Blogger இயக்குவது.

மாணவர்கள் பிரபாகரன், செம்பியன், பிரதீப் ஆகியோரை கைது தொடர்பாக தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக்கூட்டம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் 25.10.2014 அன்று நடைபெற்றது

சனி, 25 அக்டோபர், 2014

மாணவர்கள் கைது தொடர்பாக தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக்கூட்டம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அன்று 25.10.2014 நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


1) கத்தி திரைப்படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 7 தோழர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 தோழர்களை காவல்துறையினர் காவல்நிலையத்தில் வைத்து அடித்து உதைத்து சித்திரவதை செய்து சத்யம் திரையரங்கு தாக்கப்பட்ட சம்பவத்தில் தமிழர் நலனுக்காகப் போராடும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் மாணவர்களுக்கும் தொடர்பிருக்கிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதனடிப்படையில் இந்த சம்பவத்துக்கு எந்தவித தொடர்புமே இல்லாத மாணவர்கள் பிரபாகரன், செம்பியன், பிரதீப் ஆகியோரை நள்ளிரவில் 2.45 மணிக்கு கைது செய்ததுடன் அவர்களது பெற்றோர், உறவினர்களையும் காவல்நிலையத்து அழைத்து வந்து மிரட்டியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களை பார்ப்பதற்கு கூட தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினருக்கோ வழக்கறிஞர்களுக்கோ அனுமதி மறுக்கப்பட்டதுடன் இந்த மாணவர்கள் எந்த காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற தகவலையும் கூட சென்னை மாநகர காவல்துறை தெரிவிக்கவில்லை. இந்த மாணவர்களை அண்ணாசாலை காவல்நிலையம், நுங்கம்பாக்கம் காவல்நிலையம், அண்ணாநகர் காவல்நிலையம், திருவல்லிக்கேணி காவல்நிலையம், ராயப்பேட்டை காவல்நிலையம் என கூட்டமைப்பினரையும் வழக்கறிஞர்களையும் மாணவர்களது பெற்றோரையும் தேடி அலைகழிக்க வைத்ததுடன் உலகத்திலேயே மிகப் பெரிய குற்றவாளிகள் போல அவர்களை ரகசியமாக வைத்திருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு வராமல் நீதிபதி வீட்டுக்கு சென்று சிறையில் அடைப்பதற்கான ரிமாண்ட் உத்தரவைப் பெற்று வெவ்வேறு வண்டிகளில் மாற்றி மாற்றி அழைத்துச் சென்று சிறையில் அடைத்திருக்கின்றனர். மேலும் சில மாணவர்களையும் தேடுவதாக கூறிக் கொண்டு அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களை காவல்நிலையங்களுக்கு அழைத்து வந்து துன்புறுத்துகிற செயல் தொடர்கிறது.

ஒரு பொய் வழக்கில் மாணவர்களை சேர்த்து அவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் மாபெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கவும் அவர்களது தமிழின உணர்வை முடக்க நினைப்பதையும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. இதேபோல் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை நகரின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான குமரன் அவர்களின் மனைவியை இன்று அதிகாலை அண்ணாசாலை காவல்நிலைய அதிகாரிகள் அழைத்து வந்து அச்சுறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி மிகவும் அநாகரீகமாக நடத்தியுள்ளதையும் இக்கூட்டம் கடுமையாக கண்டிக்கிறது.

இதுபோன்ற செயல்களை செய்வதற்கு பின்னால் இருந்து உத்தரவிட்ட து ராஜபக்சேவின் கும்பலா? அல்லது சுப்பிரமணியன் சுவாமியின் கும்பலா? அல்லது தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பை குலைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளும் இனத்துரோகக் கும்பலா? என்பதை காவல்துறையின் கண்ணியமிக்க மூத்த உயர் அதிகாரிகள்- தமிழ்நாட்டில் இருக்கின்ற லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், தமிழ்நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான இன உணர்வாளர்களுக்கும் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினருக்கும் உண்மையை விளக்க வேண்டிய கடமை இருக்கிறது என்பதையும் இந்த கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.

2) தமிழர் நலனுக்காகப் போராடும் மாணவர்கள் மற்றும் இன உணர்வாளர்களை காவல்துறை தொடர்ந்து கைது செய்தால் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் ஒன்றாக கைதாவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

3) இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளியும் இனப்படுகொலையாளனுமாகிய ராஜபக்சேவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்திருப்பதை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழினத்துக்கு தொடர்ச்சியாக துரோகம் செய்து கொண்டுவருகிற, தமிழின அழிப்புக்கு உடந்தையாக இருந்த, இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் கூட்டாளியான சுப்பிரமணியன் சுவாமியை இந்தியாவை விட்டு நாடு கடத்த வேண்டும் என்று இந்திய மத்திய அரசை இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

4) மேட்டூர் அருகே தமிழக- கர்நாடக எல்லையில் பாலாறு பகுதியில் மீன்பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மீது கர்நாடகா வனத்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பழனி என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சிக்கும் கடும் கண்டனத்துக்கும் உரியது. கர்நாடகா வனத்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராஜா, முத்துசாமி என்ற மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கர்நாடகா வனத்துறை இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தனத்தை கைவிட வேண்டும். கர்நாடகாவின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த பழனி குடும்பத்துக்கு ரூ25 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். கர்நாடகா வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவருக்கும் அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

5) ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றமானது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடைக்கான காரணங்கள் நியாமற்றவை என்று கூறி தடையை நீக்கி வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் மீது இந்திய அரசு தடைவிதித்ததன் அடிப்படையில்தான் ஐரோப்பிய ஒன்றியமும் தடை விதித்திருந்தது. தற்போது அந்த தடைக்கான காரணங்கள் நியாயமற்றது என்று தீர்ப்பளிக்கப்பட்டுவிட்ட நிலையில் இந்தியாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான அர்த்தமற்ற தடையை நீக்க வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இந்திய மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

6) இலங்கைத் தீவில் இனப்படுகொலை நிகழ்த்திய, தமிழ்நாட்டு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து 600க்கும் மேற்பட்ட மீனவ உறவுகளை சுட்டுப் படுகொலை செய்த சிங்கள கடற்படையின் தளபதி ஜெயந்த பரேராவுக்கு நாளை மறுநாள் (அக்டோபர் 27) இந்திய கடற்படையின் வீர விருது கொடுக்கப்பட இருக்கிறது என்று தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்தியப் பேரரசின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் 600 குடிமக்களைப் படுகொலை செய்த ஒரு நாட்டின் கடற்படை தளபதிக்கு இந்தியப் பேரரசே விருது கொடுப்பது என்பது மிகவும் கொடூரமானது.. வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டு மக்களை- மீனவர்களை தனது நாட்டு குடிமக்களாக இந்தியப் பேரரசு கருதவில்லையா? என்ற கேள்வியை எழுப்புகிறது. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் ஓரணியாக நின்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையுடன் தொடர்ந்தும் பொருளாதார- ராணுவ உறவுகளை இந்தியப் பேரரசு மேற்கொள்வதும் சிங்கள ராணுவத்தினருக்கு மரியாதையும் விருதும் கொடுப்பதையும் தமிழகம் ஒருபோதும் ஏற்காது. இத்தகைய போக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு எச்சரிக்கிறது.
 

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP