ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் படுகொலை - ஐக்கிய நாடுகள் சபை இனப்படுகொலையை தடுத்து நிறுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை
வியாழன், 28 மே, 2015
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் ( 28.05.2015 ) இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மியான்மரிலும் பவுத்த பேரினவாத வெறியாட்டம்! பல்லாயிரம் சிறுபான்மை இனத்தவர் படுகொலை!!
அகதிகளாக இலட்சக்கணக்கானோர் தத்தளிப்பு! ஐநாவே இனப்படுகொலையை தடுத்து நிறுத்து!
சர்வதேச நாடுகளே அடைக்கலம் கொடு!! ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கிடு!!
இலங்கையில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த அதே பவுத்த பேரினவாதம் தற்போது மலேசியாவில் மனித குலம் மன்னிக்கவே முடியாத கொடூர ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
இத்தகைய கொடூர அரச பயங்கரவாத ஒடுக்குமுறைகளில் பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த அடக்குமுறைகளில் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மியான்மரை விட்டு தரைவழியாக, கடல் வழியாக கண்ணுக்கெட்டிய திசையெங்கும் வழியெங்கும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக நாள்தோறும் தப்பி ஓடுகின்றனர்..
அப்படி தப்பி ஓடுகிற அப்பாவிகளை ஈவிரக்கமற்ற அண்டைநாடுகள் அகதிகளாக ஏற்க மறுத்து நடுக்கடலிலே, கொடும் வனங்களிலே தத்தளிக்க விடுகின்றன.. இந்த அநியாய அரசுகளின் பாராமுகத்தால் பசி பட்டினியால் நடுக்கடலி, எல்லைக் காடுகளில் ஆயிரமாயிரம் பேர் செத்து மடிகிறார்கள்..
இதனிலும் உச்ச கொடூரமாக இப்படி தாய்மண்ணை விட்டு, உடைமைகளை உறவுகளை இழந்து உயிர் பிழைக்க தப்பி ஓடுகிற அப்பாவிகளை 'ஆட் கடத்துகிற' கும்பல்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொள்கின்றன.. இந்த காட்டுமிராண்டிகளின் பிடியில் சிக்கி மடிந்து போனவர்கள் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இடுகாடுகள் எல்லையோரங்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக பேரதிர்ச்சியும் நெஞ்சை உறைய வைக்கும்படியான செய்திகள் வந்து கொண்டுகின்றன.
இந்தியா, வங்கதேசம் நாடுகளில் இருந்து குடியேறியவர்களே ரோஹிங்கியா எனும் சிறுபான்மை இனத்தவர் என்பதாலேயே அந்த மியான்மர் மண்ணைவிட்டு ஓடஓட துரத்தப்படுகிறார்கள்.. சொந்த நாட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள்..
ஈழத் தமிழர்கள் சொந்த மண்ணிலே நாதியற்றவர்களாக பவுத்த பேரினவாதம் பலிகொண்டபோது வாய்மூடி மவுனமாக இருந்த சர்வதேசம் இப்போதும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறையையும் கண்டும் காணாமல் இருப்பது வெட்கக் கேடானது..
நாடுகளின் அரசுகளின் சொந்த சுயலாபங்களுக்காக கொத்து கொத்தாக சிறுபான்மை இனங்கள் இப்படி வேட்டையாடப்படும் போது தடுக்க வேண்டிய தேசங்கள். தேசாந்திரிகளாக தப்பி ஓடுகிறவர்களை மனிதர்களாக கூட மதித்து அரவணைக்காதிருப்பது மனித குலத்தின் மாந்தநேயம் மரித்துப் போனதையே வெளிப்படுத்துகிறது...
இந்திய தேசமாவது ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்து அரவணைக்க வேண்டும்! ஐக்கிய நாடுகள் சபை இந்த விவகாரத்தில் முழுமையான ஈடுபாட்டோடு தலையிட்டு ரோஹிங்கியா சிறுபான்மை இனத்தவர் மீதான ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியது அதன் கடமை!
மனித நேயமுள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த தென்னாசியாவிலேயே விரிவாக்கம் பெற்று வருகிற பவுத்த பேரினவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்து அரச பயங்கரவாதங்களுக்கு எதிராக போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.