Blogger இயக்குவது.

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைக்க ரஷ்யாவுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்

சனி, 13 டிசம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 13.12.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:
கூடங்குளத்தை மனிதப் புதைகுழிகளாக்க சதி!

மேலும் 2 அணு உலைகள் அமைப்பதா? மத்திய மோடி அரசுக்கு கடும் கண்டனம்!

தமிழ்நாட்டு மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைக்க ரஷ்யாவுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதற்கு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஷ்யா நாட்டு அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமையன்று டெல்லியில் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களில் கூடங்குளத்தில் 3 மற்றும் 4வது அணு உலைகளை அமைப்பது தொடர்பானதும் ஒன்று.

தமிழ்நாட்டு மக்கள் கடந்த பல ஆண்டுகாலமாக கூடங்குளத்தில் அணு உலையே அமைக்கக் கூடாது; எங்களது வாழ்வாதாரமும் சந்ததியும் பூண்டோடு இல்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

வேறு எந்த ஒரு தேசத்திலுமே நடத்தாத மக்கள் திரள் பெரும் போராட்டத்தை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் நடத்தி வருகின்றனர். ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறையும் தீரமுடன் எதிர்கொண்டு இன்னுயிரை ஈந்தும் இந்தப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்ட களத்தில் அந்தோணி ஜான், ராஜசேகர், ரோசலின், சகாயம் ஆகியோர் களப்பலியாகி இருக்கின்றனர். நாட்டின் விடுதலைப் போராட்டக் காலம் போல பல்லாயிரக்கணக்கானோர் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடரப்பட்டு ஒரு அசாதாரண் சூழ்நிலையிலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

கூடங்குளத்தில் இயங்குவதாக சொல்லப்படுகிற முதலாவது அணு உலையே முடங்கிக் கிடக்கிறது. இன்னமும் துளி மின்சாரமும் தயாரிக்கப்படாமல் ஏதோ அப்பாவி மக்களை எலிகளாக நினைத்து ஒரு சோதனைக் கூடம் போலத்தான் அதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகளையும் அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ள இந்திய பேரரசை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். அத்துடன் இந்தியா முழுவதும் 10 அணு உலைகளை நிறுவவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.

இந்திய மக்களின் உயிரோடும் வாழ்வாதாரத்தோடும் விளையாடுகிற மத்திய மோடி அரசே! இதுதான் நீங்கள் சொன்ன மாற்றத்துக்குரிய அரசா? இந்திய மண்ணில் எந்த ஒரு இடத்திலும் நாசகார அணு உலைகளை அமைப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையாக எதிர்க்கும்.

கூடங்குளத்தை மனிதப் புதைகுழியாக்க இந்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வரும் இத்தகைய அணு உலைகளை எதிர்த்து தொடர்ந்தும் போராடும் மக்களோடு தோளோடு தோள் நின்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடும் . இத்தகைய மனிதகுலத்தை நிர்மூலமாக்குகிற அணு உலைத் திட்டங்களை நம்புகிற மத்திய அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன் இவற்றை உடனே கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP