Blogger இயக்குவது.

பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் இணைந்திருப்பது என்பது சந்தர்ப்பவாத கூட்டணி - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேட்டி

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் நெய்வேலியில் ’தி இந்து’ வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

கேள்வி: கடந்த காலங்களில் தி.மு.க.வுடன் நெருக்கமாக இருந்து வந்தீர்கள், திடீரென அ.தி.மு.க.வை ஆதரிக்கின்றீர்களே?

பதில்: ஈழத்தில் தமிழர்களுக்கும், தமிழினத்திற்கும் எதிராக நடந்த படுபாதக செயல்களை வேடிக்கை பார்த்தது மட்டுமின்றி, அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்த மத்திய காங்கிரஸ் அரசுக்கும் அதனுடன் இருந்த தி.மு.க.விற்கும் பாடம் கற்பிக்கவேண்டும். எங்களின் கொள்கையான தனித் தமிழ் ஈழமே இலங்கைத் தமிழர்களின் இன்னல்களுக்கு ஒற்றைத் தீர்வாக அமையும் என்பதை உள்வாங்கி, வாய்ப்பு கிடைத்தால் அதை நிறைவேற்றித் தருவேன் என கூறிய அ.தி.மு.க.வை ஆதரிக்க முடிவெடுத்தோம். சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யவேண்டும் என்ற சட்டமன்றத் தீர்மானமும் எங்களை அ.தி.மு.க.பக்கம் இழுத்தது.

கேள்வி: வரும் காலங்களிலும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடருமா?

பதில்: ஈழத்தமிழர் பிரச்சினை, காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, கெயில் நிறுவன குழாய் பதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக அ.தி.மு.க தற்போது என்ன நிலையில் உள்ளதோ, அந்த நிலை வருங்காலத்திலும் தொடர்ந்தால், நிச்சயமாக நாங்களும் வரு சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணியைத் தொடருவோம்.

கேள்வி: 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிடுமா?

பதில்: கண்டிப்பாக போட்டியிடுவோம்.

கேள்வி: இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை?

பதில்: கட்சி தொடங்கி 3 ஆண்டுகள்தான் ஆகிறது. தமிழ் சமூகத்துக்காக தமிழக மக்களின் நலன்களுக்காக குரல் கொடுக்கிற உத்தரவாதம் தந்து, தேர்தல் களத்தில் வாக்கு கேட்கிற அரசியல் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் நாங்கள் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரிக்கும் முடிவை எடுத்தோம்.

கேள்வி: எதிரும் புதிருமாய் சீறிக்கொண்டிருந்த பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் ஓரணியில் இணைந்திருக்கிறதே?

பதில்: பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் இணைந்திருப்பது என்பது சந்தர்ப்பவாத கூட்டணி. கூட்டணி அமையும்வரை விஜயகாந்தை தரக்குறைவாகப் பேசிவந்த ராமதாஸை, தே.மு.தி.கவினர் எப்படி ஏற்றுக்கொள்வர்? இது ராமதாஸின் சுயநல, குடும்ப உறுப்பினர்களை ஆட்சி அதிகாரத்தில் கோலோச்ச வைக்க வேண்டும் என்ற நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. இரு கட்சிகள் இடையே கூட்டணி என்ற வார்த்தையை எழுதிப் படிக்க முடியுமே தவிர, அவை நடைமுறையில் சாத்தியமில்லை. இரு கட்சித் தொண்டர்களும் உணர்வுபூர்வமாக தேர்தல் களப்பணியாற்ற முடியாது என்பது இரு கட்சியினருக்கும் தெரிந்த ஒன்றுதான். சிங்கங்கள் ஒருபோதும் சிறு நரியிடம் மண்டியிடாது எனக் கூறிவந்த ராமதாஸ் 8 சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு தற்போது எப்படி விஜயகாந்திடம் மண்டியிட்டார்?

கேள்வி: தமிழகத்தில் பா.ஜ.க.கூட்டணி கட்சிகளிடையே இணக்கமான சூழல் உள்ளதா?

பதில்: முரண்பட்ட கூட்டணி பா.ஜ.க.கூட்டணி, பா.ம.க.வாக்குகள் தே.மு.தி.க.விற்கு செல்லாது, அதே போன்று தே.மு.தி.க.வாக்குகள் பா.ம.க.விற்கு செல்லாது என்பதற்கு விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கேப்டன் வாழ்க கோஷமிடாமல் இருந்த பா.ம.க. தொண்டன் கண்ணதாசன் என்பவரை, தே.மு.திக. தொண்டர்கள் அடித்தே கொலை செய்திருக்கிறார்கள் என்பதே உதாரணம். இணக்கமே இல்லாத நிலையில் இவர்கள் எப்படி வெற்றிபெற முடியும்?.

கேள்வி: தேர்தலுக்குப் பிறகு பா.ம.க.நிலை என்னவாகும்?


பதில்: ராமதாஸைப் பொறுத்தவரை வன்னியர் என்ற போர்வையில், வன்னியர்களை பலிகடாவாக்கி, தானும், தனது குடும்பமும் வாழ வேண்டும் என்று நினைப்பாரே தவிர, வன்னியர்களின் நலன் சார்ந்து எதையும் செய்யமாட்டார். தற்போது நடைபெறுகிற தேர்தலில் தனது மகன் போட்டியிடும் தருமபுரி தொகுதியில் தான் மட்டுமின்றி, மனைவி, மகள்கள், மருமகளுடன் சென்று வாக்காளர்களிடம் மடிப்பிச்சை கேட்கின்றனர். அதேநேரத்தில் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் இதர வன்னிய வேட்பாளர்களின் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யாதது ஏன்?

அதேபோன்று தனது சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் ஏற்கெனவே பா.ம.க.வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, பின்னர் அத்தொகுதிகளை தே.மு.தி.க.விடம் விட்டுக்கொடுத்தார். ஆனால், புதுச்சேரியில் போட்டியிடும் தனது மச்சான் மகன் அனந்தராமனை விட்டுக்கொடுக்க முன் வரவில்லையே. இதிலிருந்தே புரியவில்லையா, ராமதாஸின் சுயநலம் எந்த அளவுக்கு உள்ளது என்று எனவே தேர்தலுக்குபின், பா.ம.க.வில் எஞ்சி இருப்பவர்களும் எங்களிடம் வந்துவிடுவார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP