Blogger இயக்குவது.

பேரறிஞர் அண்ணா 107வது பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுதலை செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் இன்று (13.09.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசே! பேரறிஞர் அண்ணா 107வது பிறந்தநாளை முன்னிட்டு
10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுதலை செய்க!

சிறப்பு முகாம்களை இழுத்து மூடி ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்திடுக!!


பேரறிஞர் அண்ணா அவர்களின் 107வது பிறந்தாள் வரும் செப்டம்பர் 15-ந் தேதியன்று கொண்டாடப்படுகிறது. பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தாளை முன்னிட்டு 10 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த அனைத்து சிறை கைதிகளையும் தமிழக அரசு கருணையுடன் விடுதலை செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
சிறைச்சாலைகள் என்பது தவறு செய்தோர் தண்டனை அனுபவிக்கும் இடம் என்பதுடன் அவர்களை சீர்திருத்தும் இடமும் கூட.. இந்த அடிப்படையில் 10 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்த கைதிகளை கருணையுள்ளத்துடன் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது இதேபோல் 10 ஆண்டுகாலம் தண்டனை அனுபவித்த சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். அப்போதைய தி.மு.க. அரசு, 7 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த கைதிகளையே கூட விடுதலை செய்திருக்கிறது என்ற முன்னுதாரணத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இதேபோல் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 14 ஈழத் தமிழர்களையும் செய்யாறு சிறப்பு முகாமில் உள்ள 4 ஈழத் தமிழர்களையும் மனிதாபிமானத்துடன் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கையில் சிங்கள பேரினவாதத்தின் இனப்படுகொலைக்கு தப்பி படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழகத்துக்கு அடைக்கலமாக வந்தவர்கள் ஈழத் தமிழர்கள். அவர்கள் மீது வழக்குகளைப் போட்டு சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பது நியாயப்படுத்த முடியாத ஒன்று.
ஆகையால் இந்த சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் எனது தலைமையில் திருச்சியில் மாபெரும் அறப்போராட்டத்தை நடத்தியிருந்தோம்.
இந்த நிலையில் இன்றும் கூட திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 5 ஈழத் தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது கருணை கொலை செய்துவிடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசியல் கட்சிகள், தமிழர் இயக்கங்கள் தொடர்ந்து இந்த சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கை குறித்து தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் தெரிவிக்காமல் இருப்பது உலகத் தமிழர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகையால் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தாளையொட்டி 10 ஆண்டுகாலம் சிறையில் வாடும் அனைத்து கைதிகளுடன் இந்த சிறப்பு முகாம்களளயும் இழுத்து மூடி அந்த முகாம்களில் உள்ள ஈழத் தமிழ் உறவுகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP