Blogger இயக்குவது.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு தமிழினப் படுகொலையாளனாகிய இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்ததைக் கண்டித்து மே 26-ந் தேதி சென்னையில் முற்றுகைப் போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அறிவிப்பு

வெள்ளி, 23 மே, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

மே 26-ல் மாபெரும் கண்டன முற்றுகைப் போராட்டம்:

இடம்: சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பேரணி தொடங்கி சென்னை அண்ணாசாலை தலைமை தபால்நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம்

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நரேந்திர மோடி அவர்கள் இந்திய பிரதமராக மே 26-ந் தேதி டெல்லியில் பதவியேற்கிறார். நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தமிழினப் படுகொலையாளனாகிய சிங்கள அதிபர் ராஜபக்சேவும் அழைக்கப்பட்டிருக்கிறான் என்ற செய்தி தமிழகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

தமிழீழத்தில் சர்வதேச நாடுகள் தடை செய்த கொத்து கொண்டுகள், ரசாயன ஆயுதங்கள் என அனைத்தையும் பயன்படுத்தி ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழ் உறவுகளை ஈவிரக்கமின்றி படுகொலை செய்தவன் ராஜபக்சே. 2009ஆம் ஆண்டு யுத்தகளத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியுடன் நிராயுதபாணிகளாக சரணடைந்த அப்பாவி பொதுமக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள், போராளிகளையும் கொடூர சித்திரவதை செய்து, தீயிலிட்டு எரித்துக் கொன்ற மாபாதக படுகொலையாளன் ராஜபக்சே. இறுதி யுத்த களத்திலே பாலச்சந்திரன் உள்ளிட்ட பிஞ்சு குழந்தைகளையும், இசைபிரியா உள்ளிட்ட பெண் போராளிகளையும் அப்பாவி சிறுமிகளையும் உயிரோடு கைது செய்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி எண்ணிப்பார்க்கக் கூடிய முடியாத கொடூர சித்திரவதைக்குள்ளாக்கி கொலை செய்த கொடியவன் ராஜபக்சே. இத்தனை கொடூரங்களுக்கும் ஆதாரங்கள் ஒவ்வொருநாளும் வெளிவந்து ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தை மட்டுமே மனித குலத்தையே குலைநடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ளான் சிங்களப் பேரினவாதி ராஜபக்சே. கடந்த காலங்களில் இந்திய பேரரசை ஆண்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த இனப்படுகொலைக்கு துணை போனதுடன் படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்து நட்புக் கரம் நீட்டியது. இதனை ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்துக் கண்டித்தது. ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் அரசு ராஜபக்சேவை வரவேற்கக் கூடாது என்பதற்காக போர்க்கோலம் பூண்டது தமிழகம். படுகொலையாளன் ராஜபக்சேவை இந்தியா வரவேற்கக் கூடாது என்பதற்காக 19 தமிழர்கள் தமிழகத்திலே தீக்குளித்து மாண்டுபோயிருக்கிறார்கள்.

தமிழக மக்களின் பிரதிநிதிகள் சபையான சட்டசபையில் மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு, போர்க்குற்றவாளி இனப்படுகொலையாளன் ராஜபக்சே மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்; இனப்படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானங்களுக்கு மேல் தீர்மானங்களை ஒட்டுமொத்த மக்கள் பிரதிநிதிகள் ஆதரவுடன் நிறைவேற்றியது.ஆனால் அனைத்தையும் துச்சமென மதித்து கொக்கரித்த காங்கிரஸ் இன்று மக்களவைத் தேர்தலில் குப்பையிலே வீசப்பட்டுக் கிடக்கிறது.

நேற்று இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் பேரரசு செய்த அதே தவறையே இன்று இந்தியாவை ஆளப் போகிறது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் பின்னப்பற்றத் தொடங்கியிருப்பது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுகிற வேலைதான்! அன்று காங்கிரஸ் தலைமையிலான அரசு, நட்பு நாடு என்ற போர்வையிலும் வெளியுறவுக் கொள்கை என்ற பெயரிலும் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை அரவணைத்தது. இன்று பாரதிய ஜனதா தலைமையிலான அரசு, அதே வெளியுறவுக் கொள்கை என்ற பெயரிலும் அண்டை நாடு என்ற பெயரிலும் இனப்படுக்கொலையாளன் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை அதேபோல் அரவணைக்கிறது. அன்று ராஜபக்சேவுக்கு எதிராக காங்கிரஸுக்கு எதிராக குரல் கொடுத்த தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் இன்றோ காங்கிரஸ் கட்சிக்காரர்களை மிஞ்சும் வகையில் நியாய வியாக்கியானங்களை வாரி வீசிக் கொண்டிருக்கிறார்கள். பாரதிய ஜனதாவின் தமிழகக் கூட்டணிக் கட்சிகள் அனைத்துமே இன்று ஒட்டுமொத்த இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை அழைக்காதீர்கள் என்று குரல் கொடுக்கிறது. ஆனாலும் பாரதிய ஜனதாவோ அப்படித்தான் செய்வோம் என்று இறுமாப்புடன் தமிழகத்தின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறது.

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், மக்களவைத் தேர்தலில் தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்று 37 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கும் கட்சியின் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும் பாரதிய ஜனதாவின் இந்த அட்டூழியத்துக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியிருக்கிறார்கள்.

இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கிற தமிழ்நாடு என்ற மாநிலத்தை ஆட்சி செய்கிற அரசு போர்க்குரல் கொடுக்கிறது; தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், அனைத்து இயக்கங்கள், மாணவர் அமைப்புகள் என ஒட்டுமொத்த தமிழகமே இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை அழைக்காதீர்கள் என்று குரல் கொடுக்கிறார்கள். டெல்லி பதவியேற்பு விழாவிலே ராஜபக்சேவை அழைப்பதைக் கண்டித்து சேலத்திலே ஒரு இளைஞர் தீக்குளிக்க முயற்சித்த விபரீதமும் இன்று நடந்தேறியுள்ளது. இத்தனைக்கும் பிறகும் நாங்கள் ராஜபக்சேவை அழைத்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டுதான் இருக்கிறது இந்தியாவில் அமைய இருக்கும் பாரதிய ஜனதா அரசு. பாரதிய ஜனதாவின் இந்த இறுமாப்புக்கு, இந்த தமிழினத் துரோகத்துக்கு தொடக்கத்திலேயே தக்க பாடம் புகட்டுகிற வரலாற்றுக் கடமை தமிழக மக்களுக்கு வந்துள்ளது. இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை வரவேற்றே தீருவோம் என்று கங்கணம் கட்டும் பாரதிய ஜனதாவின் கங்காணித்தனத்தை கருவறுக்க தமிழக மக்களே சென்னையில் ஓரணியாய் அணி திரள்வோம்! நரேந்திர மோடி டெல்லியில் பிரதமராக பதவியேற்கும் மே 26ஆம் நாளில் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு டெல்லியிலே செங்கம்பளத்த பாஜக விரிக்கும் நாளில் தமிழ்நாட்டு தலைநகரில் நமது கண்டனக் குரலை வெளிப்படுத்த, இனத்துரோகத்துக்கு பாடம் புகட்ட கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், கொள்கைகள் உள்ளிட்ட அனைத்து மாச்சரியங்களையும் தூர எறிந்துவிட்டு தமிழர்களாய்.. மானுடத்தை நேசிப்பவர்களாய் கண்டனக் குரல் எழுப்ப திரண்டு வாரீர்! திரண்டு வாரீர்! என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எம் தமிழின உறவுகளை அழைக்கிறேன்.

தி.வேல்முருகன்
நிறுவனத் தலைவர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP