ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் கொலைவெறி சிங்களவர்களின் இலங்கை அணி பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று லண்டன் மாநகரத்தில் தமிழீழத் தமிழ் உறவுகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.இதேபோல் "ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்க தடை விதி"க்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டங்களிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறது.
இலங்கைத் தீவின் முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த கொலைவெறியன் இலங்கை அதிபராக இருக்கும் மகிந்த ராஜபக்ச. முள்ளிவாய்க்கால் போர்க் களத்தில் வெள்ளைக் கொடியேந்தி தமிழர்களோடு சரணடைய வந்த தமிழீழத் தலைவர்களையும் அப்பாவி பொதுமக்களையும் அநியாயமாக சுட்டுக் கொன்ற காட்டுமிராண்டிக் கும்பல் ராஜபக்ச தலைமையிலான சிங்களக் காடையர்களைக் கொண்ட இலங்கை ராணுவம். எந்த ஒரு சர்வதேச போர் விதிகளையும் கடைபிடிக்காமல் போராளி இசைப்பிரியா உள்ளிட்ட ஏராளமான போராளிகளையும் அப்பாவித் தமிழ்ப் பெண்களையும் ஈவிரக்கமின்றி மிருகத்தனமாக சிங்களக் காடையர்கள் வேட்டையாடிய கொடூரத்தை இங்கிலாந்து நாட்டின் சேனல் 4- தொலைக்காட்சிதான் வெளியிட்டு உலகையே உறைய வைத்தது.
போர்க்களத்தில் போராடி வீரமரணம் அடைந்த போராளிகளின் உடல்களை நிர்வாணப்படுத்தி வாகனங்களில் மரக்கட்டைகளைப் போல் தூக்கிப் போடுகிற காட்சிகளைப் பார்த்து கை கொட்டி மகிழ்கிற மரத்துப் போன இதயம் கொண்டவர்கள்தான் சிங்களவர்கள். முள்ளிவாய்க்காலில் பல நூறு தமிழர்களின் பிணக்குவியலை ஆண் பெண் என இனம் பிரித்து வைத்து அதில் இருபாலரது அங்கமெல்லாம் தெரியும் வகையில் ஆடைகளந்து அதன் மீது ஆடி மகிழ்ந்த குரூர மனம் கொண்ட வெறியர்கள்தான் சிங்களவர்கள். அப்படிப்பட்ட சிங்களவர்களை உலகின் மாண்புமிக்க திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அனுமதித்திருப்பது என்பது அதிர்ச்சியளிக்கிறது. அதுவும் ஜனநாயகத்தின் தொட்டில் எனப்படும் இங்கிலாந்து நாடு இத்தகைய சிங்களக் காடையர்களை அனுமதித்திருப்பது பெரும் அவமானத்துக்குரியது.
இலங்கையை ஆண்ட இங்கிலாந்து பேரரசு, ஆட்சிப் பொறுப்பை சிங்களவர்களிடம் ஒப்படைத்ததால் 60 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தமிழீழத் தமிழ் உறவுகள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருவதுடன் பல லட்சம் தமிழரையும் சிங்களம் காவு வாங்கியிருக்கிறது. இலங்கைத் தீவை அன்றே இரண்டாகப் பிரித்து தமிழர் பிரதேசங்களில் தமிழருக்கான ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்திருந்தால் இவ்வளவு பேரவலத்தை எமது இனம் சந்தித்திருக்காது. அந்த வகையில் இங்கிலாந்து பேரரசு மீது எமக்கு அதிருப்தி இருந்தாலும் அகதிகளாக சொந்த நிலத்தை விட்டு புலம்பெயர்ந்த எமது தமிழ் உறவுகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் நாடு.
இலங்கைத் தீவில் தமிழ் உறவுகளுக்கு எதிராக சிங்களக் காடையர்கள் கட்டவிழ்த்துவிடும் அத்தனை மனித உரிமை மீறல்களையும் எப்போதும் கண்டித்தே வந்திருக்கிறது இங்கிலாந்து. கொடூரமான யுத்தம் முடிந்த பிறகும் கூட ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை இன்னமும் நசுக்கப்படுவது கண்டு தமது குமுறல்களை இங்கிலாந்து எப்போதும் வெளிப்படுத்தியே வந்திருக்கிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துக்கு கொலைவெறியன் ராஜபக்ச வந்தபோது கடும் எதிர்ப்புப் போராட்டங்களை தமிழ் உறவுகள் முன்னெடுத்தனர். இதனால் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் சிங்கள வெறியன் ராஜபக்சவை தமது பல்கலைக் கழகத்துக்குள் அனுமதிக்க மறுத்து இலங்கைக்கு திருப்பி ஓட வைத்தது.
இலங்கைத் தீவில் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டு கொதித்தெழும் எமது உறவுகள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க எமது உரிமைக் குரல்களை கரிசனையோடு எப்போதும் அணுகுகின்ற நாடு இங்கிலாந்து பேரரசு. ஆனால் இப்போது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இனவெறி சிங்களவர்களை அனுமதித்திருப்பதும் அந்நாட்டு அதிபர் கொலைவெறியன் ராஜபக்சவை அழைத்திருப்பதும் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுகிறது. சிங்கள இனவெறியர்களை ஒலிம்பிக் போட்டிகளில் வெளியேற்றுமாறு இங்கிலாந்தின் ஒலிம்பிக் பூங்கா முன்பு எமது தமிழ் உறவுகள் நடத்தி வரும் நியாயமான போராட்டத்தை இங்கிலாந்து அரசு எலிசெபத் ராணியாரும் புரிந்து கொள்ள மறுப்பது வேதனையைத் தருகிறது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை அணியை அனுமதித்திருப்பதன் மூலம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டில் போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துலக நாடுகள் காட்டிய கரிசனை அவ்வளவுதானா? என்ற கேள்வியை எழுப்புகிறது. ஈழத் தமிழருக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்ற சர்வதேசத்தின் அழுத்தம் காற்றோடு கலந்துவிட்டதா என்ற கேள்வியை முன் வைக்கிறது? ஜனநாயகம், மனிதாபிமானம் பேசும் இங்கிலாந்து நாடு தமிழர்களின் உள்ளக் குமுறலை ஏற்று லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து சிங்களக் காடையர்களின் இலங்கை அணியை வெளியேற்றும் வரை தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்று தமிழ்நாட்டில் உள்ள தோழமைக் கட்சிகளையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
தி.வேல்முருகன்
நிறுவனர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
Read more...