கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்ற தலைமைச் செயலகத்தைப் முற்றுகையிடும் போராட்டம்
செவ்வாய், 30 அக்டோபர், 2012
சென்னை:
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி போராடி வரும் அணு உலை எதிர்ப்பாளர்கள் 29/10/2012 சென்னை தலைமைச் செயலகத்தைப் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது . இந்த போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ம.தி.மு.க, பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி,,நாம் தமிழர் கட்சி, மற்றும் தமிழர்கள் கூட்டமைப்பு, தமிழ் தேசிய விடுதலை இயக்கம் உள்பட மீனவர்கள் சங்கங்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தொழிற்சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.
முற்றுகை போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் தொண்டர்களை வழியிலேயே தடுத்து கைது செய்ய 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து இருந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்து போராட்டத்துக்கு வந்தவர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டார்கள். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில் கலந்து கொள்ள ஆயிரக் கணக்கானவர்கள் காலை முதலே திரண்டிருந்தனர். முற்றுகை போராட்டத்தை பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார். ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பா.ம.க. சார்பில் வியனரசு, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி பேராசிரியர் தீரன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் ஒரே மேடையில் கண்டன உரை நிகழ்த்துகிறார்க்ள.
ஆர்ப்பாட்டத்தில் பழ.நெடுமாறன் பேசியது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி கடந்த 450 நாட்களாக மக்கள் போராடி வருகிறார்கள். அறவழியில் போராடும் மக்களை அடக்கு முறையில் ஒடுக்க பார்க்கிறார்கள். அறவழி போராட்டத்தை யாராலும் ஒடுக்க முடியாது. அணு உலையை மூடும் வரை போராட்டம் தொடரும்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:
கூடங்குளம் போராட்ட குழுவினரை மத்திய மாநில அரசுகள் நசுக்கி வருகிறது. பொய் வழக்கு, அடக்கு முறை போராட்டத்தை நசுக்க முடியாது என்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இழுத்து மூடு இழுத்து மூடு அணுமின் நிலையத்தை இழுத்து மூடு 144 தடை உத்தரவை வாபஸ் வாங்கு. இவ்வாறு அவர் பேசினார்.
கூடங்குளத்தில் இருந்து போலீசாரை வெளியேற்று என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். வைகோ, பழ.நெடுமாறன், வேல்முருகன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்பட அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வேளச்சேரி மணிமாறன், தமிழக வாழ்ரிமை கட்சி நிர்வாகிகள் காமராஜ், காவேரி, சண்முகம், யூனுஸ்கான், வாசுதேவன், ஜெயலட்சுமி, விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் பாலாஜி, இரா.செல்வம்,சி.பி.எம். மக்கள் விடுதலை இயக்க நிர்வாகிகள் சிதம்பரநாதன், பாண்டியன், பாலசுந்தரம், குமார் உள்பட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.