தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,000 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள்: முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் பாராட்டு
புதன், 1 பிப்ரவரி, 2012
பண்ருட்டி:
தானே புயலில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் ரூ.1,000 கோடியில் கட்டப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்குப் பாராட்டு தெரிவிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் கூறினார்.
பண்ருட்டியில் திங்கள்கிழமை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் கூறியது:
புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதன் அடிப்படையில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என அறிவித்த முதல்வரை பாராட்டி வரவேற்கிறேன். விவசாயிகளுக்கு முந்திரி, பலா கன்றுகளை தந்து, ஒரு ஆண்டுக்கு பராமரிப்பு செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறேன்.
புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் விவசாய, கூட்டுறவு, தேசிய வங்கிக் கடன்கள் ரத்து செய்யப்படும் என அறிவித்து, அவர்களது வயிற்றில் பால் வார்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
கல்விக் கட்டணம்:
5 ஆயிரம் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என கடலூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர்கள் இயக்கம் சார்பில் முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களின் நியாயமான இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளில் கட்டணத்தை கட்டியாக வேண்டும் என நிர்பந்திப்பதாக புகார்கள் வந்துள்ளது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புயல் நிவாரணம் அளிப்பதற்காக, நெய்வேலியில் உள்ள குளுனி பள்ளி நிர்வாகம், மாணவர்களிடம் ரூ.500 முதல் ஆயிரம் வரை கட்டாய வசூல் செய்து வருகிறது. இயலாத மாணவர்களை வகுப்பறையில் சேர்க்க மறுக்கின்றனர். இக்கல்வி நிறுவனத்தின் மீது அரசும், கல்வித் துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வசூலித்த பணத்தை திரும்பத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.வேல்முருகன் கூறினார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக