Blogger இயக்குவது.

ஒகேனக்கல் மீது கர்நாடகா உரிமை கோரினால் பெங்களூரை தமிழ்நாட்டோடு இணைக்க போராடுவோம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அறிவிப்பு

திங்கள், 8 டிசம்பர், 2014

ஒகேனக்கல் மீது கர்நாடகா உரிமை கோரினால் பெங்களூரை தமிழ்நாட்டோடு இணைக்க போராடுவோம்! என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: 


கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, தமிழ்நாட்டின் அங்கமான ஒகேனக்கல் மீது உரிமை கோரும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கடுமையான கண்டனத்துக்குரியது. 1952 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாடு இழந்த நிலப்பரப்புகள்தான் மிக அதிகம்.

ஒருகாலத்தில் சென்னை மாகாணம் என்பது திராவிடர் இனப் பழங்குடிகள் அதிகம் வாழும் ஒடிஷாவின் கோராபுட் மாநிலம் வரை இருந்தது என்பது வரலாறு. ஆனால் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட போது, தமிழகத்தின் பெரும் நிலப்பரப்பு ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல மாநிலங்களுக்கும் தாரைவார்க்கப்பட்ட பெருங்கொடுமை "இந்திய தேசியத்தின் பெயரால்" அரங்கேறியது. எங்களது ஒகேனக்கல் மீது உரிமை கோருகிற கர்நாடகாவின் தலைநகரம் பெங்களூரும் கூட தமிழ்நாட்டின் ஒரு அங்கம் என்ற கோரிக்கை இன்னமும் காலாவதியாகவில்லை என்பதை சித்தராமையாக்கள் மறந்துவிட்டு பேசக் கூடாது என்பதை நினைவுபடுத்துகிறேன்.

காவிரியில் தமிழகத்துக்கான நியாயமான சட்டப்பூர்வமான உரிமையை மதிக்க மறுத்து மேகேதாட்டுவில் பல்வேறு தடுப்பு அணைகளைக் கட்டுவோம் என்று எதேச்சதிகரமாக பேசி வருகிறது கர்நாடகா. இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டு அரசும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மேகேதாட்டு விவகாரத்தை திசைதிருப்பும் உள்நோக்கத்துடன் தமிழகத்தை மிரட்டி அச்சுறுத்தும் வகையில் ஒகேனக்கல் மீது உரிமை கோரும் வகையில் கர்நாடகா முதல்வர் பேசியிருப்பதை ஏற்க முடியாது. அது கடும் கண்டனத்துக்குரியது. இந்திய மத்திய அரசால் தமிழகம் காலங்காலமாக வஞ்சித்து வரும் சூழலில் அண்டை மாநிலமான தமிழகத்துக்கான சட்டப்பூர்வமான நியாயமான ஆற்று நீர் உரிமைகளை கர்நாடகா மதித்து நடக்க வேண்டுமே தவிர, இத்தகைய திசை திருப்பும் மிரட்டுகிற நடவடிக்கைகளை மேற்கொண்டால் தமிழ்நாட்டு மக்களும் எதிர்வினையாற்றுவார்கள்.

கர்நாடகாவின் கோலாரும் பெங்களூரும் தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்ற முழக்கமும் பெரும் போராட்டமாக வெடிக்கும். அதை எதிர்கொள்ள கர்நாடகாவும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒகேனக்கல் என்பது தமிழ்நாட்டின் ஒரு அங்கம். இது யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனையே கிடையாது. இதனால் கர்நாடகாவின் "ஒகேனக்கல் மறுவரையறை" கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவே கூடாது என்றும் இந்த விவகாரத்தில் தமிழக அரசும் உடனடியாக தலையிட்டு தக்க பதிலடியைத் தர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP