சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை
சனி, 21 பிப்ரவரி, 2015
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று (21.02.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:
வழக்கறிஞர்களின் சமூக நீதிப் போராட்டம் வெல்லட்டும்!!
தமிழ்நாட்டின் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தை முன்வைத்து வழக்கறிஞர்கள் நடத்துகிற 'சமூக நீதி'க்கான போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 60 நீதிபதிகளில் 18 நீதிபதி இடங்கள் காலியாக இருக்கிறது. காலியாக உள்ள 18 நீதிபதிகளை நியமிப்பது என்பது ஒரே நேரத்திலும் அனைத்து ஜாதி, மத, பாலின பிரிவினருக்குமானதாகவும் குறிப்பாக இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் பெண்களுக்கும் முன்னுரிமை கொடுத்து நிரப்பப்படுவதுமாக இருப்பதுதான் ஜனநாயகத் தன்மை கொண்டதும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டதுமாகும்.
இதுதான் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் முதன்மையான நியாயமான நீதியுமான எதிர்பார்ப்பும் கோரிக்கையுமாகும். இது தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் கேட்ட போது, ஏற்கெனவே 9 நீதிபதிகள் பட்டியலை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும் எஞ்சிய 9 பேரை நீங்கள் சொல்கிற அடிப்படையில் நியமிக்கிறேன் என்றும் கூறியிருப்பது இந்த மண்ணின் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத மேலாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகும்.
நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறவர்கள் யார்? எந்த சமூகத்தினருக்கு முன்னுரிமை என்பதை அறியமுடியாத வெளிப்படைத்தன்மையற்ற முறைதான் இதற்கு காரணம்.. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மிகக் குறைந்த விழுக்காட்டினரே இருக்கக் கூடிய ஒரு சமூகமே பெரும்பான்மை இடங்களை அபகரித்துக் கொள்கிற 'கபளீகரம்' செய்து கொள்கிற "நூற்றாண்டுகால போக்கு" இப்போதும் நீடிக்கிறது..
சமூக நீதியின் தாய் மண்ணாகிய தமிழ்நாடு இதை பொறுத்துக் கொண்டிருக்காது என்பதை வெளிப்படுத்துவதுதான் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்.. இந்த நீதித்துறையில் சமூக நீதிக்கான போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரிப்பதுடன் வழக்கறிஞர் சமூகத்துக்கு பக்க பலமாக என்றென்றும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வழக்கறிஞர்களின் முதன்மை கோரிக்கைகளான, நீதிபதிகள் பதவிகளுக்கான பரிந்துரை அனைத்தையும் ஒரே பட்டியலாக அனுப்ப வேண்டும்; இதுவரை பிரதிநிதித்துவப்படாத சாதியினருக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்; காலி பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு பெண் வழக்கறிஞர்களுக்கு ஒதுக்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு பிறமாநிலத்தைச் சேர்ந்தோரை பரிசீலிக்கக் கூடாது; மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றவும் வென்றெடுக்கவும் ஒடுக்கப்பட்ட அனைத்து சமூகத்தினரும் பிரிவினரும் ஜாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து ஒருங்கிணைந்து சமூக நீதிக்கான போராளிகளாகப் போராடுவோம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறைகூவல் விடுக்கிறது.
பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக