தமிழ்நாட்டில் இருந்து தமிழீழத் தமிழர்களைத் திருப்பி அனுப்பமாட்டோம் என்று தமிழக சட்டமன்றத்தின் உரை வெளிப்படுத்துவதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பாராட்டு
திங்கள், 23 பிப்ரவரி, 2015
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று (18.02.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழீழத் தமிழர்களை திருப்பி அனுப்பமாட்டோம்: ஆளுநர் உரையில் உறுதி!
தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு பாராட்டு!!
தமிழ்நாட்டில் இருந்து தமிழீழத் தமிழர்களைத் திருப்பி அனுப்பமாட்டோம் என்று தமிழக சட்டமன்றத்தின் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாராட்டி வரவேற்கிறது.
இலங்கையில் புதிய அரசு அமைந்த உடன் தமிழீழத் தாயகப் பிரதேசத்தில் இயல்புநிலை திரும்பிவிட்டதைப் போல உலகமெங்கும் ஏதிலியராக இருக்கும் தமிழீழத் தமிழர்கள் இலங்கை திரும்ப வேண்டும் என்று சிங்களப் பேரினவாத அரசு கூறி வருகிறது.
இது தொடர்பாக இந்தியப் பேரரசும் சிங்களத்துடன் கை கோர்த்துக் கொண்டு தமிழீழத் தமிழர்களைத் திருப்பி அனுப்புவதில் முனைப்பு காட்டுகிறது. ஆனால் தமிழக அரசு தொடக்கம் முதலே இந்தியப் பேரரசின் இந்த நிலையை கடுமையாக எதிர்த்து வருகிறது.
இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையிலும் "இலங்கைத் தமிழ் அகதிகள் விருப்பத்தின் அடிப்படையில் நாடு திரும்புவது குறித்து, இருதரப்பு பேச்சு வார்த்தைகளைத் தொடங்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், இன நல்லிணக்கம் குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள போதிலும், தற்போது அங்கு நிலவிவரும் பயம் மற்றும் மிரட்டல் நிறைந்த சூழல்; தமிழர் வாழும் பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் தொடர்ந்து தங்கிவரும் நிலை; உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் இன்னும் மறுகுடியமர்த்தப்படாதிருப்பது; புதிய இலங்கை அரசால் திட்டவட்டமான நம்பத்தகுந்த நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படாதது போன்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொள்ளும்போது, இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்புவது குறித்து விவாதிப்பதற்கான கூட்டத்தை நடத்துவதற்கு உகந்த தருணம் இன்னும் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.
அதனால், இத்தகைய கூட்டம் தள்ளிவைக்கப்பட வேண்டும் என இந்த அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழ் அகதிகள் அமைதியான, நியாயமான முறையில் உரிய மரியாதையுடன் மறுகுடியமர்த்தப்பட வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதிகொண்டுள்ளது.
அகதிகள் தாயகம் திரும்புவதற்கான உகந்த சூழலை உருவாக்கத் தேவையான, போதிய பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சிறுபான்மைத் தமிழர்களின் சுயாட்சி மற்றும் ஜனநாயக உரிமைகள் முழுமையாக மீட்கப்பட்டு உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்ட பின்னரே, இங்கு வாழும் அகதிகள் தாயகம் திரும்புவது குறித்து சிந்திக்க வாய்ப்பு ஏற்படும் என்பதே இந்த அரசின் கருத்தாகும்" என்று திட்வட்டமாக தெரிவித்திருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாராட்டி வரவேற்கிறது.
தமிழீழத் தாயகப் பிரதேசத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது என்று அதிபர் மைத்ரிபால சிறிசேன தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில் அங்கு இயல்புநிலை திரும்பாத வரையில்- கட்டாயப்படுத்தி தமிழீழத் தமிழர்களை அனுப்புகிற எந்த ஒரு முயற்சியையும் இந்திய அரசு மேற்கொள்ளக் கூடாது என்பதே ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வு என்பதை இந்தியப் பேரரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் ஆளுநர் உரையில், முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கேரளா புதிய அணை அமைக்க தேசிய வன விலங்கு வாரியத்தின் நிலைக் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளதற்கும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மீறி பாம்பாறு உப வடிநிலப் பகுதியில் புதிய நீர்த்தேக்கத் திட்டங்களை செயல்படுத்த கேரளா முயற்சித்துள்ளதற்கும் தமிழக அரசு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
அத்துடன் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை செவ்வனே செயல்படுத்திட காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதும் வரவேற்கத்தக்கது.
தமிழகத்தின் வாழ்வுரிமை சார்ந்த பிரச்சனைகளில் தொடர்ந்து உறுதியான தெள்ளத் தெளிவான நிலைப்பாட்டை தமிழக அரசு கடைபிடித்து வருவதையே ஆளுநர் உரை வெளிப்படுத்துவதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக