Blogger இயக்குவது.

தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம் என கொக்கரிக்கும் சிங்கள பேரினவாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்

வியாழன், 5 மார்ச், 2015

தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம் என கொக்கரிக்கும் சிங்கள பேரினவாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 05.03.2015 வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம்" என கொக்கரிக்கும் சிங்கள பேரினவாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு கண்டனம்

பாக் நீரிணைப் பகுதியில் இலங்கை எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இலங்கையின் பிரதமர் சிங்களப் பேரினவாதி ரணில் விக்கிரமசிங்கே கொக்கரித்திருப்பது வன்மையாக கண்டனத்துக்குரியது.
1974 ஆம் ஆண்டு இந்தியா- இலங்கை இடையேயான கச்சத்தீவு ஒப்பந்தத்தில் பிரிவு 5 மற்றும் 6-ல் "கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்கள் பாரம்பரிய உரிமைகளில் மீன்பிடிக்கலாம்; எந்தத் தடையும் இல்லை" என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதையெல்லாம் மதிக்காத சிங்களப் பேரினவாத அரசுகள், எல்லை தாண்டினார்கள் என்ற ஒற்றை பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் உலகில் எங்குமே இல்லாத பெருங்கொடுமையாக 30 ஆண்டுகாலமாக தமிழக மீனவ உறவுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 700க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்திருக்கிறது. 

இன்று வரை தமிழக மீனவர்களை நடுக்கடலில் விரட்டியடிப்பது; தாக்குவது, சித்தரவதை செய்வது; படகுகளை பறிமுதல் செய்வது என சிங்கள ராணுவம் வெறியாட்டம் போடுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.
இப்படி 700க்கும் அதிகமான தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த சிங்கள வெறியாட்டத்தை நியாயப்படுத்துகிற வகையில் "இவையெல்லாம் ஆயுதக் கடத்தலின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்" என்று ரணில் விக்கிரமசிங்கே பேட்டியளித்திருப்பது கண்டனத்துக்குரியது. ரணில் விக்கிரமசிங்கேவின் இக்கருத்து தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது. 

வாழ்வாதாரத்துக்காக நித்தம் நித்தம் செத்து பிழைத்து கடலில் தொழிலுக்குப் போகிற மீனவர்களை "ஆயுதக் கடத்தல்காரர்கள்; போதைப் பொருள் கடத்தல்காரர்கள்" என்று ரணிலைப் போன்ற சிங்கள பேரினவாதிகள் போகிற போக்கில் கொச்சைப்படுத்துவது கடுமையான கண்டனத்துக்குரியது.

பாக் நீரிணைப் பகுதியில் மீனவர்கள் எல்லை தாண்டி செல்லக் கூடாது என்று 1983ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசு ஒரு தற்காலிகத் தடை விதித்தது. அந்தத் தடையை நீக்குவதன் மூலமாக 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் தமிழக மீனவர்களுக்கு பாரம்பரியமாக மீன்பிடிக்க உரிமை உண்டு என்பதை மத்திய அரசு நிலைநாட்டுவது உடனடித் தேவையாகும்.

தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள பகுதிகளில் மீன்பிடிப்பது என்பது எப்படி எல்லை தாண்டி வருவதாகும்? அப்படி வருபவர்களை சுட்டுத் தள்ள சட்டத்தில் இடம் இருக்கிறது என்று மிரட்டுகிற ரணில் விக்கிரமசிங்கேவுக்கு இந்திய மத்திய அரசு தன்னுடைய கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். எல்லை தாண்டுவதாக கூறி காக்கை குருவிகளைப் போல 700க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த சிங்களக் கடற்படை மீது இந்திய மத்திய அரசு வழக்கு தொடர வேண்டும்.

இலங்கைக்கு செல்ல இருக்கிற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரணில் விக்கிரமசிங்கேவை நேரில் சந்திக்கும் போதும் தம்முடைய கண்டனத்தை பதிவு செய்வதுடன் தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவு சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தையில் உறுதிப்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.


பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர், 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP