அரசு பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்றப்படுவதை கண்டித்து கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம்
செவ்வாய், 18 ஜூன், 2013
தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 80% ஒதுக்கீடு வழங்கக்கோரியும், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் நேற்று (17/06/2013) அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் வேலுமணி தலைமை வகித்தார். தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் பிரேம்குமார், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் இளம்பரிதி, தமிழ்த் தேசிய குடியரசு இயக்க மாவட்டச் செயலாளர் ஒப்புரவாளன், தமிழர் தேசிய இயக்க மாவட்டத் தலைவர் முருகேசன், மதிமுக நகரச் செயலாளர் சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் தொடங்கும் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளை தமிழ் வழி வகுப்புகளாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, தனியார் பள்ளிகள் அனைத்திலும் தமிழைக் கட்டாய மொழிப் பாடமாகவும், கட்டாயப் பயிற்று மொழியாகவும் இருக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும். அரசுப் பள்ளிகளில் விளையாட்டுத் திடல், கழிப்பறைகள் கட்டாயம் செயல்பட வேண்டும். விளையாட்டு, இசை, ஓவியம் ஆகிய துறைகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக