எந்த மதத்தை சேர்ந்த வரும் எந்த கட்சியில் உள்ளவர்களும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணையலாம்: பண்ருட்டி தி.வேல்முருகன்
செவ்வாய், 27 மார்ச், 2012
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில தலைவர் ப்ண்ருட்டி தி. வேல்முருகன் கோவையில் அளித்த பேட்டி :
தமிழக மக்கள் இழந்து வரும் வாழ்வுரிமையை மீட்கவும் பிரிந்து கிடக்கும் தமிழகத்தை ஒன்று சேர்க்கவும், சாதி, பேதமற்ற தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் கட்சியை தொடங்கியுள்ளேன். எந்த மதத்தை சேர்ந்த வரும் எந்த கட்சியில் உள்ளவர்களும் எங்கள் கட்சியில் இணையலாம். எங்கள் கட்சிக்கு பச்சை, மஞ்சள், சிவப்பு நிற கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் சமம் என்ற அமைப்பில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். அதே போல் இந்திய அரசியல் சட்டத்தையும் மாற்றி அமைக்க வேண்டும்.
முல்லைப்பெரியாறு, பாலாறு விவகாரத்தில் சட்டசபையில் குரல் கொடுத்துள்ளேன். கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினைக்கு காந்திய வழியில் போராடும் மக்களுக்கு தண்ணீர், பால் கொடுக்காமல் வாழ்வுரிமையை நசுக்கி வருகின்றனர். வளர்ந்த 22 நாடுகள் அணு உலை வேண்டாம் என்று மூடி விட்டன. 15 நாடுகள் மூட முடிவு செய்துள்ளன. வளர்ந்து வரும் நாடான இந்தியா அணு உலை மூலம் மின்சாரம் தயாரிப்பது ஏற்புடையதல்ல. கூடங்குளம் அணு மின் நிலையம் திறக்கப்பட்டால் தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறுகிறார். நெய்வேலியில் தயாரிக்கப்படும் 2800 மெகாவாட் மின்சாரத்தில் 2600 மெகாவாட் மின்சாரம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. 200 மெகாவாட் தான் தமிழகத்துக்கு கிடைக்கிறது.
அதை தமிழகத்துக்கு திருப்பி விட வேண்டியதுதானே. தானே புயல் பாதிப்பையே சீர்படுத்த முடியவில்லை. கூடங்குளத்தால் ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் அதை ஈடு செய்ய முடியாது. ஐ.நா. மனித உரிமை குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெறும் கண் துடைப்புதான். இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளி வாய்க்கால், மட்டக்களப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். ஐ.நா. மனித உரிமை குழுவில் இலங்கையை கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. இப்போது அது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு கடிதம் எழுதியிருப்பது கண்டிக்கத்தக்கது.