Blogger இயக்குவது.

தமிழ்நாட்டில் இருந்து தமிழீழத் தமிழர்களைத் திருப்பி அனுப்பமாட்டோம் என்று தமிழக சட்டமன்றத்தின் உரை வெளிப்படுத்துவதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பாராட்டு

திங்கள், 23 பிப்ரவரி, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று (18.02.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:
 
தமிழீழத் தமிழர்களை திருப்பி அனுப்பமாட்டோம்: ஆளுநர் உரையில் உறுதி!

தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு பாராட்டு!!

தமிழ்நாட்டில் இருந்து தமிழீழத் தமிழர்களைத் திருப்பி அனுப்பமாட்டோம் என்று தமிழக சட்டமன்றத்தின் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாராட்டி வரவேற்கிறது.

இலங்கையில் புதிய அரசு அமைந்த உடன் தமிழீழத் தாயகப் பிரதேசத்தில் இயல்புநிலை திரும்பிவிட்டதைப் போல உலகமெங்கும் ஏதிலியராக இருக்கும் தமிழீழத் தமிழர்கள் இலங்கை திரும்ப வேண்டும் என்று சிங்களப் பேரினவாத அரசு கூறி வருகிறது.

இது தொடர்பாக இந்தியப் பேரரசும் சிங்களத்துடன் கை கோர்த்துக் கொண்டு தமிழீழத் தமிழர்களைத் திருப்பி அனுப்புவதில் முனைப்பு காட்டுகிறது. ஆனால் தமிழக அரசு தொடக்கம் முதலே இந்தியப் பேரரசின் இந்த நிலையை கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையிலும் "இலங்கைத் தமிழ் அகதிகள் விருப்பத்தின் அடிப்படையில் நாடு திரும்புவது குறித்து, இருதரப்பு பேச்சு வார்த்தைகளைத் தொடங்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், இன நல்லிணக்கம் குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள போதிலும், தற்போது அங்கு நிலவிவரும் பயம் மற்றும் மிரட்டல் நிறைந்த சூழல்; தமிழர் வாழும் பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் தொடர்ந்து தங்கிவரும் நிலை; உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் இன்னும் மறுகுடியமர்த்தப்படாதிருப்பது; புதிய இலங்கை அரசால் திட்டவட்டமான நம்பத்தகுந்த நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படாதது போன்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொள்ளும்போது, இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்புவது குறித்து விவாதிப்பதற்கான கூட்டத்தை நடத்துவதற்கு உகந்த தருணம் இன்னும் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.

அதனால், இத்தகைய கூட்டம் தள்ளிவைக்கப்பட வேண்டும் என இந்த அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழ் அகதிகள் அமைதியான, நியாயமான முறையில் உரிய மரியாதையுடன் மறுகுடியமர்த்தப்பட வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதிகொண்டுள்ளது.

அகதிகள் தாயகம் திரும்புவதற்கான உகந்த சூழலை உருவாக்கத் தேவையான, போதிய பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சிறுபான்மைத் தமிழர்களின் சுயாட்சி மற்றும் ஜனநாயக உரிமைகள் முழுமையாக மீட்கப்பட்டு உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்ட பின்னரே, இங்கு வாழும் அகதிகள் தாயகம் திரும்புவது குறித்து சிந்திக்க வாய்ப்பு ஏற்படும் என்பதே இந்த அரசின் கருத்தாகும்" என்று திட்வட்டமாக தெரிவித்திருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாராட்டி வரவேற்கிறது.

தமிழீழத் தாயகப் பிரதேசத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது என்று அதிபர் மைத்ரிபால சிறிசேன தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில் அங்கு இயல்புநிலை திரும்பாத வரையில்- கட்டாயப்படுத்தி தமிழீழத் தமிழர்களை அனுப்புகிற எந்த ஒரு முயற்சியையும் இந்திய அரசு மேற்கொள்ளக் கூடாது என்பதே ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வு என்பதை இந்தியப் பேரரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஆளுநர் உரையில், முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கேரளா புதிய அணை அமைக்க தேசிய வன விலங்கு வாரியத்தின் நிலைக் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளதற்கும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மீறி பாம்பாறு உப வடிநிலப் பகுதியில் புதிய நீர்த்தேக்கத் திட்டங்களை செயல்படுத்த கேரளா முயற்சித்துள்ளதற்கும் தமிழக அரசு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது.

அத்துடன் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை செவ்வனே செயல்படுத்திட காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதும் வரவேற்கத்தக்கது.

தமிழகத்தின் வாழ்வுரிமை சார்ந்த பிரச்சனைகளில் தொடர்ந்து உறுதியான தெள்ளத் தெளிவான நிலைப்பாட்டை தமிழக அரசு கடைபிடித்து வருவதையே ஆளுநர் உரை வெளிப்படுத்துவதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின்போது தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த இலங்கை தலைவர்களிடம் உறுதிபட வலியுறுத்த வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று (22.02.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இலங்கை பயணம்!

தமிழக மீனவர்- ஈழத் தமிழர் பிரச்சனையில் சிறுதுரும்பையாவது அசைக்கட்டும்!!

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. அதுவும் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் மூலமாக ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள ராணுவம் இன்னமும் தமிழீழப் பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்படவில்லை; பல்லாயிரம் தமிழீழ அரசியல் கைதிகளின் நிலைமை என்னவானது எனத் தெரியவில்லை: வாழ்வாதாரமற்று வறுமையில் வாடும் தமிழர்களின் எதிர்காலத்துக்கு என்ன பதில் என்பதற்கு விடையில்லை?

இத்தனைக்கும் மேலாக ஒன்றரை லட்சம் தமிழரை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் சிங்கள மண்ணில் சுதந்திரமாக ஆட்சி அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பெருந்துயரம்...

மாற்றத்தை உருவாக்கிடுவோம் என்ற வாக்குறுதியோடு இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர் பிரதமர் நரேந்திர மோடி; ஆனால் தமிழக மீனவர் பிரச்சனையிலோ தமிழீழத் தமிழர் பிரச்சனையிலோ எந்த ஒரு சிறுதுரும்பையும் இந்த 9 மாத ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி அரசு அசைத்துப் போட்டது இல்லை...

தமிழக மீனவர்கள் நாளாந்தம் தாக்கப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக இருக்கிறது: ஈழத் தமிழர் பிரச்சனையிலோ இற்றுப் போன 13வது அரசியல் சாசன திருத்தத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதோடு தமிழ்நாட்டில் அடைக்கலமாகியுள்ள ஈழ ஏதிலியரை கட்டாயமாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப சிங்களத்தோடு கூட்டுச் சதி செய்து கொண்டிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைப் போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஒத்திவைப் போட வைக்க சிங்களத்தோடு கை கோர்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இவை அனைத்துமே தமிழகம் மற்றும் தமிழீழ மக்களிடத்தில் சொல்லொண்ணா வேதனையையும் துயரத்தையும் ஆறாத வடுவையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடியின் இலங்கை பயணம் தமிழக மீனவர்கள் மற்றும் தமிழீழத் தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவது இயல்பானதானதுதான்.. ஆனாலும் இதுவரை மோடி அரசின் செயல்பாடுகளால் பெருநம்பிக்கை எதுவும் இல்லாத சூழ்நிலையிலும் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக செல்கிற இந்திய பிரதமர் என்பதால் தமிழீழப் பகுதிகளை நிச்சயம் நேரில் பார்வையிட்டு நிலைமையை உணரவேண்டும்.

எப்படியெல்லாம் சிங்கள ராணுவக் கொட்டடியில் தமிழ் மக்கள் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை நேரில் பார்க்க வேண்டும்; தமிழீழத்தின் வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான வடமாகாண சபை முதல்வர் உள்ளிட்டோரை அழைத்து சந்தித்து அங்கு நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் குறித்து கேட்டறிந்து கள யதார்த்தத்தை உணர வேண்டும்; சிங்கள ராணுவத்தின் கெடுபிடிகளுக்கும் ஆக்கிரமிப்புக்கும் மத்தியில் கல்வி கற்கும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்களையும் பிரதமர் மோடி அழைத்து சந்தித்து நிலைமைகளைக் கேட்க வேண்டும்.

சிங்கள அதிபர் உள்ளிட்ட தலைவர்களுடனான சந்திப்பின் போது ராணுவத்தை விலக்க வேண்டும்; அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்;

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தியாக வேண்டும் என்று இலங்கை தலைவர்களிடம் உறுதிபட வலியுறுத்த வேண்டும்; இத்தகைய கோரிக்கைகளில் ஒன்றையாவது அதாவது ஒரு சிறு துரும்பையாவது பிரதமர் மோடி தனது இலங்கை பயணத்தின் போது அசைத்துவிட்டு வரவேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு.

இலங்கை செல்லும் பிரதமர் மோடி அவர்களிடம் இந்த கோரிக்கைகளை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

சனி, 21 பிப்ரவரி, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று (21.02.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:
 
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழங்குக!
 
வழக்கறிஞர்களின் சமூக நீதிப் போராட்டம் வெல்லட்டும்!!
 
தமிழ்நாட்டின் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தை முன்வைத்து வழக்கறிஞர்கள் நடத்துகிற 'சமூக நீதி'க்கான போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 60 நீதிபதிகளில் 18 நீதிபதி இடங்கள் காலியாக இருக்கிறது. காலியாக உள்ள 18 நீதிபதிகளை நியமிப்பது என்பது ஒரே நேரத்திலும் அனைத்து ஜாதி, மத, பாலின பிரிவினருக்குமானதாகவும் குறிப்பாக இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் பெண்களுக்கும் முன்னுரிமை கொடுத்து நிரப்பப்படுவதுமாக இருப்பதுதான் ஜனநாயகத் தன்மை கொண்டதும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டதுமாகும்.

இதுதான் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் முதன்மையான நியாயமான நீதியுமான எதிர்பார்ப்பும் கோரிக்கையுமாகும். இது தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் கேட்ட போது, ஏற்கெனவே 9 நீதிபதிகள் பட்டியலை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும் எஞ்சிய 9 பேரை நீங்கள் சொல்கிற அடிப்படையில் நியமிக்கிறேன் என்றும் கூறியிருப்பது இந்த மண்ணின் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத மேலாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகும்.

நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறவர்கள் யார்? எந்த சமூகத்தினருக்கு முன்னுரிமை என்பதை அறியமுடியாத வெளிப்படைத்தன்மையற்ற முறைதான் இதற்கு காரணம்.. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மிகக் குறைந்த விழுக்காட்டினரே இருக்கக் கூடிய ஒரு சமூகமே பெரும்பான்மை இடங்களை அபகரித்துக் கொள்கிற 'கபளீகரம்' செய்து கொள்கிற "நூற்றாண்டுகால போக்கு" இப்போதும் நீடிக்கிறது..

சமூக நீதியின் தாய் மண்ணாகிய தமிழ்நாடு இதை பொறுத்துக் கொண்டிருக்காது என்பதை வெளிப்படுத்துவதுதான் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்.. இந்த நீதித்துறையில் சமூக நீதிக்கான போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரிப்பதுடன் வழக்கறிஞர் சமூகத்துக்கு பக்க பலமாக என்றென்றும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கறிஞர்களின் முதன்மை கோரிக்கைகளான, நீதிபதிகள் பதவிகளுக்கான பரிந்துரை அனைத்தையும் ஒரே பட்டியலாக அனுப்ப வேண்டும்; இதுவரை பிரதிநிதித்துவப்படாத சாதியினருக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்; காலி பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு பெண் வழக்கறிஞர்களுக்கு ஒதுக்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு பிறமாநிலத்தைச் சேர்ந்தோரை பரிசீலிக்கக் கூடாது; மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

இக்கோரிக்கைகளை நிறைவேற்றவும் வென்றெடுக்கவும் ஒடுக்கப்பட்ட அனைத்து சமூகத்தினரும் பிரிவினரும் ஜாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து ஒருங்கிணைந்து சமூக நீதிக்கான போராளிகளாகப் போராடுவோம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறைகூவல் விடுக்கிறது.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இளைஞரணி ஆய்வுக் கூட்டம் 19.02.2015 (வியாழக்கிழமை) அன்று நடைபெற்றது

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

டலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இளைஞரணி ஆய்வுக் கூட்டம் கடலூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் 19.02.2015 (வியாழக்கிழமை) நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் பங்கேற்று இளைஞரணியினர் செய்த பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், கட்சியினர் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

இளைஞரணி மாவட்டச் செயலாளர் அ.செந்தில் தலைமை வகித்தார். பொறியாளர் தி.கண்ணன் முன்னிலை வகித்தார். இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர்கள் த.முருகேசன், செல்வ.ஆனந்தகுமார், தேவகிருஷ்ணன், துணைச் செயலர்கள் உ.சிலம்பரசன், கோ.பன்னீர்செல்வம், கட்சி நகரச் செயலாளர் த.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.









Read more...

வத்தலகுண்டு பேரூராட்சியை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

வத்தலகுண்டு பேரூராட்சியை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

 

Read more...

விழுப்புரம் மாவட்டம் கெடாரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காணை ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம்

கெடாரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காணை ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

காணை ஒன்றிய செயலாளர் சேட்டு தலைமை தாங்கினார். பிரகாஷ் முன்னிலை வகித்தார். தொழிற்சங்கச் செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் ரவிஅலெக்ஸ், மாவட்டத் தலைவர் குமரன், மாநில தொழிற்சங்கப் பொருளாளர் பன்னீர் செல்வம், முனியப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. கெடார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேர அறுவை சிகிச்சை நிபுணர் நியமிக்க வேண்டும்.

2. தரைப்பாலம் அமைக்க வேண்டும்

உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

வியாழன், 19 பிப்ரவரி, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று (19.02.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:
 
ஐ.நா. மனித உரிமைகள் அவையத்தில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை மார்ச் மாதம் வெளியிடுக!

இந்திய மத்திய அரசே! சிங்களத்தின் நரித்தனத்துக்கு உடைந்தையாக செயல்படாதே!!

தமிழீழத் தாயகத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த சிங்களப் பேரினவாத இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை 6 மாத காலத்துக்கு ஒத்திவைக்க ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக் குழு முடிவு செய்துள்ள உலகத் தமிழர்களை கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் மார்ச் 25-ந் தேதியன்று இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருந்தது. இனப்படுகொலைக்கு உள்ளாகி இருக்கும் தமிழினத்துக்கு இந்த அறிக்கை ஒரு ஆறுதலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது இந்த அறிக்கை 6 மாத காலத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது துயரத்தைத் தருகிறது.

இலங்கையில் தமிழர்களின் வாக்குகளால் அதிபராக வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேன, தாம் அதிகார நாற்காலியில் அமர்ந்த உடன் வழக்கமான சிங்கள நரித்தனத்தை வெளிப்படுத்த தொடங்கினார். இதன் உச்சமாக கொடுங்கோலன் ராஜபக்சே உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வகையில் உள்நாட்டிலேயே நாங்கள் விசாரணை நடத்தப் போகிறோம் என்று சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மங்களசமரவீர அனுப்பி வைக்கப்பட்டார்.

மைத்ரிபால சிறிசேனவும் இதே கோரிக்கையுடன் இந்தியா வந்துவிட்டு திரும்பியிருக்கிறார். தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் இதை கிஞ்சித்தும் மதிக்காமல் இந்திய மத்திய அரசு, அணு உலை ஒப்பந்தம் உட்பட இலங்கையின் பொருளாதார நலனுக்காக ஒப்பந்தங்களைப் போட்டிருப்பது தமிழகத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாக அங்கீகரிக்கவில்லை என்பதையே வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை குழு அறிக்கையை ஒத்தி வைக்கும் மைத்ரிபால சிறிசேனவின் குள்ளநரித்தனத்தை அறிந்தும் அதைக் கண்டிக்காமல் கள்ளத்தனமாக மவுனமாக இருந்து இந்தியா ஆதரவும் தெரிவித்திருப்பது பச்சைத் தமிழினத் துரோகம்.

அதுவும் தமிழீழத்தின் வடக்கு மாகாண சபையில், சிங்களப் பேரினவாதத்தின் இந்த சதிச் செயலை சுட்டிக்காட்டி இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலைதான் என்று 'ஆவணப்படுத்தி' தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் சிங்களத்துக்கு ஆதரவாக இந்தியப் பேரரசு செயல்பட்டிருப்பது மன்னிக்க முடியாத துரோகமாகும்.

மேலும் இலங்கையின் புதிய அரசு சில வாக்குறுதிகள் கொடுத்ததாம்; அதனால் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யாமல் ஒத்திவைத்திருக்கிறோம் என்று ஐ.நா. விசாரணைக் குழு தெரிவித்திருப்பது ஏற்க முடியாத ஒன்றாகும். 2009ஆம் ஆண்டு இனப்படுகொலையை நிகழ்த்திய காலம் முதல் இதுவரை இலங்கையில் போர்க்குற்றவாளிகளே ஆட்சியில் இருந்து வந்துள்ளனர்.. இன்று நீதிமானாக பேசுகிற சர்வதேசத்துக்கு வாக்குறுதி தருகிற மைத்ரிபால சிறிசேனவும்தான் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்; இவரை ஆதரிக்கும் சரத்பொன்சேகாதான் அன்றைய ராணுவ தளபதி..

இனப்படுகொலை செய்த கொலைகாரர்களே நீதி வழங்குவார்கள் என்று சொல்வது விந்தையாக இருக்கிறது.. உலகம் முழுவதும் நடைபெறுகிற போர்க்குற்றங்களை மனித உரிமை மீறல்களை விசாரணை நடத்த குழுவை அனுப்புகிற ஐ.நா. மன்றம், தம்மை உதாசீனப்படுத்துகிற இலங்கையை நம்புகிறோம் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கையாக இருந்து வருவது சர்வதேசமும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும்தான்.. தற்போது தமிழினத்துக்கான நீதியை இவர்களே மறுப்பது எந்த வகையிலும் நியாயமானதும் ஏற்புடையதும் இல்லை.

ஆகையால் உலகத் தமிழினத்தின் வேண்டுகோள்களை ஏற்று வரும் மார்ச் மாதம் திட்டமிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

பரங்கிப்பேட்டை ஒன்றிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பரங்கிப்பேட்டை ஒன்றிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பு.முட்லூரில் நடந்தது.

ஒன்றிய செயலாளர் கோபு தலைமை தாங்கினார். தலைவர் செல்வகணபதி, தலைமைக் கழக பேச்சாளர் தனபால் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலர் கனல் உ.கண்ணன், மாவட்ட செயலாளர் முடிவண்ணன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், கவுன்சிலர் ரமேஷ் பேசினர். நிர்வாகிகள் வீர பாண்டியன், தாமரைச் செல்வன், ரத்தினவேல், குழந்தைவேல், சுதாகர், கோபிநாதன், காமராஜ், செந்தில்குமார், நாகலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். உமா மகேஸ்வரன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. கரிக்குப்பத்தில் உள்ள தனியார் அனல்மின் நிலையத்தில் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி வரும் 24ம் தேதி கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமையில் நடக்கும் முற்றுகைப் போராட்டத்தில் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் இருந்த 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பது.

2. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில்புதிய உறுப்பினர் சேர்ப்பது.

3. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் கட்சிக் கொடி ஏற்றுவது

உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

நாகர்கோவில் நகரில் பாதாளச் சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்காவிட்டால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் - தமிழக வாழ்வுரிமை கட்சியின் குமரி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

தமிழக வாழ்வுரிமை கட்சியின் குமரி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் சோ. சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.பி. ராஜன், இளைஞரணித் தலைவர் ராஜா சுப்பையா, இளைஞரணிச் செயலாளர் சந்தோஷ், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் அகமது நயீம், மாவட்ட துணை துணைத் தலைவர்கள் செந்தில், கண்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. நாகர்கோவில் நகரில் பாதாளச் சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்காவிட்டால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

2. பெட்ரோல் விலையை உயர்த்தியதற்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது,

3. உறுப்பினர் சேர்க்கைக்காக குமரி மாவட்டத்திற்கு மார்ச் 8 ஆம் தேதி வரும் மாநில பொதுச் செயலாளர் வை. காவேரி, மாநில அமைப்புச் செயலாளர் மே.ப. காமராஜ், மாநில இணை பொதுச் செயலாளர் எம்.எஸ். சண்முகத்திற்கு வரவேற்பு அளிப்பது

உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று (16.02.2015) நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணை அமைப்பாளர் ஹசிப்கான், மாவட்ட பொருளாளர் வசந்தம்சுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் உதயகுமார், கரூர் நகரச் செயலாளர் வில்லியம்ஸ், மாவட்ட செய்தி தொடர்பாளர் தங்கவேல், கரூர் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, தொண்டர் அணி அமைப்பாளர் கண்ணையன், பரமத்தி ஒன்றிய மகளிரணி தலைவர் மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. கரூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஊழியர்களின் கவனக்குறைவால் ஏற்படும் குழந்தைகள் மற்றும் பெண்களின் தொடர் மரணத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளிப்பது.

2. கரூர் மாவட்ட ஆறுகளில் அரசு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதும், பாதுகாப்பற்ற முறையில் வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதையும் கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது.

3. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை மற்றும் மாவட்டம் முழுதும் அனைத்து பகுதிகளிலும் கொடிகள் ஏற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

முசிறியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

திங்கள், 16 பிப்ரவரி, 2015

முசிறியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்திற்கு மாநில துணை பொது செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் வரவேற்றார். முசிறி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.

ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


1. முசிறி பேரூராட்சிக்குட்பட்ட மக்களுக்கு நாள்தோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.

2. முசிறியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

3. முசிறி கைகாட்டியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி போக்குவரத்து விதிமீறல் மற்றும் சட்டம் ஒழுங்கை மீறுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Read more...

தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க சிறிசேனவுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் அவர்கள் கோரிக்கை

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க சிறிசேனவுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும்! ஐ.நா. தீர்மானத்தை ஒத்திவைக்கும் சிங்களத்தின் முயற்சிக்கு துணை போகக் கூடாது!!
 
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் அவர்கள் இன்று (15.02.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தருகிறார். சிறிசேனவின் இந்த பயணத்தின் நோக்கமே ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான எந்த ஒரு போர்க்குற்ற விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யாமல் ஒத்திப்போட வைப்பதற்கு இந்தியாவின் ஆதரவைத் திரட்டுவதுதான் என்று கூறப்படுகிறது.

இலங்கையில் ஈழத் தமிழர்களின் வாக்குகளால் மட்டுமே வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனவும் அவரது அரசும் அதிகாரத்தில் அமர்ந்ததும் தமது வழக்கமான சிங்களப் பேரினவாத புத்தியை வெளிப்படுத்தி வருகின்றன. தமிழீழத் தாயகத்தில் இருந்து சிங்கள ராணுவத்தை விலக்க மறுத்த சிறிசேன அரசு தற்போது கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஒத்திவைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சிங்களப் பேரினவாத அரசின் இந்த கபடவேடத்தை உணர்ந்ததாலேயே தமிழீழத்தின் வடக்கு மாகாண சபையில் 'இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே' என்றும் இதற்கு சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. வடக்கு மாகாண சபையின் இந்த தீர்மானத்தால் சிங்களப் பேரினவாதம் நடுநடுங்கிப் போய் அலறிக் கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில்தான் சிறிசேனா இன்று இந்தியாவுக்கு வந்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஒத்தி வைப்பதற்கு இந்தியாவின் ஆதரவைக் கோர இருக்கிறார். சிங்களத்தின் இந்த கபடநாடகத்துக்கு இந்திய மத்திய அரசு துணை போய்விடக் கூடாது என்பதே தாய் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாகும்.

இலங்கைத் தமிழர்கள் மீது கரிசனையோடு இருப்பதாக கூறும் இந்தியப் பேரரசு, ஈழத்தில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என்ற வடக்கு மாகாண சபையின் ஒருமித்த நீதி கோருகிற தீர்மானத்தை முழுமையாக ஏற்று சிங்கள அதிபர் சிறிசேனா முன்வைக்கிற கோரிக்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும். அத்துடன் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கு சிங்களப் பேரினவாத அரசு ஒத்துழைத்தாக வேண்டும் என்ற நெருக்கடியையும் அழுத்தத்தையும் சிறிசேனாவுக்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தேவையில்லை; உள்நாட்டு விசாரணையே போதுமானது என்ற கொள்கையோடு சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோருவதற்காக இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சரமரவீரா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாகத்தான் சிறிசேனவும் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி சர்வதேசம் தடை செய்த பயங்கர ஆயுதங்களைக் கொண்டு அழித்த கொடுங்கோலன் ராஜபக்சே உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளான தங்களது சிங்களப் பங்காளிகளை காப்பாற்றுவதற்கு பகீரத பிரயத்தனம் செய்கிறது சிறிசேன அரசு. தமிழீழத் தமிழர்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட காரணத்தினால்தான் இதுவரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவும் தெரிவித்திருந்தன.

இந்த நிலைப்பாட்டில் இருந்து இந்தியா மாறிவிடக் கூடாது என்று வேண்டுகிறோம். தங்களுடைய சுய பிராந்திய நலன்களுக்காக சர்வதேச நாடுகள் சிங்களப் பேரினவாதத்தின் இந்த நரித்தனத்துக்கு உடந்தையாகிப் போனால், இலங்கைப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச கூண்டிலே நிறுத்த வகை செய்கிற நடவடிக்கைகளை கைவிட்டு இதற்கான விசாரணையை கொலைகாரர்கள் கையிலேயே கொடுத்தால் முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொன்று அழிக்கப்பட்ட எங்களது ஒன்றை லட்சம் தமிழர் படுகொலைக்கான நீதியை நாங்கள் எங்கே பெறுவது? என்பதுதான் உலகம் முழுவதும் இருக்கிற தமிழினத்தின் ஒற்றை கேள்வியாகும்.

மேலும் இதுவரை ஈழத் தமிழர்கள் மீது நீங்கள் காட்டிய கரிசனையும் அக்கறையும் பொய்யானதுதானா? எங்களுக்கான நீதியை எங்கே போய் கேட்பது? எங்களுக்கான நீதியை எங்களுக்கான வழியில்தான் பெற வேண்டும் என்கிற நிலையை உருவாக்கத்தான் இந்த சர்வதேச சமூகம் விரும்புகிறதா? என்ற கேள்வியையும் தமிழினம் முன்வைக்கிறது.

ஆகையால் இந்தியாவுக்கு வருகை தரும் சிறிசேனாவிடம் தமிழீழ வடக்கு மாகாண சபை தீர்மானத்தை ஏற்று சர்வதேச விசாரணையை எதிர்கொள்ளுங்கள் என்று இந்தியப் பேரரசு வலியுறுத்த வேண்டும். நாங்கள் மாற்றத்தை கொண்டு வருகிறோம் என்ற முழக்கத்துடன் ஆட்சியில் அமர்ந்த மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் இதைச் செய்ய வேண்டும் என்று இந்தியாவின் அங்கமாக இருக்கிற தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக் குழுவையும் இந்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழினத்தின் இத்தகைய எதிர்ப்பார்ப்புகளையும் வேண்டுகோளையும் புறந்தள்ளி கடந்த கால காங்கிரஸ் அரசைப் போல மீண்டும் மீண்டும் சிங்களத்தின் சதிகளுக்கு இந்தியப் பேரரசு உடந்தையாக இருந்தால் மகிந்த ராஜபக்சே, சிறிசேனாக்களை விட எங்களது இந்தியப் பேரரசைத்தான் தமிழகம் மிகக் கடுமையாக எதிர்க்கும். தமிழ்நாட்டின் மிகக் கடுமையான போராட்டங்களைத்தான் இந்திய அரசு எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வத்தலகுண்டில் 11.02.2015 அன்று நடைபெற்றது

வியாழன், 12 பிப்ரவரி, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வத்தலகுண்டில் 11.02.2015 அன்று நடைபெற்றது. 





Read more...

இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே,வட மாகாணசபையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றம், இந்திய மத்திய அரசு சர்வதேச விசாரணைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை

இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே ! வட மாகாணசபையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம்! இந்திய மத்திய அரசே! சர்வதேச விசாரணைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் அவர்கள் இன்று (12.02.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்றது "இனப்படுகொலை"யே என்பதை பிரகடனப்படுத்துகிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமத்தை தமிழீழத்தின் வடக்கு மாகாணசபை செவ்வாய்க்கிழமையன்று ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

இந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்த தீர்மானம் வலியுறுத்தியிருக்கிறது. அதுவும் வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தில் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கை விரிவாக விவரிக்கப்பட்டும் இருக்கிறது.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் கைவிடப்படும் நிலை உள்ளதாகவும் இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரவன் அவர்கள் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.

8 கோடித் தமிழர் வாழும் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இதேபோல் 2013ஆம் ஆண்டே "இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்; இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்; தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்; ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது ஈழத் தமிழரின் தமிழீழத் தாயகப் பிரதேசங்களில் ஒன்றாக வடக்கு மாகாண சபையும் இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை; ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இனப்படுகொலை தொடர்பான விசாரணையை நடத்த சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்துக்கு உத்தரவிடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழீழத் தமிழரின் வரலாற்றுத் துயரம் தோய்ந்த நீதிகோரும் இந்தப் பிரகடனத்தை இந்திய மத்திய அரசு உதாசீனப்படுத்தக் கூடாது.

தமிழ்நாட்டு சட்டமன்றமும், தமிழீழத்தின் வடக்கு மாகாண சபையும் நிறைவேற்றியுள்ள தீர்மானங்களை இனியேனும் இந்திய மத்திய அரசு ஏற்று "சிங்களத்தின்" சதிவலையில் சிக்காது தமிழினத்துக்கான நீதி கிடைக்க சர்வதேச விசாரணைக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

முதல் கட்டமாக சிங்கள பேரினவாத அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவை உடனடியாக இந்தியாவுக்குள் அனுமதி அளிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

மொழிஞாயிறு பாவாணர் பிறந்தநாள் விழா மற்றும் "பழந்தமிழரசும் மரபும்" நூல் வெளியிட்டு விழா - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015



 
மொழிஞாயிறு பாவாணர் பிறந்தநாள் விழா மற்றும் பழந்தமிழரசும் மரபும் நூல் வெளியிட்டு விழா பிரக்கடையான்பட்டியில் 07.02.2014 அன்று நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், சுப.உதயகுமாரன், புதுக்கோட்டை பாவாணன், அரிமாவளவன், செந்தில் மள்ளர், ஒரிசா பாலு  , தன்மாணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 



Read more...

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் திருமதி எஸ்.வளர்மதியைஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வாக்கு சேகரிப்பு

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

 ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் திருமதி எஸ்.வளர்மதியை ஆதரித்து 05.02.2015 அன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வாக்கு சேகரித்தார். 







Read more...

நெய்வாசல் வெள்ளாற்றில் செயல்பட்டு வரும் மணல் குவாரிக்கு எதிப்புத் தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வியாழக்கிழமை (05.02.2015) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், நெய்வாசல் வெள்ளாற்றில் பொதுமக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்குத் தேவையான நிலத்தடி நீர் மட்டத்தை குறைக்கும் வகையில் மணல் அள்ளப்படும் மணல் குவாரியை கண்டித்து ஆவினங்குடி பேருந்து நிறுத்தத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் சின்னதுரை தலைமை வகித்தார். மங்களூர் ஒன்றியச் செயலர் ரெங்க.சுரேந்தர், நகரச் செயலர் மருத.சீனிவாசன், நகரத் தலைவர் உ.முருகன், நல்லூர் ஒன்றியச் (கிழக்கு) செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச்செயலர் கனல்.கண்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார். நிறைவில் மாநில மாணவர் அணித் தலைவர் ரவிபிரகாஷ் நன்றி கூறினார்.

Read more...

ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதி.மு.க. வேட்பாளர் திருமதி.வளர்மதியை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் இன்று (05.02.2015) பிரசாரம்

வியாழன், 5 பிப்ரவரி, 2015

ஸ்ரீரங்கம் சட்டசபை இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் இன்று பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்தது முதல் இதுவரை தமிழர் நலன், தமிழக வாழ்வுரிமைகள் மீட்பில் வெற்றி கண்டுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான திட்டவட்டமான தெளிவான நிலைப்பாட்டை பின்பற்றி வருகிறது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது; பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அணை கட்டுவதைத் தடுத்தது; முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் போராடி வென்றது;

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு; கச்சத்தீவை மீட்பதற்கான சட்டப் போராட்டம்; தமிழக மீனவர்கள் விடுதலைக்கான தொடர்ச்சியான போராட்டங்கள்; மேற்கு மாவட்ட விவசாய விளைநிலங்களைப் பாழாக்கும் கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை முடக்கியது ஆகிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உயிர்மூச்சான கொள்கைகளை நிறைவேற்றியது தமிழகத்தில் ஆளும் அண்ணா தி.மு.க. அரசுதான்.

அதேபோல் தமிழீழ இனப் படுகொலையை நிகழ்த்திய கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக தண்டிக்க வேண்டும்; தமிழீழ மக்களின் அரசியல் விருப்பங்களை அறிய ஐ.நா. அவையத்தின் முன்னிலையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்; தமிழினப் படுகொலையை நிகழ்த்திய இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றி அதைத் தொடர்ந்தும் கடைபிடித்து வருகிறது அண்ணா தி.மு.க. அரசு.

அத்துடன் தமிழ்நாட்டுக்குள் விளையாட்டு போட்டிகள் என்ற பெயரில் சிங்களர் எவரும் நுழைய முடியாத கடுமையான நிலைப்பாட்டை அண்ணா தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது. இலங்கைக்கு சென்ற தமிழ்நாட்டு கபடி வீரரர்களைத் திருப்பி அழைத்ததுடன் அப்படி அனுப்பி வைத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்ததும் அண்ணா தி.மு.க. அரசுதான்.

அண்மையில்கூட இலங்கையில் புதிய அரசு அமைந்த நிலையில் தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழரை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்திய- இலங்கை அரசுகள் தீவிரம்காட்டி வருகின்றன. ஆனால் இலங்கையில் தமிழீழப் பகுதியில் ராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கிறது; இயல்பு நிலைமை திரும்பவில்லை என்பது உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு மிகக் கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்தது அண்ணா தி.மு.க. அரசு. அத்துடன் டெல்லியில் இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்து அதன்படியே ஆளும் அண்ணா தி.மு.க. அரசு நடந்து கொண்டதுடன் தமிழீழப் பகுதியில் சிங்கள ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து தமது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாகவும் இருந்து வருகிறது.

இப்படி தமிழ்நாட்டுக்குரிய வாழ்வுரிமைகளை மீட்டெடுப்பதிலும் ஈழத் தமிழருக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாட்டையும் ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசாங்கம் மேற்கொண்டதால் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வளர்மதியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரிக்கிறது.

ஸ்ரீரங்கம் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் இன்று ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP