கடலூர் மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை
வெள்ளி, 28 செப்டம்பர், 2012
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பயங்கரமாக சுழன்றடித்த சூறாவளியாலும் கனமழையாலும் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகள் அடியோடு வீழ்ந்து நாசமாகிப் போய்விட்டன. சுனாமியாலும் அடுத்து வந்த தானே புயலாலும் பேரழிவை சந்தித்த கடலூர் மாவட்டத்தின் பலா, முந்திரி, மா, வாழை, தென்னை விவசாயிகள் தங்களது எதிர்காலமே இருண்டுபோன நிலையில் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டிருந்தது.
இந்நிலையில் வீட்டுப் பொருட்கள் அனைத்தையும் அடகு வைத்தும் அதிக வட்டிக்குப் பணம் திரட்டியும் வாழை சாகுபடியில் ஈடுபட்டு எதிர்காலத்தை மீட்டெடுக்கலாம் என காத்திருந்தனர். 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ1.5 லட்சம் செலவிட்டு சாகுபடி செய்த வாழை மரங்கள் அடுத்த 15 அல்லது 20 நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருந்தன. ஆனால் பெரும் சூறாவளியில் குலைதள்ளிய வாழைகள் ஒரு ரூபாய்க்குக் கூட பயனில்லாமல் அடியோடு நாசமாகிப் போய் விவசாயிகளின் தலையில் பேரிடி விழுந்திருக்கிறது. இனியும் அழிவுகளைத் தாங்காது தற்கொலை செய்து கொள்ளும் நிலையில்தான் கடலூர் மாவட்ட விவசாயிகள் உள்ளனர். எதிர்காலத்தைத் தொலைத்து நிற்கும் கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு சற்றேனும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ50 ஆயிரமாவது உடனடியாக தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சூறாவளி சரித்துப் போட்ட வாழைகளை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் வாழை சாகுபடியை மீண்டும் தொடங்கவும் வேளாண் துறை மூலமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழக அரசை வேண்டுகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்படும் கடலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பார்வையிட்டு அவற்றைப் பாதுகாக்கவும் உரிய நிவாரணம் வழங்கவும் வேளாண்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை உடனே அனுப்பி வைக்கவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக