Blogger இயக்குவது.

தமிழக அரசு நிர்ணயித்த தொகையை முழுமையாக வழங்காமல் ரூ.500 கோடி பாக்கி வைத்திருக்கும் தனியார் சர்க்கரை ஆலைகள் முன்பு 23.12.2014 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம்

வியாழன், 18 டிசம்பர், 2014

தமிழக அரசு நிர்ணயித்த தொகையை முழுமையாக வழங்காமல் ரூ500 கோடி அளவுக்கு பாக்கி வைத்திருக்கும் தனியார் சர்க்கரை ஆலைகள் முன்பு டிசம்பர் 23-ந் தேதி முற்றுகைப் போராட்டம்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் இன்று 18.12.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள், தமிழக அரசு நிர்ணயித்த கொள்முதல் விலையை முழுமையாக விவசாயிகளுக்கு தராமல் ரூ500 கோடி அளவுக்கு பாக்கி வைத்துள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் கரும்புக்கான கொள்முதல் விலை மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் டன் ரூ.3,200, பஞ்சாபில் ரூ.3,020, அரியானாவில் ரூ.3,100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஆனால் தமிழகத்தில் 2013-14 ஆம் ஆண்டு ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ2,650 என்று மட்டும் தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இந்த முழு தொகையையும் கூட தனியார் சர்க்கரை ஆலைகள் இன்னமும் வழங்கவில்லை.

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ 2,650-ல் ரூ300ஐக் குறைத்து கரும்பு டன்னுக்கு ரூ 2,350தான் வழங்குகின்றன. இந்த வகையில் விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மட்டும் ரூ500 கோடி.

கரும்பு அனுப்பிய 15 நாட்களுக்குள் முழுப் பணத்தையும் தர வேண்டும் என்பது தமிழக அரசின் ஆணை. இப்படி ஒரு ஆணை இருந்தும் இதையும் மதிக்காமல் மாதக் கணக்கில் ஆண்டுக் கணக்கில் பணம் தராமல் இழுத்தடிப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.

இப்படி வஞ்சித்து சம்பாதிக்கும் பல்லாயிரம் கோடி ரூபாயை வேறு தொழில்நிறுவனங்களில் முதலீடு செய்து கொண்டு விவசாயிகளுக்குத் துரோகம் செய்கின்ற தனியார் சர்க்கரை ஆலை அதிபர்கள் அவர்களுக்கென்று கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு அரசையும் எதிர்க்கின்றனர்...விவசாயிகளுக்கும் துரோகம் செய்கின்றனர்.

அத்துடன் விவசாயிகளிடம் கொள்ளை அடிக்கும் இந்த தனியார் சர்க்கரை ஆலைகள் மத்திய அரசிடம் இருந்து ரூ 6ஆயிரம் கோடி அளவுக்கு வட்டியில்லா கடனைப் பெறுகின்றன. இந்த வட்டியில்லா கடன் என்பதே விவசாயிகளுக்கு நிலுவையில்லாமல் தொகை வழங்குவதற்காகத்தான். ஆனால் மத்திய அரசின் கடனையும் பெற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை தராமல் தனியார் சர்க்கரை ஆலைகள் வைத்திருப்பது சட்டவிரோதமாகும்.

விவசாயிகளிடம் கொள்ளையடித்தும், அரசு நிர்ணயித்த தொகையையில் குறிப்பிட்ட தொகையைத் தந்துவிட்டு நிலுவைத் தொகையை ஆண்டுக் கணக்கில் தராமல் இழுத்தடித்தும் விவசாயிகளை தனியார் சர்க்கரை ஆலைகள் வஞ்சிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

தனியார் சர்க்கரை ஆலைகள் உரிய காலத்தில் தமிழக அரசு அறிவித்த தொகையில் எஞ்சிய நிலுவைத் தொகையை தராததால் விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாமலும் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமலும் பெரும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர்.

தற்போதும் கூட 2014-15 அரவை பருவத்துக்கு முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டவில்லை. விவசாயிகள் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கி வரும், விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ500 கோடி அளவு பாக்கி வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம்.

எங்களது கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படவில்லை. இதனால் கரும்பு விவசாயிகளுக்கு 2013-14 ஆம் ஆண்டு வழங்க வேண்டிய தமிழக அரசு நிர்ணயித்த டன் ஒன்றுக்கு ரூ2,650 தொகையை முழுமையாக வழங்க வேண்டும்; 2014-15 ஆம் ஆண்டுக்கான விலையை டன் ஒன்றுக்கு ரூ 3,500 என்று அறிவிக்க வேண்டும்- இத்தொகையை தமிழக அரசு ஆணைப்படி 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு முழுமையாகத் தர வேண்டும்; ஆலைகளுக்கு வரும் வெளிக் கரும்புகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும்; கரும்பு வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும்; தனியார் சக்கரை ஆலைகளில் அரசே அரசின் மேற்பார்வையில் கரும்புகளின் எடை போடும் இயந்திரத்தை நிறுவ வேண்டும்- கரும்பு லோடு ஆலைக்கு வந்த உடன் எடை வைத்து அறவைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் சர்க்கரை ஆலைகள் முன்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் டிசம்பர் 23-ந் தேதியன்று மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போராட்டத்தில் அனைத்து விவசாய தொழிற்சங்கள், விவசாய பெருங்குடிமக்கள், தொழிலாளர் தோழர்கள், தமிழின உணர்வாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு நமக்கான உரிமையை வென்றெடுப்போம் என்றும் அன்புடன் அழைக்கிறேன்.
 
தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP