தமிழர்களை மரியாதையற்ற இனமாக மத்திய அரசு பார்ப்பது கண்டனத்துக்குரியது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உண்மை அறியும் குழு அறிக்கை ஒன்றை கோவையில் வெளியிட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
''ஆந்திராவில் 20 அப்பாவி தமிழர்கள் விலங்குகளை போல இழுத்து கொண்டு செல்லப்பட்டு, தலைகீழாக தொங்க வைத்து அடித்து சித்ரவதை செய்து படுமோசமாக மார்பிலும், நெஞ்சிலும் சுட்டுக்கொன்றுள்ளனர். ஆனால், மத்திய அரசு தனது கண்டனத்தை கூட பதிவு செய்யவில்லை. குறைந்த பட்சம் அனுதாபத்தை கூட தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங்களும் சி.பி.ஐ. விசாரணை தேவை என வலியுறுத்தினோம். ஆனால், அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். இறந்தவரின் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரினோம். இது எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
ஆந்திரா மாநில சிறைகளில் உள்ள 3 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஆந்திர காவல் நிலையங்கள் மற்றும் வன அலுவலகங்களில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களை விடுவிக்க வேண்டும். ஆந்திராவில் உள்ள அரசியல் கட்சியினர்களில் பல எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு செம்மரக்கடத்தலில் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அவ்வளவு ஏன் இரு முதல்வர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
அவர்களை எல்லாம் விட்டு, எதுவும் தெரியாத அப்பாவி தமிழர்கள் 20 பேரை சுட்டுக்கொன்றது எந்த வகையில் நியாயம்? ஏற்கனவே ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பின்னர் 9 பேர் செம்மரம் கடத்தியதாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இப்போது 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மொத்தம் 36 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இறுதியாக கொல்லப்பட்ட 20 பேர் மீது எந்த வழக்கும் இதுவரை பதிவாகவில்லை.
தமிர்களை இந்தியர்களாகவோ, மனிதர்களாகவோ மத்திய அரசு பார்க்கவில்லை என்பதை தான் இது காட்டுகிறது. அண்டை மாநிலங்களில் தமிழர்களை தாக்கும் போதெல்லாம் மத்திய அரசு வேடிக்கை தான் பார்க்கிறது. தமிழர்களை மரியாதையற்ற, வாழ்வுரிமை இழந்த இனமாக பார்க்கிறது. இந்தியாவில் வேறு ஏதாவது மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மனித உயிருக்கு உலக நாடுகளில் ஆபத்து ஏற்பட்டால், வெளியுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகள் செல்கின்றனர். பேச்சு நடத்துகின்றனர். மத்திய அரசு எதிர்வினையாற்றுகிறது.
ஆனால், அநியாயமாக 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மத்திய அரசு துளியும் கண்டுகொள்ளாமல், குறைந்த பட்சம் அனுதாபம் கூட தெரிவிக்காமல் இருக்கும் போக்கு கவலைக்குரியது மட்டுமல்ல கண்டனத்துக்குரியது. இதையெல்லாம் கண்டித்து வரும் ஏப்ரல் 28-ம் தேதி, தமிழர் நீதி பேரவை சார்பில், பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் பங்கேற்கும் பேரணி சென்னை பனகல் மார்க் முன்பிருந்து நடக்கவிருக்கிறது. மத்திய அரசு இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்திய நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடும்.
தமிழக அரசு மேலோட்டமாக சொல்லாமல், சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். மூத்த அமைச்சர் தலைமையில் ஒரு குழு அமைத்து ஆந்திர அரசுடன் பேசி இன்னும் ஒரு உயிர் கூட போகாமல் தடுக்க, சிறையில் உள்ள அப்பாவி தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
Read more...