Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இறையூர் சர்க்கரை ஆலை முற்றுகைப் போராட்டம்

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

 இறையூரில் சர்க்கரை ஆலையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் முற்றுகையிடும்   போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி   தி.வேல்முருகன் பங்கேற்றார்.

முற்றுகை போராட்டம்

பெண்ணாடம் அருகே இறையூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு கரும்பு வெட்டியதற்கான தொகையினை கடந்த 3 மாதமாக வழங்காமல் இருந்து வருகிறது. இதற்கான தொகையினை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க கோரி, தமிழக வாழ்வுரிமைக்  கட்சி சார்பில் நேற்று ஆலையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு கட்சியின் நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் தலைமை தாங்கினார் மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் சின்னதுரை, தலைவர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் ரெங்க சுரேந்தர், தங்கவேல், சங்கர், கோட்டை செல்வம், தியாகராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒன்றிய துணை செயலாளர் செந்தில் வரவேற்றார்.

ஊர்வலம்


முன்னதாக கட்சி நிறுவனர் வேல்முருகன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பெண்ணாடத்தில் இருந்து வாகனத்தில் ஊர்வலமாக இறையூர் சர்க்கரை ஆலையை நோக்கி வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிறுவனர் வேல்முருகன் பேசியது:

சிறைபிடிப்பு போராட்டம்


இறையூர் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு பணம் தராமல் இழுத்தடிப்பு செய்து வருவது வேதனைக்கு உரிய ஒன்றாகும். இவ்வாறு ஆலை நிர்வாகம் ஈடுபடுவதன் காரணமாக விவசாயிகள் மறு விவசாயம் செய்வதற்கென்று பணம் இன்றி, வட்டிக்கு வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே ஆலை நிர்வாகமானது, அடுத்த ஒரு மாதத்திற்குள் விவசாயிகளுக்கு கரும்பு பணத்தையும், வெட்டுக்கூலியையும் வழங்க வேண்டும். இல்லையெனில் தமிழக வாழ்வுரிமைக்  கட்சியும், கரும்பு விவசாயிகளும் சேர்ந்து ஆலையை சிறை பிடிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

உடனடி தீர்வு வேண்டும்

மேலும் கரும்பிற்கு விலை குறைவாக கொடுப்பதால் 22 ஏக்கர் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே ஆலை நிர்வாகம் டன் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இதன் மூலமாக 100 கிராம விவசாயிகள் பயன் அடைவார்கள். இங்குள்ள விவசாயிகளுக்கு தெரியாமல் அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஆலை நிர்வாகம் கரும்பு வாங்கி வருவதை நிறுத்தி கொள்ள வேண்டும். இந்த பிரச்சினையில் மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் துறையினர் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

முன்பணம் வழங்க வேண்டும்

விவசாயிகளின் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னுரிமை அளிப்பதுடன், அவர்களுக்காக சிறை செல்லவும் தயாராக உள்ளோம். இவ்வாறு பேசினார்.

பேச்சுவார்த்தை

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கட்சி நிறுவனர் வேல்முருகன் தலைமையில் 10–க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் ஆலையின் அலுவலகத்திற்குள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையின் போது, தாசில்தார் இருதயமேரி, துணை தசில்தார் அண்ணாதுரை, வருவாய் ஆய்வாளர் ஆனந்த், ஆலை மேலாளர் செந்தில்குமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின், போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அனைவரும் கலைந்து சென்றனர். 






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP