கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ.3,500ஆக உயர்த்தி வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வேண்டுகோள்
வியாழன், 8 ஜனவரி, 2015
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 08.01.2015 வெளியிட்டுள்ள அறிக்கை:
கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ.3,500ஆக உயர்த்தி வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள்!
2014-15ஆம் ஆண்டு கரும்புக்கான கொள்முதல் விலையாக ரூ2,650 வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார். ஆனால் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ3,500 வழங்க வேண்டும் என்பதுதான் கரும்பு விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை.
உத்தரபிரதேச மாநிலத்தில் டன் ஒன்றுக்கு ரூ.3,200, பஞ்சாபில் ரூ.3,020, அரியானாவில் ரூ.3,100 என வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த 2013-14 ஆம் ஆண்டும் ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ2,650 என்றுதான் தமிழக அரசு நிர்ணயித்தது.
தற்போது நடப்பாண்டுக்கும் அதே ரூ2,650 தான் தமிழக அரசு நிர்ணயித்திருப்பது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. கடந்த ஆண்டு கூட கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ 2,650-ல் ரூ300ஐக் குறைத்து கரும்பு டன்னுக்கு ரூ.2,350தான் தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்கின. சுமார் ரூ500 கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை பாக்கி இருக்கிறது.
இந்த தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ3,500 என உயர்த்தி வழங்கினால்தான் கரும்பு விவசாயிகளின் சுமை ஓரளவு குறைய வாய்ப்புள்ளது. இதனை தமிழக அரசு கனிவோடு பரிசீலித்து கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ3,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்; கரும்பு வெட்டுக் கூலி மற்றும் போக்குவரத்து மானியங்களையும் சர்க்கரை ஆலைகளே ஏற்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்
மேலும் கரும்பு அனுப்பிய 15 நாட்களுக்குள் முழுப் பணத்தையும் தர வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணையை சர்க்கரை ஆலைகள் பின்பற்ற கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக