Blogger இயக்குவது.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பதிலாக மாற்று மின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் : தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன்

புதன், 14 மார்ச், 2012

கிருஷ்ணகிரி: 
       கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பதிலாக மாற்று மின் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் கிருஷ்ணகிரியில் தெரிவித்தார்.
 
      கிருஷ்ணகிரியில் நடந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்துகொண்ட  நிறுவனர் தி.வேல்முருகன் பேட்டியளித்தார். 

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் அளித்த  பேட்டி 

        எங்கள் கட்சி தமிழகத்தில் எந்த கட்சிக்கும், எந்த சாதிக்கும் எதிரான கட்சி அல்ல. தமிழக மக்களின் நதிநீர் உரிமைகளை காக்கவும், கச்சத்தீவை மீட்பதும் எங்களின் முக்கிய குறிக்கோள்.  இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவை ஐ.நா. சபை மூலம் போர்குற்றவாளியாக அறிவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் மாதம் 15ம் தேதி கிருஷ்ணகிரியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
 
        அணுஉலை என்பது உலகம் முழுவதும் இருக்க கூடாது என்பதுதான் எங்களின் குறிக்கோள். கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை விடுத்து விட்டு, மாற்று மின்திட்டங்களான காற்றாலை, நீர்மின் நிலையம், கடல் நீர் மற்றும் கடல் பாசியில் இருந்து மின்சாரம் தயாரித்தல், நமது நாட்டில் கிடைக்கும் கனிம வளங்களில் இருந்து மின்சாரம் தயாரித்தல் போன்ற மாற்று மின்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் சாத்தியக்கூறு உள்ளது. ஆனால், மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப்போக்கால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தமிழகம் இருளில் மூழ்கியுள்ளது. மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கூடாது. 
         மக்களின் உணர்வு ரீதியான போராட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். தமிழகம் இருளில் மூழ்கி கிடக்கும் இந்த சூழ்நிலையில் கூட நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.  தமிழகத்திற்கு மின் பற்றாக்குறை உள்ள இந்த சூழ்நிலையில் மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்தி விட்டு, தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் தங்கள் தேவைக்கு போக மீதம் உள்ள உபரி நீரைத்தான் தமிழகத்திற்கு வழங்கி வருகிறது. அதேபோல் தமிழகத்திற்கு தேவைப்படும் மின்சாரம் போக மீதம் உள்ள உபரி மின்சாரத்தை மட்டுமே பிற மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.
 
       எப்போதெல்லாம் பொதுமக்களும், வன்னிய இன மக்களும் பாமகவை புறக்கணிக்கிறார்களோ அப்போதெல்லாம் பாமக சாதி அரசியலை கையில் எடுக்கும். இப்போது ஒட்டுமொத்த வன்னியர் இன மக்களும் பாமகவை புறக்கணித்து விட்டனர். அதனால் புதிய அரசியல், புதிய நம்பிக்கை என பாமக சாதி அரசியலை கையில் எடுத்துள்ளது. இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
 
      பேட்டியின் போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் தீரன், பொதுச் செயலாளர் காவேரி, இணை பொதுச் செயலாளர் போரூர் சண்முகம், பொருளாளர் காமராஜ், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் விஜயக்குமார், தவமணி, மாவட்ட அமைப்பாளர்கள் வேல்மணி, ரமேஷ், பாரதி ராமச்சந்திரன், டாக்டர் முனிரத்தினம் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP