முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம்!
ஞாயிறு, 21 டிசம்பர், 2014
முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு கண்டனம்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை மறைமலை நகரில் சனிக்கிழமையன்று (டிசம்பர் 20) நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசும்போது, முல்லைப் பெரியாறு அணை, மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு கண்டுவிட்டது என்றும் பாஜகவின் தலைமையகம் மீனவர்களின் சரணாலயமாக மாறிவிட்டது என்றும் உண்மைக்கு மாறாக அப்பட்டமாக பொய் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம்தான் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் 142 அடி நீரும் தேக்கப்பட்டது. இதில் பாரதிய ஜனதா தலைமையிலான மோடி அரசுக்கு ஒருதுளி பங்கும் கிடையாது.
தமிழ்நாட்டு அரசாங்கம் சட்டப் போராட்டத்தை நடத்தி நியாயத்தையும் தமிழரின் ஆற்று நீர் உரிமையையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அப்படிப் பெற்ற உரிமைக்கும் வேட்டு வைத்ததுதான் பாரதிய ஜனதாவின் மோடி அரசு.
முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை ஏற்று சுற்றுச் சூழல் குறித்து ஆராய அனுமதி கொடுத்த துரோகத்தைத்தான் பாரதிய ஜனதாவின் மோடி அரசு செய்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு பச்சைத் துரோகத்தை இழைத்துக் கொண்டிருக்கிறது பாஜக அரசு.
மீனவர் பிரச்சனைக்கு என்ன தீர்வு கண்டுவிட்டதாம் மோடி அரசு? இலங்கை சிறையில் இன்னமும் 66 மீனவர்கள் வாடுகின்றனர்.. மீனவர்களின் வாழ்வாதாரமான 88 படகுகள் இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் மீன்பிடி படகுகள் பிடித்து வைக்கப்படுவதற்கும் கூட பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமிதான் காரணம் அல்லவா? அந்த துரோகி சுப்பிரமணியன் சுவாமி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததை இந்த உலகமே கண்டு அதிர்ச்சி அடைந்ததே!
அவ்வளவு ஏன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுத்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வங்கதேசத்து கடற்படையாலும் இந்தியப் பெருங்கடலில் இங்கிலாந்து கடற்படையாலும் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்களே? இதுவரை பொன். ராதாகிருஷ்ணன் அமைச்சராக அங்கம் வகிக்கும் மோடி அரசு வாய்மூடி மவுனியாகத்தானே இருக்கிறது?
முல்லைப் பெரியாறு அணையில் துரோகம்.. மீனவர் பிரச்சனையில் வாய்மூடி கள்ள மவுனம்... இத்தோடு முடிந்ததா மோடி அரசின் பச்சை துரோகம்..
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான ஒழுங்குமுறை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமே வலியுறுத்தி வருகிறது.. 6 மாத கால மோடி அரசு இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லையே..
காவிரி ஆற்றின் குறுக்கே 4 புதிய தடுப்பணைகளைக் கட்டப் போவதாக கர்நாடகா கொக்கரிக்கிறதே.. குட்டி வைக்கக் கூட திராணியற்ற தமிழரை வஞ்சிக்கும் வஞ்சக அரசுதானே மோடி அரசு!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் பரப்புரையின் போது மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்போம் என்று கொடுத்த வாக்குறுதி என்னாயிற்று மாண்புமிகு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களே!
இப்படி துரோகத்தையும் வஞ்சகத்தையும் தொடர்ந்து இழைத்துவிட்டு அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டுவிட்டோம் என்று பேசினால் தமிழ்நாட்டு மக்கள் நம்பிவிடுவார்களா?
ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுடன் கொஞ்சி குலாவிய ஒற்றை காரணத்துக்காகவே தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி கருவறுக்கப்பட்டுவிட்டது.. அதே நிலைப்பாட்டைத்தான் ஈழத் தமிழர் பிரச்சனையிலும் பாரதிய ஜனதா தலைமையிலான மோடி அரசு கடைபிடித்து வருகிறது..
முந்தைய காங்கிரஸ் அரசைவிட மிகக் கொடுமையாக ராஜபக்சேவின் இந்திய பிரதிநிதியாக பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி செயல்பட்டுக் கொண்டிருப்பதை தமிழினம் நன்கறியும்.. நாள்தோறும் துரோகி சுப்பிரமணியன் சுவாமியும் அதையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான்.
ஆகையால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நேர்ந்த கதியை விட மிக மோசமான நிலைமையைத்தான் பாரதிய ஜனதா சந்திக்கும்.. இத்தகைய பிரசாரங்களைக் கைவிட்டுவிட்டு மத்திய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் நீங்கள் தமிழ்நாட்டு உரிமைகளை வஞ்சிக்க துணைபோகாமல் இருந்தால்போதும் இல்லையெனில் காலம் தக்க பாடம் புகட்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக