ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை
வியாழன், 19 பிப்ரவரி, 2015
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று (19.02.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:
ஐ.நா. மனித உரிமைகள் அவையத்தில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை மார்ச் மாதம் வெளியிடுக!
இந்திய மத்திய அரசே! சிங்களத்தின் நரித்தனத்துக்கு உடைந்தையாக செயல்படாதே!!
தமிழீழத் தாயகத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த சிங்களப் பேரினவாத இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை 6 மாத காலத்துக்கு ஒத்திவைக்க ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக் குழு முடிவு செய்துள்ள உலகத் தமிழர்களை கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் மார்ச் 25-ந் தேதியன்று இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருந்தது. இனப்படுகொலைக்கு உள்ளாகி இருக்கும் தமிழினத்துக்கு இந்த அறிக்கை ஒரு ஆறுதலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது இந்த அறிக்கை 6 மாத காலத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது துயரத்தைத் தருகிறது.
இலங்கையில் தமிழர்களின் வாக்குகளால் அதிபராக வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேன, தாம் அதிகார நாற்காலியில் அமர்ந்த உடன் வழக்கமான சிங்கள நரித்தனத்தை வெளிப்படுத்த தொடங்கினார். இதன் உச்சமாக கொடுங்கோலன் ராஜபக்சே உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வகையில் உள்நாட்டிலேயே நாங்கள் விசாரணை நடத்தப் போகிறோம் என்று சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மங்களசமரவீர அனுப்பி வைக்கப்பட்டார்.
மைத்ரிபால சிறிசேனவும் இதே கோரிக்கையுடன் இந்தியா வந்துவிட்டு திரும்பியிருக்கிறார். தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் இதை கிஞ்சித்தும் மதிக்காமல் இந்திய மத்திய அரசு, அணு உலை ஒப்பந்தம் உட்பட இலங்கையின் பொருளாதார நலனுக்காக ஒப்பந்தங்களைப் போட்டிருப்பது தமிழகத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாக அங்கீகரிக்கவில்லை என்பதையே வெளிப்படுத்தியுள்ளது.
அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை குழு அறிக்கையை ஒத்தி வைக்கும் மைத்ரிபால சிறிசேனவின் குள்ளநரித்தனத்தை அறிந்தும் அதைக் கண்டிக்காமல் கள்ளத்தனமாக மவுனமாக இருந்து இந்தியா ஆதரவும் தெரிவித்திருப்பது பச்சைத் தமிழினத் துரோகம்.
அதுவும் தமிழீழத்தின் வடக்கு மாகாண சபையில், சிங்களப் பேரினவாதத்தின் இந்த சதிச் செயலை சுட்டிக்காட்டி இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலைதான் என்று 'ஆவணப்படுத்தி' தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் சிங்களத்துக்கு ஆதரவாக இந்தியப் பேரரசு செயல்பட்டிருப்பது மன்னிக்க முடியாத துரோகமாகும்.
மேலும் இலங்கையின் புதிய அரசு சில வாக்குறுதிகள் கொடுத்ததாம்; அதனால் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யாமல் ஒத்திவைத்திருக்கிறோம் என்று ஐ.நா. விசாரணைக் குழு தெரிவித்திருப்பது ஏற்க முடியாத ஒன்றாகும். 2009ஆம் ஆண்டு இனப்படுகொலையை நிகழ்த்திய காலம் முதல் இதுவரை இலங்கையில் போர்க்குற்றவாளிகளே ஆட்சியில் இருந்து வந்துள்ளனர்.. இன்று நீதிமானாக பேசுகிற சர்வதேசத்துக்கு வாக்குறுதி தருகிற மைத்ரிபால சிறிசேனவும்தான் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்; இவரை ஆதரிக்கும் சரத்பொன்சேகாதான் அன்றைய ராணுவ தளபதி..
இனப்படுகொலை செய்த கொலைகாரர்களே நீதி வழங்குவார்கள் என்று சொல்வது விந்தையாக இருக்கிறது.. உலகம் முழுவதும் நடைபெறுகிற போர்க்குற்றங்களை மனித உரிமை மீறல்களை விசாரணை நடத்த குழுவை அனுப்புகிற ஐ.நா. மன்றம், தம்மை உதாசீனப்படுத்துகிற இலங்கையை நம்புகிறோம் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கையாக இருந்து வருவது சர்வதேசமும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும்தான்.. தற்போது தமிழினத்துக்கான நீதியை இவர்களே மறுப்பது எந்த வகையிலும் நியாயமானதும் ஏற்புடையதும் இல்லை.
ஆகையால் உலகத் தமிழினத்தின் வேண்டுகோள்களை ஏற்று வரும் மார்ச் மாதம் திட்டமிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக