Blogger இயக்குவது.

தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு கீழ் நீதிமன்றத்தால் ஒரு மாவட்ட நீதிபதியால் கொடுக்கப்பட்ட தீர்ப்புதானே தவிர இறுதித் தீர்ப்பு அல்ல - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிக்கை

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014



தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தடைகளைத் தகர்த்தெறிந்து தமிழகத்தின் நல்லாட்சியை தொடருவார்!

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மீதான வழக்கின் தீர்ப்பு என்பது தற்போதைய நிலையில் கீழ் நீதிமன்றத்தால் ஒரு மாவட்ட நீதிபதியால் கொடுக்கப்பட்ட தீர்ப்புதானே தவிர இறுதித் தீர்ப்பு அல்ல.

இந்த தீர்ப்பை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே சட்டத்தையும் நீதித்துறையையும் மதித்து ஏற்றுக் கொண்டும் இருக்கிறார். நமது நாட்டின் நீதித்துறை அமைப்பில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவையும் இருக்கின்றன.

உரிய சட்ட நடைமுறைகள் மூலம் நிச்சயமாக தமக்கான தடைகளை தகர்த்தெறிவார் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள். பொய்வழக்கு சதிகளைத் தகர்த்து புரட்டல்காரர்களுக்கு தக்கதோர் பாடத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் புகட்டுகின்ற நாள் வெகுதொலைவில் இல்லை.

தற்போது நீதித்துறை அளித்த தீர்ப்பை ஏற்றுள்ள நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் மக்களுக்கான நல்லாட்சியை தொடர்ந்தும் வழங்கும்.

எப்படி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆட்சி உலகத் தமிழர்களுக்கான நல்லரசாக முன்னுதாரணமிக்க மக்களுக்கான அரசாக திகழ்ந்ததோ அதுபோலவே அவரது தொடர் வழிகாட்டுதலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும் தமிழினத்துக்கான மக்களுக்கான போற்றுதலுக்குறிய நல்லரசாகவே தொடரும்.

தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டிருக்கும் உரிமை மீட்பு பிரச்சனைகள், ஈழத் தமிழர் மற்றும் மீனவர் விவகாரங்களில் தமிழர் நலனுக்கான ஒரே அரசாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும் தொடர்ந்தும் செயல்பட்டு இன எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாகவே திகழும்.

5 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் தமிழர் நீதிப் பேரணி - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

வியாழன், 25 செப்டம்பர், 2014

தலைநகர் சென்னையை உலுக்கியெடுத்த 150க்கும் மேற்பட்ட அரசியல் இயக்கங்கள், தமிழர் அமைப்புகள், மாணவர் இயக்கங்கள், படைப்பாளிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என 24.09.2014 அன்று நடைபெற்ற மாபெரும் தமிழர் நீதிப் பேரணியில் பங்கேற்று தமிழர் தம் ஒற்றுமையை வெளிப்படுத்திய அத்தனை தோழமை சக்திகளுக்கும் என் பெரு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுப்பெதற்கான பெரும் போராட்டத்தில் இது முதல் தொடக்கமே! தமிழர் வாழ்வுரிமை வென்றிட ஜாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து இதேபோல் ஒன்றிணைவோம்! தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று தமிழின ஒற்றுமையை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்திய அத்தனை இயக்கங்களின் தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் என் நெஞ்சாந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. நாம் தொடர்ந்து இணைந்து போராடுவோம்! தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுப்போம்!!!


அன்புடன்
 
பண்ருட்டி தி. வேல்முருகன்.
 
தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி

































ராஜபக்சே கூட்டாளி சுப்பிரமணியசாமியை பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேட்டி

சனி, 20 செப்டம்பர், 2014


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் சேலத்தில் இன்று 20.09.2014 செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

ராஜபக்சேவை ஐ.நா.மன்றத்தில் பேச அனுமதிக்க கூடாது, ஐ.நா. மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக்குகுழுவை இங்குள்ள ஈழத்தமிழர்களிடம் விசாரணை செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும், அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும், இலங்கை மீதான பொருளாதார தடை விதிக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி சென்னையில் வருகிற 24–ந் தேதி பேரணி நடக்கிறது.

ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் எதிரில் தொடங்கி தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் பேரணி முடிவடைகிறது. இதில் 150–க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர், தமிழ் ஆதரவாளர்கள், மனித நேய பண்பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

சர்வதேச சட்டப்படி கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். நெய்வேலி என்.எல்.சியில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக வேலை கொடுக்க வேண்டும். 3 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழர் உரிமைகள் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. கத்தி படத்தை திரையிட கூடாது என்று போலீஸ் அதிகாரிகளிடம் மனு கொடுத்து உள்ளோம்.

மேலும் தமிழக மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் ராஜபக்சேவுடன் கைகுலுக்கி நட்பு பாராட்டும் சுப்பிரமணியசாமி தமிழ்நாட்டிற்குள் நுழைய விடமாட்டோம். தமிழக மீனவர்களுக்கு எதிராக அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளும் சுப்பிரமணிய சாமியை பா.ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பேட்டியின்போது மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி, மாநில அமைப்பு செயலாளர் காமராஜ், மாநில தலைமை நிலைய செயலாளர் கனல் உ.கண்ணன், ஜெயமோகன், சத்தியமூர்த்தி, தாரை செந்தில்குமார், மாநகர் மாவட்ட செயலாளர் கராத்தே வெங்கடேஷ்ட, சரவணமூர்த்தி, தவமணி, விஜயகுமார், இளைஞர் அணி சபரீஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

லைக்கா தயாரிக்கும் கத்தி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு எதிரான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் போராட்டம் - ஆயிரக்கணக்கனோர் கைது

வியாழன், 18 செப்டம்பர், 2014

இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் கூட்டாளியான லைக்கா தயாரிக்கும் கத்தி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு எதிரான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் 18.09.2014 போராட்டம் நடைபெற்றது.












கொழும்பில் நடைபெறும் ஆசிய அளவிலான கட்சிகள் மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றிருப்பதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம்






தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இனப்படுகொலையாளன் ராஜபக்சே தொடங்கி வைக்கும் கொழும்பு மாநாட்டில் பாஜக பங்கேற்புக்கு கடும் கண்டனம்:

தமிழினப் படுகொலையாளன், போர்க்குற்றவாளி ராஜபக்சே இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று 18.09.2014 தொடங்கி வைக்கும் ஆசிய அளவிலான கட்சிகள் மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றிருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் மிக நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டு ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை படுகொலை செய்ய உதவி புரிந்தது.

அதன் பின்னர் அமைந்துள்ள மோடி தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முந்தைய காங்கிரஸ் அரசை அடியொற்றியே ஈழப் பிரச்சனையில் அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி தமது பதவியேற்பு விழாவுக்கு கொடியவன் ராஜபக்சேவை அழைத்தார் பிரதமர் மோடி. அதைத் தொடர்ந்து ஈழத் தமிழர் பிரச்சனையில் முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட அதே கதைக்கு உதவாத, ஈழத் தமிழருக்கு எந்த ஒரு நன்மையும் விளைவிக்காத வெளியுறவுக் கொள்கையைத்தான் பாஜக அரசு கடைபிடித்து வருகிறது.

இதன் உச்சமாக மத்திய அரசில் எந்தப் பதவியிலுமே இல்லாத பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமி, இலங்கைக்கு இந்தியப் பிரதிநிதி போல சென்று வருகிறான். அவன் ராஜபக்சேவை சந்தித்து பேசிவிட்டு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இதுதான் என்றெல்லாம் பேசுகிறான். இந்திய பிரதிநிதிபோல பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி பேசுவதை இதுவரை பாரதிய ஜனதா மேலிடமும் கண்டித்தது இல்லை. மத்திய அரசும் கண்டித்ததும் இல்லை. அதற்கு மாறாக அவனுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது மத்திய அரசு. இதன் மற்றொரு உச்சமாக இலங்கையில் இனப்படுகொலையாளன் ராஜபக்சே தொடங்கி வைக்கும் ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டுக்கு பாரதிய ஜனதா கட்சி தனது பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளது.

 அதுவும் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றிய மாநிலமான தமிழகத்தின் பாஜக பொறுப்பாளர் முரளிதரராவை தேர்ந்தெடுத்து பாஜக மேலிடம் அனுப்பியுள்ளது. அப்படியெனில் தமிழக அரசு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கும் வக்கிரமான செயலைத்தானே பாரதிய ஜனதா கட்சி செய்கிறது. காயப்பட்டுக் கிடக்கும் தமிழகத்தின் உணர்வுகளைத்தானே கிளறிக் கொண்டிருக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற நடவடிக்கைதானே இது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் காமன்வெல்த் போன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளிலே கூட ராஜபக்சேவை அனுமதிக்கக் கூடாது என்று தமிழகம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் முக்கியத்துவம் அற்ற ஒரு அமைப்பின் அரசியல் கட்சிகள் மாநாட்டுக்கு பாரதிய ஜனதா தனது மேலிடப் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?

தன்னைப் போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாக்கவே காமன்வெல்த் மற்றும் முக்கியத்துவம் அற்ற எத்தனை சர்வதேச நாடுகளை உள்ளடக்கிய அமைப்புகள் இருக்கிறதோ அத்தனையையும் கொழும்பில் கூட வைத்துக் கொண்டிருக்கிறான் ராஜபக்சே என்பதைக் கூடவா பாரதிய ஜனதா கட்சி புரிந்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் இருந்து இளம் விளையாட்டு வீரர்கள் கூட இலங்கைக்குப் போகக் கூடாது; அப்படிப் போகிறவர்களை திருப்பி வரவழைத்து அனுப்பக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இந்த நிலையில் தமிழ்நாட்டின் தன்மானத்தை உரசிப்பார்க்கும் வகையில் ராஜபக்சே தொடங்கி வைக்கும் கொழும்பு ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டுக்கு பாஜக தமது பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பாரதிய ஜனதா கட்சி அனுப்பி வைத்த இரண்டு பிரதிநிதிகளையும் உடனே திரும்ப அழைக்க வேண்டும். இல்லையெனில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியானது ஜாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து மிக மிகக் கடுமையான எதிர்ப்பை சந்தித்து காங்கிரஸைப் போல வீழ்த்தப்படும் என்று எச்சரிக்கிறேன்.

கத்தி திரைப்பட பாடல் வெளியீடு மற்றும் பட வெளியீட்டுக்கு தடை விதிக்க கோரி தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் மனு

புதன், 17 செப்டம்பர், 2014

கத்தி திரைப்பட பாடல் வெளியீடு மற்றும் பட வெளியீட்டுக்கு தடை விதிக்க கோரி 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் கொடுக்கப்பட்ட மனு:

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் குடும்பத்தினர் 90% பங்குகளை வைத்திருக்கும் நிறுவனமான லைக்கா, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

ஏற்கெனவே இனப்படுகொலை போர்க்குற்றத்துக்காக ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்; இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்டு, தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட இந்த தமிழக சட்டமன்றத் தீர்மானத்துக்கு எதிராக ராஜபக்சே குடும்பத்தினருக்கு சொந்தமான லைக்கா நிறுவனம், கத்தி திரைப்படத்தை தயாரிக்கக் கூடாது என்று அரசியல் கட்சிகள், தமிழர் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள், சுற்றுச் சூழலியல் ஆர்வலர்கள் என 65 இயக்கங்களின் பிரதிநிதிகள் கடந்த மாதம் 19- ந்தேதி கோரிக்கை விடுத்தோம்.

அதன் பின்னர் செப்டம்பர் 6-ந் தேதியன்று 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் பிரதிநிதிகள், கத்தி திரைப்படத்தைப் பொறுத்தவரை லைக்கா தயாரிப்பில் வெளியிடப்படுவதை தொடர்ந்து உறுதியாக எதிர்க்கிறோம். இது இயக்குநர் முருகதாசுக்கோ, நடிகர் விஜய்க்கோ மற்ற கலைஞர்களுக்கோ எதிரானது அன்று. லைக்கா வெளியிடாமல் வேறு எந்த தமிழ்த் தயாரிப்பு நிறுவனம் வெளியிடுவதாயினும் கத்தி திரைப்படம் வெளியிடுவதில் நமக்கு மறுப்பு இல்லை என்று அறிவித்திருந்தோம். ஆனாலும் ஒட்டுமொத்த மொத்த தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்காமல் லைக்கா நிறுவனத்தாலேயே கத்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கையை இயக்குநர் முருகதாஸோ நடிகர் விஜயோ ஏற்கவில்லை.

தமிழ்நாட்டு சட்டமன்றத் தீர்மானத்தின் அடிப்படையிலேயே இலங்கையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் குறிப்பாக ராஜபக்சே குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனம் தமிழகத்தில் நுழைவதை அனுமதிக்க முடியாது என்பதே எங்கள் நிலைப்பாடு. தற்போது லைக்கா நிறுவனத்தின் கத்தி திரைப்படப் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பதாக இருக்கிறது. தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானத்துக்கு எதிராக, ஒட்டு மொத்த தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துக்கு எதிராக லைக்கா நிறுவனம் கத்தி திரைப்படத்தை தயாரித்து அதன் பாடல் வெளியீட்டு விழாவை தமிழ்நாட்டிலேயே நடத்துவதையும் திரைப்படத்தை வெளியிடுவதையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை காலில் போட்டு மிதித்துவிட்டு தமிழ்நாட்டின் தலைநகரிலேயே அந்த நிறுவனம் தனது பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்துவது மற்றும் கத்தி திரைப்பட வெளியீடு ஆகியவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டியது தங்களின் கடமை என்பதை 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பாகிய நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.

தமிழகத்தின் உணர்வுகளை மதித்து லைக்கா நிறுவனத்தின் கத்தி திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்வையும் கத்தி திரைப்பட வெளியீட்டையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

தி.வேல்முருகன்,

ஒருங்கிணைப்பாளர்
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

150 மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் தமிழர் பேரணியில் புதுச்சேரியில் உள்ள தமிழ் அமைப்புகளும் பங்கேற்ற தி.வேல்முருகன் கோரிக்கை



தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் 150 மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் தமிழர் பேரணி சென்னையில் 24.09.2014 அன்று நடக்கிறது. இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை ஐ.நா. மன்றத்தில் பேச அனுமதிக்க கூடாது, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டும் உள்பட 5 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தப்படுகிறது. 

இதுதொடர்பாக தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவருமான பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் புதுச்சேரியில் உள்ள தமிழ் அமைப்புகளின் தலைவர்களை நேற்று 16.09.2014 சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னையில் நடைபெற உள்ள பேரணியில் புதுச்சேரியில் உள்ள தமிழ் அமைப்புகளும் பங்கேற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டார். கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் மற்றும் புதுச்சேரியில் உள்ள 20–க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
 

Pages (26)123456 Next

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP