Blogger இயக்குவது.

இந்தியாவில் இருந்து ஈழத் தமிழ் அகதிகளை கட்டாயமாக இலங்கைக்கு அனுப்ப கூடாது மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வேண்டுகோள்

செவ்வாய், 20 ஜனவரி, 2015

இந்தியாவில் இருந்து ஈழத் தமிழ் அகதிகளை கட்டாயமாக இலங்கைக்கு அனுப்ப கூடாது மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள்! 
 
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள்  இன்று 20.01.2015 விடுத்துள்ள அறிக்கை :

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை டெல்லியில் சந்தித்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர, இந்தியாவில் இருந்து ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து விவாதித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சிங்களப் பேரினவாதத்தின் இனப்படுகொலை வெறியாட்டத்தில் இருந்து தப்பிக்கவே தமிழ்நாட்டுக்கு ஈழத் தமிழர்கள் வாழ்விடங்களையும் உறவுகளையும் விட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதுமென்று அடைக்கலம் தேடி வந்தனர். இந்த மண்ணில் எந்த ஒரு அடிப்படை உரிமைகள் ஏதும் இல்லாத கொட்டடி முகாம்களிலே பெரும் துயரை பல்லாண்டுகாலம் அனுபவித்தும் வருகின்றனர்.

அத்துடன் சிறப்பு அகதிகள் முகாம் என்ற பெயரில் சிறைச்சாலைகளிலும் பலர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் ஒரு அங்கமான தமிழ்நாட்டின் 8 கோடி மக்களின் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழ் அகதிகள் மீது இந்நாள் வரை எந்த ஒரு கரிசனத்தையும் இந்தியப் பேரரசு காட்டியது இல்லை. அவர்களுக்கான உதவியை மாநில அரசுதான் செய்து வருகிறது.

ஆனால் திபெத் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு தஞ்சம் கோரி வந்த திபெத் அகதிகளோ, இந்தியாவுக்குள் தாங்கள் வாழும் பகுதியை ஒரு தனிநாடு போல் அமைத்து வாழ்வதற்கு அத்தனை வசதிகளையும் உரிமைகளையும் இந்தியப் பேரரசு செய்து கொடுக்கிறது. எத்தனையோ முறை தமிழ்நாடு இதனை சுட்டிக்காட்டியும் இந்தியப் பேரரசு கண்டுகொண்டதே இல்லை.

இந்த நிலையில் திடீரென இலங்கைக்கு ஈழத் தமிழ் அகதிகளை அனுப்புவது குறித்து இலங்கை அமைச்சருடன் இந்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியிருப்பது பல்வேறு அச்சங்களை எழுப்பியுள்ளது.

இந்தியாவில் முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் தாங்களாகவே முன்வந்து தமிழீழத் தேசத்துக்கு திரும்பிச் செல்கிறோம் என்று விண்ணப்பித்திருந்தால் மட்டுமே அவர்கள் தாய் மண்ணுக்கு திரும்புவதற்கு இந்திய அரசு உதவ வேண்டும். இலங்கையில்தான் நிலைமை சரியாகிவிட்டதே என்று பொய்யான காரணத்தை கூறி ஈழத் தமிழ் அகதிகள் அனைவரையும் கட்டாயமாக இலங்கைக்கு திருப்பி அனுப்புகிற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கிறோம்.

தமிழீழத் தேசத்தில் இன்னமும் சிங்களப் பேரினவாத படைகள் குவிக்கப்பட்டுத்தான் இருக்கின்றன. தமிழீழத் தேசத்தில் எங்கள் சகோதரிகளை சிங்கள ராணுவ காடையர்கள் சொல்லொண்ணா துயரத்துக்குள்ளாக்கி வருகிற கொடூரம் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் அதிபர்களும் பிரதமர்களும் மாறிவிட்டதாலேயே பேரினவாத ஒடுக்குமுறை ஒழிந்துபோய்விடவில்லை.

புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன, தேர்தலின் போதே தமிழீழத் தேசத்தில் இருந்து சிங்களப் படைகளை விலக்கமாட்டோம் என்று அறிவித்த நபர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். ஆகையால் ஈழத் தமிழ் அகதிகளை ஒருபோதும் வலுக்கட்டாயமாக இந்திய மண்ணில் இருந்து இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கையை இந்தியப் பேரரசு மேற்கொள்ளவே கூடாது. இதனை இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசும் மாண்புமிகு முதல்வர் அவர்களும் வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
 
பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP