Blogger இயக்குவது.

சுங்க சாவடிகளை முழுமையாக அகற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கசாவடிகளை 30.8.2014 அன்று முற்றுகையிட்டு போராட்டம் - தி.வேல்முருகன் அறிவிப்பு

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தபட உள்ளன. சுங்க சாவடிகளை முழுமையாக அகற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கசாவடி முற்றுகை போராட்டம் 30.8.2014 அன்று நடைபெறும் என்று நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்கள்  கோயம்புத்தூரில்  26.08.2014 அன்று  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது என்பதே பகல் கொள்ளை என அனைவரும் குரல் எழுப்பி வரும் நிலையில் வரும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் சுங்கக் கட்டணம் அதிகரிக்கப்படும் என்று செய்திகள் வந்துள்ளன. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 41 இடங்களில் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இவை அனைத்திலும் கடந்த ஏப்ரல் மாதம்தான் சுங்கக் கட்டணம் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டது. அதற்குள் மீண்டும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 4,974 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளைப் பராமரிக்க வேண்டியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான். அதற்குத்தான் அந்த ஆணையமே இருக்கிறது.

சென்னை–கன்னியாகுமரி செல்ல ரூ.2 ஆயிரம் வரை சுங்கவரி செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் சுங்கவரி 10 முதல் 40 சதவீதம் வரை உயரும் என்ற அறிவிப்பு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நாட்டின் சாலையை பராமரிப்பது என்பது அரசின் அடிப்படை கடமைகளில் ஒன்று. ஆனால் அந்த அடிப்படை கடமையைக் கூட பொதுமக்களுக்கு அரசு செய்து கொடுக்காமல் யாரோ சில தனியாரிடம் ‘சாலை பராமரிப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். அவர்கள் சாலையை பராமரிக்கிறோம் என்ற பெயரில் ‘சுங்க கட்டணம்’ ஒன்றை வசூலிக்கின்றனர். சாலையே இல்லையே.. சாலை பராமரிப்பது என்றால் என்ன? சாலைகளில் எச்சரிக்கை குறியீடுகள், மின்விளக்கு வசதி, கழிப்பறை, ஆம்புலன்ஸ், அவசர தொலைபேசி, அவசர சிகிச்சை என முழுமையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருப்பதுதான் சாலை பராமரிப்பு. ஆனால் சாலையையே பராமரிப்பதும் இல்லை என்கிற போது இன்னபிற அடிப்படை வசதிகள் எங்கே செய்யப் போகிறார்கள்.. அதே நேரத்தில் வழிப்பறி கொள்ளையர்களாக ஆங்காங்கே சுங்க கட்டணத்தை வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆண்டுக்கு ஒருமுறை என்ற நிலையை மாற்றி மாதத்துக்கு ஒரு முறை சுங்கக் கட்டணத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படை வசதிகளே இல்லை.. சுங்கக் கட்டண கொள்ளையே கூடாது என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு. வெளிநாடுகளில் உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துவிட்டுதான் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். அதைப் பார்த்து அதாவது பூனையைப் பார்த்து சூடு போட்ட கதையாக நாங்களும் செய்கிறோம் பாருங்கள் என்று கூறிக் கொண்டு பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு எந்த ஒரு அடிப்படட வசதியையும் செய்து கொடுக்கவில்லை இந்த சுங்கக் கட்டண கொள்ளை கும்பல். தற்போது நடைமுறைக்கு வர இருக்கும் சுங்கக் கட்டண உயர்வால் சரக்கு வாகனங்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மிகக் கடுமையாக உயரும் அபாயம் இருக்கிறது.

ஏற்கெனவே எரிபொருள் விலை உயர்வால் கடுமையான விலை வாசி உயர்வை எதிர்கொண்டு போராடும் பொதுமக்களின் தலைமையில் கூடுதல் சுமையை சுமத்துகிறது மத்திய அரசு. பொதுவாக வாகனங்களை வாங்கும்போதே அனைத்துவிதமான வரிகளையும் செலுத்திவிட்ட பின்னரும் சாலை பராமரிப்பு என்ற பெயரில் இந்த பகல் கொள்ளைதான் எதற்கு? ஆகையால் சுங்கக் கட்டணம் என்ற வசூல் முறையை முற்றாக மத்திய அரசு ஒழித்தாக வேண்டும். இந்த பகல் கொள்ளையை மத்திய அரசு நிறுத்தாவிட்டால் சுங்க கட்டணங்களுக்கு எதிராக அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் போராட்டங்கள் பெரும் போராட்டமாக வெடிக்கும் நிலைமை உருவாகும் என எச்சரிக்கிறேன். மத்திய அரசு உடனடியாக இந்த பகல் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 30-ந் தேதி காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் அனைத்து சுங்க சாவடிகள் முன்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP