நெல் மூட்டைகளில் மண்ணை கலப்படம் செய்து மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை
வெள்ளி, 3 ஏப்ரல், 2015
நெல் மூட்டைகளில் மண்ணை கலப்படம் செய்து மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிவகங்கை மாவட்டத்தில் தனியார் செங்கல் சூளை ஒன்றில் அரசுக்கு சொந்தமான 650 கலப்பட நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அங்காடிமங்கலத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் மர்மமான முறையில் லாரிகளில் நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டது அப்பகுதி மக்களிடத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அந்த செங்கல் சூளையில் 40 கிலோ கொண்ட ஒரு நெல் மூட்டையில் 5 கிலோ மண்ணை அள்ளிப்போட்டு எடையை அதிகரிக்கும் மோசடி அரங்கேறிக் கொண்டிருந்தது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்தில் 650 நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு நெல் மூட்டையில் மண்ணை கொட்டி மோசடியில் ஈடுபட்டிருந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
அதாவது விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை அந்த செங்கல் சூளைக்கு கொண்டு சென்று செம்மண், சவுடுமண், பச்சை செங்கற்கள் ஆகியவற்றைக் கலந்து எடையை அதிகரித்த பின்னர் அவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான சணல் சாக்குகளில் பிடித்து கப்பலூர் கிட்டங்கியில் கொண்டு சேர்த்துள்ளனர்.
தற்காலிக நெல் கொள்முதல் மையங்களில் இருந்து வரும் மூட்டைகளுடன் இந்த கலப்பட மூட்டைகளையும் சேர்த்துவிட்டு வியாபாரிகள் கொள்ளை லாபமடித்துள்ளனர்.
இதற்கு சில அதிகாரிகளும் உடந்தை எனக் கூறப்படுகிறது.
இப்படி சாதாரண மக்கள் பயன்படுத்துகிற நெல்மூடைகளில் மண்ணைக் கொட்டி அரசை ஏமாற்றுகிற மோசடி பேர்வழிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய மோசடிகளுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக