தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பண்ருட்டி தி.வேல்முருகன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை நேரில் சந்திக்க உள்ளார்
புதன், 4 ஏப்ரல், 2012
பண்ருட்டி:
தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறினார்.
பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அளித்த பேட்டி
தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையால் தேர்வு எழுதும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையைப் போக்க நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மத்திய அரசிடம் கேட்டு பெற்று சீரான மின்சாரம் கிடைக்க தமிழக முதல்வர் வழிவகை செய்ய வேண்டும். கூடங்குளம் மின்சாரத்தை தமிழகத்துக்கு தரவேண்டும் என தமிழக முதல்வர் பிரதமரிடம் கேட்டுள்ளார். கூடங்குளம் மின்சார உற்பத்தி குறைவானது, மேலும் மின்சாரம் கிடைக்க 6 மாதங்களாகும். எனவே மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களின் துயரைப் போக்க நெய்வேலியிலிருந்து மின்சாரத்தை பெற்றுத் தரவேண்டும்.
மின்சாரம் இல்லாத நிலையில் மின் கட்டண உயர்வு என்பது தேவையற்றது. பல கிராமங்களில் குடிநீர்கூட கிடைக்கவில்லை. புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு திட்டங்கள், பொருள் உதவிகள் பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை. அனைத்து அறிவிப்புகளும் பெயரளவில் உள்ளன. விவசாயிகள் பெற்ற கடன்களையும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும், கடனையும் ரத்து செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம் நேரில் வலியுறுத்தியுள்ளேன். பத்திரப் பதிவு கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ரத்த உறவு பிரிவினைக்காவது சலுகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தி.வேல்முருகன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக