கர்நாடகத்துக்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தைத் தடுத்து நிறுத்தி தமிழர் உரிமையை வென்றெடுக்க அணி திரள பண்ருட்டி வேல்முருகன் அறைகூவல் விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை
கர்நாடகம் கைவிரிக்கஉச்சநீதிமன்றமும் இழுத்தடிக்க இனியும் பொறுமை ஏன்? ஓரணியில் திரள்வோம் தமிழர்களே!
காவிரி நதிநீர் கோரி தமிழக முதல்வர் பெங்களூர் சென்று நடத்திய பேச்சுவார்த்தையை அலட்சியம் செய்து சொட்டு நீரையும்கூட தரமறுத்திருக்கிறது கர்நாடகம். உச்சநீதிமன்றமோ இன்று கூட விசாரணையை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தின் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளிலோ சம்பா பயிர் கருகிப் போய் விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டி வருகிறது. காவிரி நதிநீரில் தமிழகத்துக்கு உரிய நியாயமான பங்கினைப் பெற்றுத்தர மத்திய அரசு தவறிவிட்டது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட அதை செயல்படுத்த மறுக்கிறது கர்நாடக அரசு. அந்த கர்நாடக மாநில அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் மறுப்பதுடன் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தமிழகத்துக்கு உத்தரவிடுவது எந்தவகையில்தான் நியாயமோ? இதுதான் இந்திய ஒருமைப்பாடா?
இப்படித்தான் வழக்கு விசாரணை என்று நடந்து கொண்டிருக்க குறுவை சாகுபடி பொய்த்துப் போனது.. தற்போது சம்பா பயிரையும் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்.. தமிழக விவசாயிகளோ குடும்பம் குடும்பாக தற்கொலை செய்து கொள்ளப் போகும் ஒரு பேரவலம் காவிரி டெல்டா பிரதேசத்தில் நடந்தேறத்தான் போகிறது. தமிழகத்துக்கு உரிமைக்காக நியாயமான வழிகளில் போராடி வரும் தமிழக அரசு, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஒருமித்த ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இதேபோல் இனியும் கர்நாடகத்திடம் நீதி கிடைக்காது என்பதால் தமிழகத்து நெய்வேலி மின்சாரம் கர்நாடகத்துக்கு செல்வதைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே தீர்வாக அமையும்! சாதி, மத, கட்சி, எல்லைகளைக் கடந்து தமிழர்களாய் ஒன்று திரண்டு கர்நாடகத்துக்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தைத் தடுத்து நிறுத்தி தமிழர் உரிமையை வென்றெடுக்க அணி திரள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறைகூவல் விடுக்கிறது!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக