Blogger இயக்குவது.

20 தமிழர்களைப் படுகொலை செய்த ஆந்திர அரசைக் கண்டித்தும், மத்திய அரசு நீதி விசாரணைக்கும், சி.பி.ஐ புலன் விசாரணைக்கும் உத்தரவிட வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் 28.04.2015 அன்று ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் தமிழர் நீதிப் பேரணி

திங்கள், 27 ஏப்ரல், 2015

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் தமிழர் நீதிப் பேரணி
இருபது தமிழர்களைப் படுகொலை செய்த ஆந்திர அரசைக் கண்டித்தும், மத்திய அரசு நீதி விசாரணைக்கும், சி.பி.ஐ புலன் விசாரணைக்கும் உத்தரவிட வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் தமிழர் நீதிப் பேரணி
அன்புடையீர் ,வணக்கம் 
சென்ற ஏப்ரல் 6ஆம் நாள் நள்ளிரவில், 7ஆம் நாள் அதிகாலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் வட்டம் திருப்பதி வனப்பகுதியில் இருபது ஏழைத் தமிழர்களின் உயிரைப் பறித்தது மோதல்சாவு அல்ல, பொய்மோதல் படுகொலைதான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விட்டது. கொல்லப்பட்டவர்களில் பலரையும் தமிழகத்திலிருந்து ஆந்திரக் காவல் படை கடத்திச் சென்றதற்கும், அவர்களைக் கொடிய முறையில் சித்திரதை செய்த பிறகே படுகொலை செய்ததற்கும், ஓரிடத்தில் கொன்று பிறிதோரிடத்தில் பிணங்களை வீசியதற்கும் மறுக்க முடியாத சான்றுகள் வெளிவந்து விட்டன.
“செம்மரம் வெட்டியதால் சுட்டோம், இனியும் சுடுவோம்” என்று ஆந்திர வனத்துறை அமைச்சரே இறுமாப்புடன் அறிவிக்கிறார். உயிரிழந்த ஏழைத் தமிழர்களுக்காகத் துயரம் தெரிவிக்கும் பண்பு கூட ஆந்திர அரசுக்கு இல்லை. மோதல்-சாவு நேரிடும் போதெல்லாம் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றக் கட்டளையைக் கூட ஆந்திர அரசு மதிக்க வில்லை என்பது ஆந்திர உயர் நீதிமன்றத்திலேயே வெளியாகி விட்டது.
நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு ஆந்திரப் படுகொலை குறித்து வாயே திறக்கவில்லை. ஒழுக்கம் தவறியவள் என்று ஒருத்தியைக் கல்லால் அடித்துக் கொல்ல நினைத்தவர்களிடம் “குற்றமில்லாதவன் முதல் கல்லை வீசட்டும்” என்று இயேசு கிறிஸ்து அழைத்தது போல் நாம் இப்போது அழைத்தால் கல்லெடுத்துப் போட எந்த அரசுக்கும் தகுதியில்லை. மோதல் படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து எந்த அரசும் தப்ப முடியாது. அதிலும் மோதல்-படுகொலைகளுக்குப் பேர்போன மாநிலம் ஆந்திரம். பேர்போன முதல்வர் சந்திரபாபு நாயுடு.
1) நடந்த கொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமானால், குற்றமிழைத்த காவல் படையினர் மீதும் அவர்களுக்கு ஆணையிட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் மீதும் கொலை மற்றும் சதி வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். அவர்களைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். இவ்வழக்கின் புலனாய்வை நடுவண் புலனாய்வு நிறுவனத்திடம் (சி.பி.ஐ.) ஒப்படைக்க வேண்டும்.
2) உண்மையான செம்மரக் கடத்தல் குற்றவாளிகளையும், மோதல் படுகொலை பற்றிய உண்மையையும் கண்டறிந்து வெளிப்படுத்தபொறுப்பில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
3) செம்மரக் கடத்தல் வழக்குகளில் ஆந்திரச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். மரம் வெட்ட அழைத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருக்கும் (சரியாகச் சொன்னால் காணாமலடிக்கப்பட்டிருக்கும்) நூற்றுக்கணக்கான தமிழர்களைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4) கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் இருபத்து ஐந்து இலட்சம் ரூபாய் வீதம் ஆந்திர அரசிடம் இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்காவது தமிழக அரசு வேலை கொடுக்க வேண்டும்.
5) பிழைப்புத் தேடி உயிரைப் பணயம் வைத்து மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் நிலைக்கு நிர்ப்பந்திக்கும் சமூகப் பொருளியல் காரணிகளைக் களைவதற்குத் தமிழக அரசு அவசரத் திட்டம் வகுத்துச் செயல்பட வேண்டும்.
கொலைகார ஆந்திர அரசையும், கொலைக்கு உடந்தையான இந்திய அரசையும் கண்டித்தும், மேற்கண்டக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகின்ற 28.04.2015 செவ்வாய்க் கிழமை மாலை 3மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகிலிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகை நோக்கி தமிழர் நீதிப் பேரணி நடைபெறும். தமிழக கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் இப் பேரணிக்கு சாதி மத கட்சி எல்லைகளை கடந்து தமிழர்களாய் ஆயிரமாயிரமாய் அணிதிரண்டு வருக!

அன்புடன்
தி.வேல்முருகன்
ஒருங்கிணைப்பாளர் 
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP