Blogger இயக்குவது.

கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

ஞாயிறு, 16 ஜூன், 2013

கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, தருமபுரியில் சனிக்கிழமை (15/06/2013) நடைபெற்ற  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்தக் கூட்டத்துக்கு, மாநிலத் துணைப் பொதுச் செயலர் தவமணி தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், மலர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் திருமால்வளவன், மகளிரணிச் செயலர் ஜெயலட்சுமி, மாநில வழக்குரைஞர் அணி தலைவர் காந்திகுமார், துணைச் செயலர் சரவணன், மாவட்ட தலைவர் முன்சீப் செல்வம், மாவட்ட செயலர்கள் முனிரத்தினம், பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கட்சியின் நடவடிக்கைகள் குறித்துப் பேசினர்.
 
கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு சில இடங்களில் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள், ஊராட்சிகள் பயன்பெறும் வகையில், போர்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். இந்தத் திட்டத்துக்காக சாலையில் தோண்டப்பட்ட குழிகளால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் மோசடைந்துள்ளன. எனவே, அனைத்து சாலைகளையும் புதுப்பிக்க வேண்டும்.

2. ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக அனைத்து வங்கிகளையும் கல்விக் கடன் வழங்க மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. ஆனால், பல்வேறு வங்கிகள் கல்விக் கடனை வழங்காமல் மாணவர்களை அலைக்கழித்து வருகின்றன. இத்தகைய வங்கிகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
3. மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்த பிறகும் பல்வேறு தனியார் பள்ளிகளில் நுழைவுத் தேர்வு, கலந்தாய்வு பயிற்சி என்ற பெயரால் கொள்ளை லாபம் ஈட்டி வருவதைக் கண்காணித்து தடை செய்ய வேண்டும். 

4. விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க தமிழக அரசு அனுமதி மறுத்திருப்பது பாராட்டுக்குரியது. தடங்கம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் கொட்டப்படும் தருமபுரி நகராட்சி கழிவுகளால் சுற்றுப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவி சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கழிவுகளை வேறு இடத்தில் கொட்ட நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
 
5.வெண்ணாம்பட்டி, குமாரசாமிப்பேட்டை, அதியமான்கோட்டை, பாப்பாரப்பட்டி ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அறிவிப்பு வெளியாகியும் பணிகள் மெதுவாக நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை துரிதமாக முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP