்த பின்னரும் கூட ராஜபக்சே கும்பலை இதுவரை இந்தியா கண்டிக்கவில்லை.

இலங்கையின் இந்த பச்சை துரோகத்தை காட்டிக் கொடுப்புக்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையிலும் 5 அப்பாவித் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்த கொடுஞ்செயலைக் கண்டித்தும் அவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தும் விதமாகவும் அந்நாட்டிலே நடைபெற உள்ள பாதுகாப்பு மாநாடு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து தெற்காசியாவின் வல்லரசு இந்தியாதான் என்பதை சுண்டைக்காய் இலங்கை அரசுக்கு புரியும் வகையில் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP