Blogger இயக்குவது.

மனித உரிமைப் போராளி நீதியரசர் வி.கிருஷ்ணய்யர் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இரங்கல் !

வியாழன், 4 டிசம்பர், 2014

மனித உரிமைப் போராளி நீதியரசர் வி. கிருஷ்ணய்யர்! மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் இரங்கல் !

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் இரங்கல் செய்தி:

மறைந்தாரே... மனித உரிமைப் போராளி நீதியரசர் வி. கிருஷ்ணய்யர்!

புகழ்பெற்ற மனித உரிமைப் பேராளர் நீதியரசர் வி. கிருஷ்ணய்யர் கேரளா மாநிலம் கொச்சியில் காலமானார் என்ற செய்தி மனித உரிமை ஆர்வலர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

வழக்கறிஞர், சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி, மனித உரிமைச் செயற்பாட்டாளர் எனப் பல பொறுப்புகளை வகித்தவர் நீதிபதி கிருஷ்ணய்யர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் சென்னை சட்டக் கல்லூரியிலும் தனது கல்வியை முடித்த கிருஷ்ணய்யர், இடதுசாரிகளுக்காக தொடர்ந்து வாதாடினார். நாடு விடுதலை அடைந்த போது கம்யூனிஸ்டு இயக்கம் தடை செய்யப்பட்ட போதும் கூட அவர்களுக்காக கிருஷ்ணய்யர் தொடர்ந்து வாதாடினார். இதனாலேயே பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கவும்பட்டார் கிருஷ்ணய்யர்.

1952 பொதுத் தேர்தலில் பரம்பா சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வென்று சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

மொழிவாரி மாநிலங்கள் உருவான பின்னர் கேரளாவின் தலைச்சேரி சட்டமன்றத் தொகுதியில் 1957-ல் போட்டியிட்டு வென்றார். 1957 முதல் 1959 வரை ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான கேரளாவின் முதலாவது கம்யூனிஸ்ட் அரசில் சட்டம், சிறை நிர்வாகம், உள்துறை, மின்சாரம், நீர்ப்பாசனம், சமூக நலத் துறை அமைச்சராக பதவிவகித்தார் கிருஷ்ணய்யர்.

1971-ல் மத்திய சட்ட கமிஷன் உறுப்பினராக, 1973-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் 7 ஆண்டுகாலம் பணிபுரிந்த போது வரலாற்றுச் சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி கிருஷ்ணய்யர்.

ஒடுக்கப்பட்ட சாமானிய மக்களின் நலனை அடிப்படையாக வைத்தே பல தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி கிருஷ்ணய்யர். மனித உயிர்களை சட்டப்பூர்வமாக பறிக்கும் கொடிய மரண தண்டனையை வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர் நீதிபதி கிருஷ்ணய்யர்.

ராஜிவ் வழக்கில் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்ட தமிழர்கள் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர். மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர் நீதிபதி கிருஷ்ணய்யர்.

மனித உரிமைப் போராளியாக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து 100 வயதைக் கடந்த நிலையில் உடல்நலக் குறைவால் நீதிபதி கிருஷ்ணய்யர் மறைந்தார் என்ற செய்தி மனித உரிமை ஆர்வலர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மக்களுக்காக உழைத்த மனித உரிமைப் போராளி கிருஷ்ணய்யரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினரும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP