காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கக் கோரி அக்டோபர் 15ல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
வெள்ளி, 11 அக்டோபர், 2013
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கடலூரில் இன்று (11.10.2013) அளித்த பேட்டி:
காமன்வெல்த் கூட்டமைப்பு உருவான போது ஆண், பெண் ரீதியாகவும், இனம், மொழி, மத ரீதியாகவும் சொந்த நாட்டு மக்களை வேறுபடுத்தி பார்க்கும் நாட்டை அந்த கூட்டமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என விதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இலங்கையை ஆளும் சிங்கள அரசு லட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்துள்ளது. விதிகளுக்கு முரணாக மத இன ரீதியாக வேறுபடுத்தி சித்தரவதை செய்து கொலை செய்தது. எனவே இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
இலங்கை அரசு மனித உரிமைகளை மீறி மத வழிபாட்டு தலங்கள், கட்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மீது குண்டு வீசி தாக்கியுள்ளது. இதுபோன்ற மீறல்களுக்காக தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற பல நாடுகள் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. எனவே அதிக அளவில் மனித உரிமைகளை மீறிய இலங்கையை காமன் வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட வேண்டும்.
இதனை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 15–ந்தேதி மாலை 3 மணி அளவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை திரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழின உணர்வாளர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுகொள்கின்றேன்.
பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் தாண்டவராயன், பஞ்சமூர்த்தி, ஆனந்த், அருள்பாபு, பிரசன்னா உள்பட பலர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக