Blogger இயக்குவது.

ரயில் கட்டண உயர்த்த பரிந்துரை அளிக்கும் டி.கே. மிட்டல் குழு பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தல்

வியாழன், 1 ஜனவரி, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 01.01.2015 வெளியிட்ட அறிக்கை:
மீண்டும் ரயில் கட்டண உயர்வா? மிட்டல் குழு பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்!!


2015ஆம் ஆண்டு பிறந்த முதல் நாளே நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 'ரயில் கட்டணங்களை' மத்திய அரசு உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரயில்வே துறைக்கான வருமானங்களை அதிகரிப்பதற்காக ரயில்வே அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட டி.கே. மிட்டல் குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது.

இந்த மிட்டல் குழு தமது பரிந்துரையில், 2 மாதத்துக்கு ஒரு முறை புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணங்களை உயர்த்திக்கொள்ளலாம்; - சாலைப் போக்குவரத்து கட்டணங்களுக்கு இணையாக சுமார் 60% கட்டணங்களை அதிகரிப்பதன் மூலம் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணங்களை கடுமையாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது உறுதியாகி இருக்கிறது. மத்தியில் பாரதிய ஜனதாவின் மோடி அரசு அமைந்த உடனேயே வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், "ரயில் பயணிகள் கட்டணம் 14.2 விழுக்காடும் சரக்கு ரயில் கட்டணம் 6.5 விழுக்காடும் உயர்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் ரயில் கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும் என்பதில் மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த 6 மாத காலத்தில் எரிபொருள் விலை மிகக் கடுமையாகவே குறைந்துள்ளது. இதனால் ரயில் கட்டணங்களை கணிசமாக குறைக்கத்தான் வேண்டுமே தவிர சாமானிய மக்களை நசுக்கும் வகையிலான கட்டண உயர்வு நடவடிக்கையை மேற்கொள்வது கண்டனத்துக்குரியது.

மக்களுக்கு ஏற்றத்தையும் மாற்றத்தையும் கொண்டுவருவோம் என்ற முழக்கத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய பாரதிய ஜனதாவின் மத்திய அரசு, சாமானிய மக்களை பற்றி கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல் மீண்டும் மீண்டும் சுமையைத் திணித்துக் கொண்டிருக்கிறது.

மிக மிக அதிகமான பேருந்து கட்டணங்களால் நிலைகுலைந்து போகும் சாமானிய ஏழை மக்கள், கூலித் தொழிலாளர்கள் மாணவர்கள், ரயில்களை நம்பித்தான் பயணங்களைத்தான் மேற்கொண்டு வருகின்றனர். இப்போது இந்த ரயில் பயணங்களும் கூட எட்டாக்கனியாகும் எனில் யாருக்காக இந்த மத்திய அரசு?

ஆகையால் ரயில் கட்டணங்களை மீண்டும் மீண்டும் உயர்த்தி அடித்தட்டு மக்கள் மீது சுமையை ஏற்றாமல் உயர்த்தப்பட்ட ரயில் கட்டணங்களை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP