Blogger இயக்குவது.

ஏழை மாணவியரின் உயர்கல்வி நிறுவன நுழைவுத் தேர்வுக்கான மத்திய அரசின் 'உதான்' (UDAAN) பயிற்சி திட்டத்துக்கான விண்ணப்ப காலத்தை நீடிக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏழை மாணவியரின் உயர்கல்வி நிறுவன நுழைவுத் தேர்வுக்கான மத்திய அரசின் 'உதான்' பயிற்சி திட்டத்துக்கான விண்ணப்ப காலத்தை நீடிக்க கோரிக்கை!

நாட்டின் அரசு உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகியவற்றில் ஏழை மாணவியர் அதிக எண்ணிக்கையில் சேரும் வகையில் மத்திய அரசானது "உதான்" (UDAAN) என்ற நுழைவுத் தேர்வு பயிற்சித் திட்டத்தை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டத்தை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. (CBSE) நிர்வாகம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டு வருமானம் ரூ 6 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 11,12ஆம் வகுப்பு படிக்கும் 1000 மாணவியருக்கு ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகியவற்றுக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். இதில் 50% மாணவியர், இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட- பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாணவியராக இருப்பர். இப்பயிற்சி திட்டத்துக்கு விண்ணப்பிப்போர் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், கணித பாடங்களை படிப்பவர்களாக இருக்க வேண்டும்.

பிளஸ் 1 படிப்பவர்களாக இருந்தால் 10-ம் வகுப்பில் குறைந்த பட்சம் 70 விழுக்காடு மதிப்பெண்ணும், கணிதம், அறிவியல் பாடங்களில் 80 விழுக்காடு மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.பிளஸ் 2 மாணவிகளுக்கு 10-ம் வகுப்பில் மேற்கண்ட மதிப்பெண் தகுதியுடன் 11-ம் வகுப்பில் 75 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.

இந்த நுழைவுத் தேர்வு பயிற்சியானது இணையம் வழியும் சில நேரடி பயிற்சி வகுப்புகள் மூலமும் நடத்தப்படுகின்றன. இந்த "உதான்" பயிற்சி திட்டத்தின் மூலமாக என்.ஐ.டி, ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்கு 100% கல்வி நிதி உதவியையும் மத்திய அரசு வழங்கும். சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் பயிலும் மாணவிகள் மட்டுமின்றி அனைத்து மாநில கல்வி பாடத் திட்டத்தின் கீழ் பயிலுவோரும் (State board) இப்பயிற்சி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் இத்திட்டம் நாட்டின் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய குடும்பங்களின் மாணவியருக்கு பயன்தரக்கூடிய ஒரு நல்ல திட்டம். ஆனால் இந்த திட்டம் அண்மையில்தான் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் பரவலாக பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே இன்னமும் முழுமையாக சென்று சேரவில்லை.

தமிழகத்தில் இத்திட்டம் பற்றி தெரிந்து கொள்ள மதுரை மற்றும் கோவையில் மட்டுமே "ஒருங்கிணைப்பு" மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இப் பயிற்சி திட்டத்துக்கான விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் அக்டோபர் 27 என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒடுக்கப்பட்ட மக்களை கடும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் எல்லாம் 30க்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்து இத்திட்டம் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மதுரை, கோவை என்ற 2 இடங்களில் மட்டும் ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டு ஒரு சில பள்ளிகளுக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது வருத்தத்துக்குரியதாகும். இந்த போக்கானது சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மட்டுமே "உதான் திட்டம்" பயன்படப் போகிறதோ என்ற அய்யத்தை எழுப்புகிறது. அதுவும் இந்தியா முழுவதும் 1,000 மாணவியர்தான் தேர்வு செய்யப்படுவர் என்பதும் இத்திட்டத்தின் நோக்கம் குறித்து சந்தேகங்களை வலுவாக்குகிறது.

"உதான்" பயிற்சி திட்டத்தை பிரதமர் மோடியின் "தூய்மை இந்தியா" திட்டம், எப்படியெல்லாம் அனைத்து ஊடகங்களிலும் தொடர்ந்து விளம்பரப்படுத்தப்படுகிறார்களோ அதைவிட கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து விளம்பரப்படுத்த வேண்டும். அத்துடன் நாடு முழுவதும் 1,000 மாணவியர் மட்டுமே தேர்வு என்ற வரம்பை பல மடங்கு அதிகப்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்தை அனைத்து மாநில பள்ளிக் கல்வித் துறைகள் மூலம் சி.பி.எஸ்.சி. அல்லாத அனைத்து கல்வி முறை பள்ளிகளுக்கும் சுற்றறிக்கைகள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். இதனால் "உதான்" பயிற்சி திட்டத்துக்கான விண்ணப்ப காலத்தை மேலும் ஒரு மாதம் அல்லது 2 மாதம் நீட்டிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அதேபோல் இத்திட்டம் குறித்து பெற்றோரும் மாணவர்களும் அறிவதற்கான "ஒருங்கிணைப்பு மையங்களை" மாவட்டந்தோறும் அமைக்க வேண்டும். அப்போதுதான் இத்திட்டம் பெற்றோர்களையும் மாணவர்களையும் சென்றடையும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன். ஏழை எளிய மக்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் தமிழக அரசும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி எதிர்கால சந்ததியினரின் வளமான கல்வியை உறுதிப்படுத்திட உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP